Monday, July 27, 2009

மீண்டும் ஒரு ரசவாதம்

ராஜன் நீங்கள் நினைப்பதை போல பணம் ...பணம் ...என அலைபவன் கிடையாது. ஏதோ சின்னவயதில் அவன் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டான் என்பதை தவிர அவனுக்கும் பண கஷ்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. போதை பழக்கம் மற்று சில கெட்ட விஷயங்களுக்கு அவனுக்கு அதிகமாகவே பணம் தேவைப்பட்டது. அவன் நண்பர்களுடன் உரையாடும் பொழுது ரசவாதம் செய்வதை பற்றி பேச்சுவந்தது. அனைத்து உலோகத்தையும் தங்கமாக மாற்றம் செய்யும் ரசவாதம் என்ற விஷயம் அவனுக்குள் புதிய ரத்தத்தை பாய்ச்சியது.

ரசவாதம் பற்றிய செய்திகளை சேகரிக்க துங்கினான். உணவு உறக்கம் அவனுக்கு இரண்டாம்பட்சம் ஆகியது. ரசவாதம் செய்வது அவனின் நோக்கம் அல்ல. ரசவாதம் செய்தால் கிடைக்கும் தங்கத்தை கொண்டு ஏழை எளியவர்களை காப்பாற்றலாம் அல்லவா?

நம்புங்கள் அது ஒன்று தான் அவன் நோக்கம். வேறு ஒன்றும் இல்லை.

இவ்வாறு ராஜன் ரசவாதத்திற்கு அலையும்பொழுது தான் ஸ்வாமி திரிலோகானந்தரை பற்றி கேள்விப்பட்டான். ஸ்வாமியின் ஆசிரமத்தில் ரசவாதம் நடப்பதாகவும், ஸ்வாமி ரசவாதம் தெரிந்தவர் என்றும் செய்தியை உறுதி செய்து கொண்டு அவரை சந்திக்க சென்றான்.

திரிலோகானந்தரின் ஆசரமம் முக்கிலி மலை உச்சியில் இருந்தது. முக்கிலி மலை சாதாரண மலை அல்ல. அதன் உச்சிக்கு செல்லுவதற்கு அதிக உடல் பலம் வேண்டும்.

வருடத்திற்கு ஒருமுறைமட்டுமே மலையிலிருந்து கீழே வந்து மக்களுக்கு தரிசனம் தருவார் ஸ்வாமி. அவரை அந்த நாளில் சந்தித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து சென்றான் ராஜன்.



அங்கே அவன் கண்ட காட்சி ஆச்சரியத்தை உண்டு செய்தது. பல்லாயிர கணக்கான மக்கள் அங்கு தரிசனத்திற்காக காத்திருந்தார்கள்.

இந்த ஜன கூட்டத்தில் ரசவாதம் பற்றி பேசமுடியுமா என ராஜனுக்கு சந்தேகம் வந்தது. ஸ்வாமி திரிலோகானந்தாவின் ஆசிரமத்தில் ஊடுருவி ரசவாதத்தை தெரிந்து கொள்ளலாம் என முடிவு செய்தான் ராஜன்.

ஸ்வாமி திரிலோகானந்தாவின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

“ஐயா என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுங்கள்”.

புன்னகைத்த திரிலோகானந்தர் அவனை மெல்ல எழுப்பி கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளுகிறேன். உனக்காகத்தான் காத்திருந்தேன்” என கூறி அவனை தன்னுடன் இருக்க அனுமதித்தார்.

தனது திட்டம் இவ்வளவு சுலபமாக செயல்படும் என ராஜன் நினைக்கவில்லை. தனது பழக்கங்களை விட்டுவிட்டு சிஷ்யனாக நடிக்கதுவங்கினான்.

முக்கிலி மலையில் ராஜனின் ஆசிரம வாசம் துவங்கியது. தினமும் நீர் மற்றும் உணவுகளை அடிவாரம் சென்று கொண்டுவருவது, ஆசிரம் தகவல்களை வெளியிடுவது என பரபரப்பான செயல்பட்டான் ராஜன். அவன் தனது வாழ்க்கையில் இப்படிபட்ட உடல் உழைப்பு கொண்ட வேலைகளை செய்ததில்லை.

சில மாதங்களிலேயே திரிலோகானந்தாவின் நெருக்கத்தொண்டன் ஆனான் ராஜன். அவனுக்கு ஆன்மீக தீட்சை வழங்கி தன்னருகில் இருக்குமாறு பணிந்தார் குரு.

ராஜன் ஸ்வாமி விஸ்வானந்தரானார்.

காலங்கள் கடந்தது ஸ்வாமி விஸ்வானந்தரின் ரசவாத ஆர்வம் மட்டும் குறையவில்லை. நொடிப்பொழுதும் குருவை விட்டு விலகாமல் இருந்தாலும் அவரின் செய்கையில் இருந்து ரசவாத குறிப்புகளை கண்டறியமுடியவில்லை.

காலங்கள் கடந்தது....

ஸ்வாமி திரிலோகானந்தர் தனது இறுதி காலத்தை எட்டினார்..

அவரின் படுக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தார் ஸ்வாமி விஸ்வானந்தர்.

தான் இங்கே வந்து பலவருடம் போராடி ரசவாதத்தை அறியமுடியவில்லை என்ற ஏக்கம் ஒருபுறம், இப்பொழுது கேட்டுவிட வேண்டும் இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்ற எண்ணமும் ஸ்வாமி விஸ்வானந்தரிடம் குடி கொண்டிருந்தது.

யாரும் அருகில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மெல்ல குருவின் பாதங்களை பற்றி நமஸ்கரித்தவாரே கேட்டான்...

“குருவே உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்”

“கேள் விஸ்வா ”

“உங்களிடம் நான் வந்த நோக்கம் தெரியுமா உங்களுக்கு”

“தெரியும். ரசவாதம் தானே”

ஸ்வாமி விஸ்வானந்தருக்கு அதிர்ச்சியாக இருந்தது. தெரிந்தா இவ்வளவு நாள் நம்மை அருகில் வைத்திருந்தார். தன்னை சுதரித்துக் கொண்டு..

“ஆம் குருவே. நீங்கள் எனக்கு அதை கற்றுக்கொடுப்பீர்களா”

“எனது அருமை விஸ்வா, ரசவாதம் செய்வது எளிது... பார் ராஜனாக இருந்த இரும்பு துண்டை விஸ்வானந்தா எனும் தங்கமாக மாற்றி இருக்கிறேனே? இது தானப்பா ரசவாதம்...!”

அவனை தீர்க்கமாக பார்த்து புன்னகைத்தவாறே அவரின் ப்ராணன் அவருள் அடங்கியது.
.
அவர் உடலிலிருந்து ஒளி வெளிப்பட்டு விஸ்வானந்தரின் உள்ளே சென்றது.

ஸ்வாமி விஸ்வானந்தாவுக்கு புரியதுவங்கியது.. இரும்பு துண்டுகளை எதிர்நோக்கி காத்திருந்தார்...

---------------------------ஓம்--------------------------------

குருவிடம் எதிர்பார்ப்புடன் செய்பவர்களின் சுயநலத்தை குரு பார்ப்பதில்லை. அந்த சுயநலத்தை எப்படி ஆன்மீக ஆற்றலாக மாற்றலாம் என்றே பார்க்கிறார்.

பொருள் தேடி இருளில் இருக்கும் உலகிற்கு எத்தனையோ குருமார்கள் ஒளி கொடுத்து இறை பெருவெளியில் நினைத்திருக்க செய்திருக்கிறார்கள்.

நீங்கள் நீங்களாக இருங்கள் குரு உங்களில் ரசவாதத்தை உண்டாக்குவார்..
முதல் ரசவாதத்தை படிக்க இங்கே சுட்டவும்.

Sunday, June 28, 2009

நீயா நானா?

“குருவே அத்வைத கருத்துக்களை எனக்கு புகட்டினீர்கள். அதைவிட மேலனாது எது இருக்க முடியும்?.உங்களை விட்டு தொலைவில் இருக்கும் இடத்தில் என்ன கற்றுக்கொள்ள முடியும்?”

தம்பூராவை நித்தமும் மீட்டுவது போன்ற ஓங்கார இசையால் அந்த சூழல் நிரம்பி இருந்தது. முனிவர்களுக்கு எல்லாம் முனிவர் என போற்றப்பட்ட ரிபு கண்கலங்கி நிற்கும் தனது மாணவன் நிதாங்கனை தீர்க்கமாக பார்த்தார்...

“நிதாங்கா நான் கூறுவதை கேள், நானும் நீயும் வேறல்ல. நான் எப்பொழுதும் இருக்கிறேன்.
நீ வாழ்வியல் அனுபவம் பெறவே உன்னை உனது ஊருக்கு திரும்ப சொல்லுகிறேன்.
கலக்கமடையாதே உன்னை வெகுவிரைவில் வந்தடைவேன்.”.

குருவின் சொல்லுக்கு கட்டுப்பட்ட நிதாங்கன் ஊருக்கு திரும்பி தனது இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டான்.

காலங்கள் சென்றது....


ஒரு நாள் சாலையில் நடந்துவந்து கொண்டிருந்தான் நிதாங்கன். மக்கள் கூட்டமாக கொண்டாட்டதுடன் வருவதை கண்டான். பெரிய மேள தாளத்துடன் மக்கள் நடனமாடி ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார்கள். ஊர்வலத்தின் கடைசியில் பட்டத்து யானையின் மேல் அரசன் அமர்ந்து ஒய்யாரமாக வந்துகொண்டிருந்தார்...

அரசனின் அழகையும் மக்களின் ஆர்ப்பரிப்பையும் ரசித்துக்கொண்டிருந்தான் நிதாங்கன்.

பின்னாலிருந்து ஒரு கை அவனை தோளை தொட்டது....

தனது ரசிக்கும் மனோபாவத்திலிருந்து கலைந்து திரும்பிப்பார்த்தான்.

அங்கே முகத்தில் சுருக்கத்துடன், அழுக்கடைந்த உடையும், கலைந்த கேசமுமாக ஒருவர் நின்றிருந்தார். ஏதோ கிராமத்திலிருந்து வரும் நபராக இருக்க வேண்டும்.

தனது உள்ளங்கையை புருவத்தின் மேலே வைத்து அரசனின் ஊர்வலத்தை பார்த்தவாரே கேட்டார்...
“தம்பீ.. அங்கே என்ன ஒரே கூட்டமா இருக்கு?”

அவரை பார்த்தவுடன் நிதாங்கனுக்கு ஏனோ ஒருவித ஈர்ப்பு ஏற்படவில்லை. கல்விஅறிவில்லாத நாட்டுபுரத்தானிடம் என்ன பேச என என்னினான்.

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி, பேச்சை வெட்டிவிட எண்ணினான்.

“அதுவா.. ராஜா யானையில் ஊர்வலமா போராரு...” என்றான் நிதாங்கன்.

“ஓஹோ..” என இழுத்தார் அந்த கிராமத்துக்காரர்.

“என்ன ஓஹோ? நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சுதா?”.. என கேட்டான் நிதாங்கன்.

” ராஜா ...யானை.... புரியுது தம்பி ஆனா அதில எது ராஜா எது யானை?”

“என்னய்யா அதுகூடவா தெரியல?.. மேல இருக்கிறது ராஜா, கீழ இருக்கிறது யானை”

குதுகூலத்துடன் படபடவென கைகளை தட்டிய கிராமத்தான்...

“எனக்கு இப்பதான் தம்பி புரிஞ்சுது...எது ராஜா எது யானைனு புரிஞ்சுது:”..

இப்படியும் ஒரு மனிதனா என நினைத்தவாறே வேறுபக்கம் திரும்பினான் நிதாங்கன்..

”தம்பி ஒரு சந்தேகம்..”

மீண்டும் அவர் அழைக்கவே பொறுமை இழந்து திரும்பி என்ன என்பதை போல பார்த்தான்..

“யானை, ராஜா எல்லாம் புரியுது தம்பி. மேல கீழனு சொன்னீங்களே அது என்ன?”

தன்னிடம் வம்பு செய்ய வந்திருக்கிறார் என நினைத்து தானும் அவரை கலாட்டா செய்ய நினைத்தான் நிதாங்கன்..

எதிர்பாராத தருணத்தில் திடீரென அவரின் முதுகில் ஏறி காலை தோள்பட்டையில் போட்டு குதிரை சவாரி செய்வதை போல அமர்ந்தான்.

“நீ என் கீழ இருக்க. உனக்கு மேல நான் இருக்கேன். இத்தான் மேல் கீழ். புரியுதா?”

“மேல் கீழ் புரிஞ்சுது தம்பி.... ஆனா..”

“என்னையா ஆனா?”.. அவரின் தோள்பட்டையிலிருந்து இறங்காமலேயே கேட்டான் நிதாங்கன்..

“நீ - நான் அப்படினு சொன்னீங்களே அப்படின்னா என்ன?”

“அ...ஹா... என்னது என்ன கேட்ட?”

“நீ நான் அப்படீனு பேசும்போது சொன்னீங்களே அப்படீனா என்ன? முதல்ல 'நான்' அப்படினா என்னனு சொல்லுங்க.. அப்பறம் நீ பத்தி சொல்லுங்க”

கேள்வியின் ஆழம் புரியாமல் சிந்திக்க துவங்கினான் நிதாங்கன்...

“நான் என்பது என்ன? நிதாங்கன் என்பதா.... இல்லை அது எனது பெயர்..
இந்த உடலா? இல்லையே.. தூக்கத்தில் நான் அதை உணருவதில்லையே.
அப்பொழுது நான் என்பது ........?

ஒரு ஒளிக்கீற்று அவனுக்குள் ஒளிர்ந்தது...

உணர்விற்கு வந்தவனாக முன்புறம் இருந்த கிராமத்தானை பார்த்தான். அவர் இவனை ஒருவித குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்..

அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து...கண்ணீர்வடித்தான்...

“ஐயா என்னக்கு எண்ணிலா தெளிவை கொடுத்துவிடீர்கள். நீங்கள் எனது குரு ரிபுவை தவிர வேறு யாராகவும் இருக்க வாய்ப்பில்லை. உங்களிடம் இருக்கும் பொழுது தான் இத்தகைய சத்தியத்தை உணர்ந்திருக்கிறேன்...”

அவனை தூக்கி தன்னுடன் அனைத்துக்கொண்டார் மகரிஷி ரிபு.

அன்று முதல் நிதாங்கனுக்கு அனுபவ பூர்வமான அத்வைத்த பாடம் துவங்கியது...

-----------------------------ஓம்---------------------------------------

குரு எப்பொழுதும் கற்றுக்கொடுப்பதில்லை.
தனது வாழ்வை அனைவருக்கும் போதிக்கிறார்.
அங்கே ஞானம் பிறக்கிறது.

Thursday, May 28, 2009

தியானம் செய்வது எப்படி?

பசுமையான மரங்கள் நிறைந்த மலைப்பகுதி....

விலங்குகள் அற்ற வனப்பிரதேசமான அங்கே அடிவாரத்தில் ஒரு குகை..

தியானத்திற்காக அங்கே மூன்று ஞானிகள் உட்கார்ந்திருந்தனர்.
மூவரும் குகையின் வாயிலை நோக்கி அமர்ந்திருந்தார்கள்.



குகையின் வெளிப்பகுதியில் குதிரையின் குழம்படி ஓசை கெட்டது...

சராலென... ஒரு குதிரையில் பயணித்த மனிதன் குகையைக் கடந்தான்...

மூன்று ஞானிகளும் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தனர்..

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்று ஞானியரில் ஒருவர் கூறினார்...”அந்த குதிரை வெள்ளை என நினைக்கிறேன்...”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

இரண்டாவதாக இருந்த ஞானி கூறினார் .. “இல்லை இல்லை.. அந்த குதிரை கருப்பு நிறம் தான்.. ”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்றாம் ஞானி கூறினார்... “ இப்படி இடைவிடாமல் பேசினீர்கள் என்றால் எப்படி தியானம் செய்வது ? நான் இருக்க வா போகவா?” என்றார்..

---------------------------ஓம்-----------------------------------------------

தியானம் என்பது கண்கள் மூடி அமர்ந்திருப்பதில்லை; மனம் மூடி அமர்ந்திருப்பது என பலருக்கு தெரிவதில்லை.

மெளனம் எனும் பெருவெளியில் உன்னதமான சக்தியின் மேல் பயணிப்பது தியானம் என கூறி ஒரு மொழியின் சிதறுண்ட எழுத்துக்களால் தியானத்தின் தன்மையை சிதைக்க முயல விரும்பவில்லை.

தினமும் பல மணி நேரம் தியானம் செய்கிறேன்.... தியானத்தில் இருக்கும் பொழுது எனக்கு ஒரு காட்சி புலப்பட்டது என பலர் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். நீங்களும் கேள்விப்படலாம்.

தியானம் செய்யும் ஒருவன் நேரத்தை நோக்கியும், ஒரு காட்சியாலும் கவனிக்கப்பட்டால் அங்கே அவனுக்கு விழிப்பு நிலை உண்டு என அர்த்தம். அது தியானம் ஆகுமா?

தியானத்தில் மன எண்ணங்களே இல்லை என கூறுபவர்கள் உண்டு. மன எண்ணமே இல்லை என்பதை பார்த்தவர் யார்? மன எண்ணம் இல்லை என்பதே ஒரு எண்ணம் தானே?

தியானம் என்றால் தியானம் + தியானிக்கபடுவது+தியானி இவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பது என்றார்கள் ஞானிகள்.

தியானம் எப்பொழுது செய்யவேண்டும்? அந்த வார்த்தையிலேயே இருக்கிறது விடை. “யா” எனும் எழுத்தை எடுத்து விடுங்கள்.

Friday, May 1, 2009

சிவ பூஜையை விட சிறந்தது எது?

எழில் மிகு இயற்கை வளம் கொஞ்சும் அந்த ஊரில் ஒரு ஆசிரமம் இருந்தது.

ஸ்வாமி விஸ்வானந்தரை அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு உபதேசிப்பதும் , பக்தி ரசம் பொங்க பாடல்கள் பாடுவதும் அவரின் முக்கிய பணி. தனது சிஷ்யர்களுடன் ஆன்மீக பணி ஆற்றும் விஸ்வானந்தருக்கு சிவ பூஜை, சம்பிரதாயம் என தனது நித்திய கடமைகளில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்.

காலை பிரம்ம முஹூர்த்ததில் எழுந்ததும் தனது பூஜையை ஆரம்பித்தார் என்றால் பகல் பத்து மணிவரை தொடரும். மேலும் மாலை சந்தியாகாலத்தில் மறுபடியும் பூஜை. அவரது சிஷ்யர்கள் அவருக்கு உதவியாக பூஜையில் ஈடுபடுவார்கள்.
பூஜைக்கு தேவையான மலர்கள் மற்றும் அபிஷேக பொருட்களை தயாரிப்பது, பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்வது என அனைவருக்கும் வேலை சரியாக இருக்கும்.


பூஜை துவங்கியதும் சிவலிங்கத்தை பார்த்து அவர் அமர்ந்து கொள்வார்.
கைகள் அவர் நீட்ட அந்த தருணத்திற்கு தேவையான பொருட்களை சிஷ்யர்கள் அவருக்கு தருவார்கள். தவறான பொருட்களை தந்தாலோ அல்லது காலதாமதம் செய்தாலோ அவ்வளவுதான். ருத்திர பூஜை செய்பவர், ருத்திரனாகவே மாறிவிடுவார். அந்த சிஷ்யனின் கதி அதோகதிதான்.



இன்னிலையில் தான் சில மாதங்களுக்கு முன் நாதன் அவரிடம் சிஷ்யனாக சேர்ந்திருந்தான். கடைநிலையில் தொண்டாற்றி வந்த நாதன் படிப்படியாக முன்னேறி அவரின் பூஜைகளுக்கு உதவி செய்ய துவங்கினான்.

நாதனின் எளிமை, பணிவு விஸ்வானந்தருக்கு பிடித்திருந்தது. தனது பூஜைக்கான பணியை பிறரைவிட நேர்த்தியான முறையில் நாதன் செய்ததும் இதற்கு ஒரு காரணம்.

ஒரு நாள் பூஜையை ஈடுபட்டிருந்தார் விஸ்வானந்தர். என்றும் இல்லாதது போல அன்று சில தடங்கலை உணர்ந்தார் விஸ்வானந்தர். பூஜையில் மனது ஈடுபடவில்லை. ஏதோ யோசனையில் இருந்தார். தன்னை பார்க்க வந்த ஒருவர் தரக்குறைவாக திட்டியது தான் முக்கிய காரணமாக இருந்தது. நேற்று முதல் அவருக்கு மனதில் இது ஓடிக்கொண்டே இருந்தது. பலர் முன்னில் தன்னை அவமானம் கொள்ள செய்ததாக நினைத்தார்.

திடிரென தனது உடலை யாரோ தொடுவதை உணர்ந்த விஸ்வானந்தர் சுயநினைவுக்கு வந்தார். எதிரே நாதன் நின்று கொண்டு, “குருவே பூஜையை தொடராமல் என்ன யோசனை? தயவு செய்து தொடருங்கள்” என்றான்.


என்றும் இல்லாத கோபம் விஸ்வானந்தரை சூழ்ந்தது. நித்திய பூஜைக்காக ஆச்சாரமாக இருக்கும் என்னை ஏன் தொட்டாய்? உனக்கு என்னை தொடும் அருகதையை யார் தந்தது? சிவ பூஜையை பற்றி உனக்கு தெரியுமா? இதை தான் சிவ பூஜையில் கரடி என்பார்கள். சரியான கரடி நீ. என் முன்னே நிற்காதே என கோபம் கொப்பளிக்க தத்தினார்.

அமைதியாக பார்த்த நாதன் கூறினான்.. “ குருவே ஆச்சாரம் என்பது ஏது?. நேற்று ஒருவன் சொன்ன கடும் சொல்லை மனதில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் உடல் ஆச்சாரம் பற்றி சொல்லிகிறீர்களா அல்லது மன ஆச்சாரம் பற்றி சொல்லுகிறீர்களா? உங்களுக்குள் இருக்கும் சிவனை பூஜித்திருந்தீர்கள் என்றால் அவனின் அவமான சொற்காள் உங்களுக்கனதல்ல சிவனுக்கானது என இருந்திருப்பீர்கள். யாராவது புகழ்ச்சியான சொல்லை கூறியிருந்தாலும் உங்கள் நிலை சமநிலை தவறி இருக்காது. சிவ சொல் இருக்க வேண்டிய மனதில் அவச்சொல் இருக்கலாமா?” என்றான்.


ஏற்கனவே கோபத்தில் இருந்த விஸ்வானந்தர் கோபத்தின் உச்சத்திற்கு சென்று, “தினமும் இரு வேளையும் சிவனை பூஜிக்கும் என்னை பார்த்து விமர்சிக்கும் தன்மை உனக்கு யார் அளித்தார்கள்? எனக்கு பக்தி போதவில்லை என கூறுகிறாயா? எனது மனதில் இருப்பதை நீ சொல்லுகிறாய் ஆச்சரியம் தான். பூஜை செய்யாத உனக்கு எப்படி இந்த ஆற்றல் வந்தது? நீ மாயக்காரனா?” என்றார்.

“நான் மாயன் அல்ல குருவே. பல மணி நேரம் பூஜை செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. ஒவ்வொரு ஷணமும் குருவாகிய உங்களை எனது மனதில் பூஜிக்கிறேன் இதை விட வேறு பக்தி என்ன வேண்டும்? என்னை பொருத்தவரை இறைவனை காட்டிலும் குருவான நீங்களே எனக்கு முக்கியம். நீங்கள் சிவனை பூஜிக்க நான் உங்களை பூஜித்ததன் விளைவே இந்த விமர்சனம் தவறிருந்தால் மன்னிக்கவும்”
என்றான் நாதன்.

நாதனின் குருபக்தியை உணர்ந்த விஸ்வானந்தர் அவனை ஆரத்தழுவினார்.

-------------------ஓம்--------------------------


தினமும் நான்கு வேளை குளிப்பதாக சொல்லும் பக்திமான்களே தவளை நித்தமும் நீரில் இருக்கிறது அது உங்களை விட ஆச்சரமானதல்லவா? எனும் சிவவாக்கியரின் பாடல் நினைவுக்கு வருகிறது.

உள் பூஜை செய்யாமல் பிறர் பார்வைக்காக வெளிப்பூஜை செய்து என்ன பயன்?


மானச பூஜை செய்ததால் பூசலார் மனதில் குடிகொண்டான் ஈசன்.
அரசனுக்கு கிட்டாதது ஆண்டிக்கு கிட்டியது.


குரு பக்தி இருக்கும் பட்சத்தில் பிற பக்திகள் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களே.

Monday, March 16, 2009

குரு தாசி


நகுலனுக்கு எந்த கவலையும் இல்லை. காலையில் எழுந்ததும் சுவையான உணவுகளை உண்டு, நறுமண பொருட்களால் தன்னை மிகவும் வாசனையானவன் ஆக்கி கொண்டு ஊர்சுற்ற கிளம்பி விடுவான்.

தனது தந்தை பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதால் அவன் தொழில் மேல் நாட்டம் இல்லாமல் இருந்தான். தினமும் குடி மற்றும் பெண்கள் மேல் இச்சை என அவனின் கும்மாளம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது.

நகுலனின் தந்தையும் இதை கண்டிக்கவில்லை. தனது ஒரே மகன் செய்யும் காரியம் அனைத்தும் அவருக்கு சரியாகவே பட்டது.

இவ்வாறு நகுலனின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கும் பொழுது தான் அந்த ஊருக்கு வந்தாள் வேதயாணி.

வேதயாணி நல்ல அழகும் துடுக்குத்தனமும் கொண்ட பெண். அவள் ஒரு தாசியாக வாழ்ந்து வந்தாள்.

பல ஊருகளுக்கு நாடோடி போல பயணம் செய்து அத்தொழிலை செய்துவந்தாள். வேதயாணியை கண்டவுடன் நகுலனுக்கு தனது மனதை கட்டுபடுத்த முடியவில்லை. தினமும் பல பெண்களை காணும் அவனுக்கு வேதயாணி மேல் அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டது.

வாரத்தில் சில நாட்கள் சென்று வேதயாணியை சந்தித்து வந்த நகுலன் பின்பு தினமும் சந்திக்க நினைக்கும் அளவுக்கு அவளிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

ஒரு முறைக்கு மேல் பழகிய பெண்களை மீண்டும் சந்திக்க விரும்பாத நகுலனுக்கு தன்னிடம் ஏற்பட்ட மாற்றம் வியப்பாக இருந்தது.

ஊருக்கு எல்லையில் ஓடும் ஆற்றங்கறையின் மறுபுறம் இருக்கும் நந்தவனத்தில் தான் வேதயாணியின் வீடு இருந்தது.



தினமும் பரிசல்காரனின் உதவியுடன் ஆற்றைகடந்து சென்று நந்தவனத்தில் வேதயாணியுடன் செலவிடுவது நகுலனுக்கு வழக்கம்.வேதயாணியின் வீட்டின் முன் இருக்கும் செண்பகப்பூ மரத்தின் நிழலில் இருவரும் சந்தித்து உரையாடுவார்கள். இதற்கு முன் எந்த பெண்ணையும் அவன் இவ்வாறு

சென்று சந்தித்ததில்லை. தனது பண செருக்கால் அவர்களை தான் இருக்கும் இடத்திற்கு வர சொல்லி அதிகாரம் செய்வான். தானே சென்று வேதயாணியை சந்திக்கும் செயலை தனது நண்பர்கள் கிண்டல் செய்தாலும் கவலைபடவில்லை நகுலன்.


இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது...


ஒரு நாள் கனமழையின் காரணமாக ஊர் முழுவதும் வெள்ளப்பெருக்கு இருந்தது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் இருந்தார்கள்.

காமமும்,மோகமும் ஊர்மக்கள் போல் அல்லவே, நகுலனை விட்டு வெளியே வர துடித்தது.

பெரும் மழையை பொருட்படுத்தாது வேதயாணியை காண புறப்பட்டான்.
கனமழையால் அற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.

பரிசல்காரர்கள் யாரும் இல்லாதது நகுலனுக்கு ஏமாற்றம் அளித்தது. ஆற்றை நீந்தி கடக்கலாம் என்றால் வேகம் அதிகம். நகுலனுக்கு சாதகமாக ஒரு சிறிய மரம் ஆற்றில் அடித்துக்கொண்டு வந்தது..


அதை பாய்ந்து பிடித்து கொண்டே, மறு கையால் நீந்தி ஆற்றைகடந்தான்.மறு கரையை அடைந்ததும் சிறிய மரத்தை கரைக்கு அருகில் போட்டுவிட்டு வேதயாணியின் வீட்டை பார்த்தான். வீட்டை சுற்றி நீர் தேங்கி இருந்தது.

வீட்டின் மேல் மாடத்தில் இருந்து நகுலனின் வருகையை பார்த்தவண்ணம் இருந்தாள் வேதயாணி.

மிகவும் வேகமாக வந்த நகுலனுக்கு வீட்டின் முன் தேங்கி இருந்த நீர் ஒரு தடையாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவன், செண்பக மரத்தில் இருந்த கயிற்றை பிடித்து நீரை தாண்டி அவளின் வீட்டு முற்றத்தை அடைந்தான்.

வேதயாணியை பார்க்கும் ஆவலுடன் அவளை நெருங்கினான்.

என்றும் புன்னகையுடன் வரவேற்கும் அவள் இன்று அவனிடத்தில் கேட்டாள்.

"காம சுகத்தில் என்ன இருக்கிறது?”

இது வரை எவரும் தன்னிடம் கேள்வி கேட்டதில்லை. தன்னிடம் ஒரு பெண் கேள்வி கேட்கிறாளே என கோபம் கொண்ட நகுலன்.

அதைவிட இந்த உலகின் என்ன சுகம் இருக்க முடியும்? என்றான்.

உன் கண்கள் காமத்தால் கட்டப்படிருக்கிறது, உனது மனம் அறியாமையால் சூழப்பட்டு இருக்கிறது என்றாள் வேதயாணி.

தாசியாக இருந்தவள் திடிரென வேதாந்தம் பேசுகிறாளே என அவளை ஏறிட்டான்.

பிறகு , “என்னை விட உலகில் இன்பம் துய்ப்பவன் யாரும் இல்லை. தெரியுமா உனக்கு” என்றான் நகுலன்.

அவனை தீர்க்கமாக பார்த்த வேதயாணி ”இருக்கவே முடியாது” என தீர்மானமாக சொன்னாள்.

அவனை திருப்பி ஆற்றின் கரையோரம் காண்பித்தாள்.

அதோ பார் நீ நீந்தி வந்தது மரம் அல்ல, ஒரு பிணம்.
அதை மரம் என நினைத்து ஆற்றை கடந்தாய்.

மரத்தில் இருந்த பாம்பை கயிறு என நினைத்து நீரை கடந்து இந்த வீட்டை அடைந்தாய்..

அப்பொழுது தான் கவனித்தான் நகுலன். அது ஒரு பிணம் இது ஒரு பாம்பு.

வேதயாணி தொடர்ந்தாள் .. “பிணத்திற்கும் மரத்திற்கும், பாம்புக்கும் கயிறுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் நீ எப்படி உலகின் உயர் இன்பத்தை உணர்ந்தவனாவாய் ?”

தனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட
சூழலை சந்திக்காத நகுலன் தன்னில் நிலைகுழைந்து நின்றான்.

சில நிமிட மெளனத்திற்கு பிறகு வேதயாணியை பார்த்து கேட்டான்.

“உலகின் உயர் இன்பம் பெற என்ன செய்ய வேண்டும்?”

அவனது நிலை உணர்ந்த வேதயாணி “இரண்டு எழுத்து மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சரி. அது போதும்” என்றாள்.


சொன்ன
து மட்டுமல்லாமல் அவனது காதில் அதை உபதேசித்தாள்.

வேட்டைக்காரனை வால்மீகியாகிய மந்திரம்
நகுலனை ராமதாஸனாக்கியது.

தன்னை உணர்ந்து ...
உயர் இன்பன் அடைந்தான் ராமதாஸன்.



-------------------------------------------------------------------------

நமது உணர்வுகள் விழிப்புணர்வின் விரோதிகள். காமம் குரோதம் மற்றும் மாயை நம்மை முழுமயான செயல் நிலைக்கு இட்டுச் செல்லுவதில்லை.

மேற்கண்ட கதையை படிக்கும் பொழுது கூட “வேதயாணி” எனும் பெயரை ஒரு முறையேனும் “தேவயாணி” என உச்சரித்திருப்பீர்கள்.

உணர்வுகளின் தலையீட்டால் இந்த பிழை நேரக்கூடும்.

உங்கள் கண்கள், உணர்வு இவை ஓருங்கிணைந்து வேலை செய்தால் மட்டுமே விழிப்புணர்வில் இயங்க முடியும்.

குரு நிலை என்பது உருவாக்கபடுவதில்லை. இறைநிலை ஒருவருக்குள் புகுமபொழுது அவர் குருவாகிறார். அதனால் தாசி உபதேசிக்க முடியுமா என

மேற்கண்ட கதையில் உங்களுக்கு தோன்றினால் அது உங்களின் முழுமை நிலை இல்லை என்பதை காட்டும்.

தாசி குருவாகவில்லை. நகுலனை ராமதாசனாக்க குரு தாசியானாள் என்பதே உண்மை.

அதனால் தான் நான் அடிக்கடி சொல்லுவேன்...

குரு உன்னை எப்பொழுதும் பார்த்து கொண்டே இருக்கிறார்.
நீதான் அகமும்-புறமும் கண்கள் இல்லாமலேயே வாழ்கிறாய்.


Monday, February 9, 2009

ஆன்மீக சாதனை


குரு மரண படுக்கையில் இருந்தார்..

அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.

குரு மெல்ல அவனை அழைத்து, “ சிஷ்யா.. ஏன் கவலைப்படுகிறாய்? உனக்காக நான் எப்பொழும் இருப்பேன். கலக்கம் அடையாதே...”

கலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான்.. “குருதேவா... நீங்கள் கூறியபடி ஜாபம் தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால் ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை. எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது. உங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது?”


அணையும் ஜோதி பிரகாசகமாக சுடர்விடும் என்பதை போல ஜோதிர்மயமான முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு.. “கவலை கொள்ளாதே. இந்த கட்டிலுக்கு அடியில் ஓர் பெட்டி இருக்கிறது. அதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன்...அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும் பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார். எனது ஆசிகள்”...என கூறியபடி அவரின் ப்ராணன் உள்ளே அடங்கியது.


நாட்கள் சென்றன...

தனது ஆன்மீக சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சிஷ்யனுக்கு தெரியவில்லை.. தியானம் , ஜபம் ஆகியவற்றை விட்டுவிடலாமா என எண்ணினான்..

குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்.


சிஷயன் ஞானம் அடைந்தான்..






நாட்கள் சென்றன...

சிஷ்யன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல் கலகம் செய்தனர்.

மீண்டும் குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்..

அதற்கு பின் வரும் காலத்தில் மக்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்...





நாட்கள் சென்றன...

தனது இறுதி காலத்தை அடைந்தான்.. தனது சிஷ்யனை கூப்பிட்டு கூறினான்..

“எனது பிரிய சிஷ்யா.. எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்த பெட்டியை திற. எனது உபதேசம் கிட்டும்.”

சிஷ்யனுக்கு சிஷ்யனான பரம சிஷ்யன்.. தனது ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்பட்டது. குருவின் உபதேசம் அறிய பெட்டியை திறந்தான்..

அதில் எழுதி இருந்த வாசகம்...

“இன்னொரு முறை முயற்சி செய்”


-----------------------------------------------------------
சிஷ்யனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்படும் பொழுதும் இந்த உபதேசம் உதவும்..

குரு என்பவர் உபதேசிக்க மட்டுமே முடியும். ஆன்மீக சாதனையை தனி ஒரு மனிதன் செய்து உயர்வடைய வேண்டும்.

எளிமையாக சொல்ல வேண்டுமானால் குரு சமைத்து கொடுக்கலாம், ஏன் ஊட்டிகூட விடலாம். ஆனால் நாம் தான் ஜீரணிக்க வேண்டும்.


Friday, December 26, 2008

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

பூபாளம் இசைக்கும் காலை நேரம்....


சத்குரு விஷ்வ தீர்த்தர் தனது நித்திய பூஜையில் ஈடுபட்டிருந்தார். மங்கள வாத்தியம் முழங்க தீபாரதனை செய்தார் மூத்த சிஷ்யன் ஜகதீஷ்.

இறைவனின் சன்னிதானத்திலிருந்து படையல் செய்த பொருட்களை சிஷ்யர்கள் அனைவருக்கும் வழங்கினார்கள். அனைவரும் பக்திச் சுவையாலும் , பிரசாத சுவையாலும் மகிழ்ந்து கலைந்தனர்.

சத்குரு தனது ஆசனத்திலிருந்து எழுந்து தனது அறை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவரின் கால்கள் நடந்தாலும் கண்கள் ஜகதீஷை பார்த்த வண்ணம் இருந்தது...

குருவின் தீர்க்கமான பார்வையை உணர்ந்த ஜகதீஷ் அவரின் பின்னால் நடக்க துவங்கினான்.

அறைக்குள் வந்ததும் ஜகதீஷை நோக்கி கேட்டார்... “ எனது பிரிய ஜகதீஷ் சில நாட்களாக உனது செயல்களில் ஓர் வித்தியாசம் இருந்ததை உணர்கிறேன். முன்பு நைவேதியம் செய்யும் பிரசாதத்தை அனைவருக்கும் வழங்குவதில் முனைப்பாக இருப்பாய் , ஆனால் இப்பொழுது ஒதுங்கி இருக்கிறாயே என்ன காரணம்?”

தனது நிலையை குரு இவ்வளவு உன்னிப்பாக கவனிப்பார் என எதிர்பார்க்காத ஜகதீஷ் தனது நிலையை கூற துவங்கினான்.. “ குருவே ஆசிரம வாழ்க்கை துவங்கிய பொழுது பக்தி பூர்வமாக இருந்தேன். நித்திய பூஜை, நைவேதியம் என அனைத்திலும் ஈடுபட்டேன். தற்சமயம் தெளிவு பெற்றேன். நாம் படைக்கும் நைவேதியதை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? இது போன்ற தர்க்கம் எனக்குள் தோன்றியதால் என்னால் பிரசாதம் வழங்குவதில் ஈடுபட முடியவில்லை குருவே...”

அவனை ஊடுருவி பார்த்த குரு, “ ஜகதீஷ் உனது விருப்பபடியே செய். நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.


இறைவணக்கத்துடன் வகுப்பு துவங்கியது.. சென்ற வகுப்பில் புதிய பாடம் இன்று போதிக்கபடுவதாக குரு சொன்னதால் அனைவரும் ஆர்வமாக இருந்தனர்..

கால்கள் இரண்டையும் இணைத்து யோக முத்திரையில் அமர்ந்திருந்த சத்குருவை பார்க்க தக்‌ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்வதை போல இருந்தது.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு விஷ்வ தீர்த்தர்.

அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு ஜகதீஷை சைகையால் அழைத்தார் விஷ்வ தீர்த்தர்.


குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

“எனதருமை ஜகதீஷ், மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான் ஜகதீஷ்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியாதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”

பதட்டம் அடைந்த ஜகதீஷ், புத்தகத்தை காண்பித்து கூறினான்.. “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”

“ஜகதீஷ்.. இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.. என்றால் விஷ்வதீர்த்தர்.


மெல்ல தலையசைத்தான் ஜகதீஷ்..


சத்குரு தொடர்ந்தார்... “ இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”


குழப்பமடைந்தான் ஜகதீஷ்...


“எனது பிரிய ஜகதீஷ்.. உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உற்கொள்கிறான்.
நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான் இறைவன் உற்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேதியத்தை உற்கொள்கிறோம். ”

வகுப்பில் இருக்கும் அனைவரும் இருவரின் சம்பாஷணை புரியாமல் இருக்க...ஜகதீஷின் முகத்தில் ஒளி தெரிந்தது.

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவித்தியம் செய்து முழுமையடைந்தான் ஜகதீஷ்.