Saturday, July 24, 2010

சுழற்சியில் மாட்டிய குருவும் சிஷ்யனும்



போன ஜென்மத்தை காட்டுகிறேன் வா என என் நெற்றிப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.

அந்த ஜென்மத்தின் நினைவுகள் தெரியத்து வங்கியது.

அதில் அடுத்த ஜென்மத்தை காட்டுகிறேன் வா என என் நெற்றிப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.

இவ்வாறு நாங்கள் பிறவிச் சுழற்சியில் மாட்டிக்கொண்டோம்..!

-----------------ஓம்-----------------

எந்த சிஷ்யனிடமும் குரு தான் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என கூறுவதில்லை.
அவ்வாறு கூறுபவர் அகந்தையின் சொரூபமாக தான் உயர்ந்தவன் என காட்டவே செய்கிறார்.

அவர் குரு நிலையில் இருக்க வாய்ப்பில்லை.

பல ஜென்மங்களை காட்டுகிறேன் என கூறுபவரை விட...

உனக்கு உன் இருப்பை மட்டுமே காட்டுகிறேன் என்ற விழிப்புணர்வை கொடுப்பவரை குருவாக இருக்க முடியும்.

கடவுள் ஒரு காட்டு எருமை..!

“குருஜீ நீங்க பிறக்கு போதே இந்த தாடி இருந்துச்சா?”

“தினமும் ஏன் குருஜீ மாலையை விரலால தேச்சு சேதமாக்கனும்?”

“எப்பவும் நாமதான் மூச்சு எடுக்கறோமே அப்பறம் ஏன் காலையில தனியா ஒரு மணிநேரம் மூச்சு எடுக்கனும்?”

மேற்கண்ட கேள்விகளின் நாயகன் மாதவனுக்கு பதினாறு வயது நேற்றுடன் முடிந்து. வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லை என்பார்கள். சிறு வயதிலிருந்தே மிகவும் குறும்புக்காரனாக வளர்ந்ததால் வீட்டில் இவனின் சேட்டைகளை அளவிட முடியாமல் பெற்றோர்கள் தவித்தார்கள்.

நல்வழிபடுத்தும் நோக்கில் பரமாணந்த ஆசிரமத்தில் கொண்டு விட்டு விட்டார்கள். ஆசிரமத்தில் அவனுக்கு தெரியாததே இல்லை என்பதை போல எந்த வேலையை கொடுத்தாலும் சலிக்காமல் செய்வான். சில நேரங்களில் சிறப்பாக செய்கிறேன் பேர்வழி என தனது புத்திச்சாலித்தனத்தால் குளறுபடிகளும் நடக்கும். அசிரமத்தில் பலர் இவனை கிண்டலும் கேலியும் செய்வதுண்டு.

இவனின் முட்டாள் தனமான கேள்விகளுக்கு சில நேரம் குரு பொருமையாக பதில் அளித்துக்கொண்டு இருப்பார். சில நேரங்களில் சிரித்துவிட்டு செல்வார். குரு மாதவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்குவது ஆசிரமவாசிகளுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்.

இவ்வளவு பொறுமையான குருவையே ஒரு நாள் கோபப்படுத்தினான் மாதவன். குரு தனது அன்றாட பூஜைக்காக மலர்களை நந்தவனத்தில் பறித்துக் கொண்டிருந்தார்.


உருவமற்ற பரம்பொருளை மானச பூஜை செய்வது குருவின் பூஜாமுறைகளில் ஒன்று. அவ்வாறு அவர் பூஜைக்காக தயாராகி வரும்பொழுது மாதவன் குருவின் அருகே வந்தமர்ந்து அவர் செய்வதை கவனித்துக் கொண்டிருந்தான்.

திடீரென பூ இருக்கும் தட்டிலிருந்து மகிழம் பூவை எடுத்து நாசிக்கு அருகில் வைத்து நுகர்ந்தான்.

இச்செய்கையை கண்ட குரு, “மாதவா கடவுளுக்கு வைத்திருக்கும் பூவை இப்படி செய்யலாமா? போ வெளியே” என கோபம் கொண்ட வார்த்தைகளால் கூறினார்.

தன் செய்த செய்கையை உணராத மாதவன் “குருவே கடவுள் எப்படி இருப்பார்?” என வேறு கேள்வியை கேட்டான்.

கோபத்தின் உச்சத்திற்கே சென்ற குரு “கடவுள் காட்டு எருமை போல இருப்பார். இப்பொழுது நீ வெளியே செல்” என கோபம் தனியாது கூறினார்.

குருவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை குழப்பத்துடன் பார்த்தவாறே வெளியே சென்றான் மாதவன்.

நாட்கள் மாதத்திலும் ... மாதங்கள் வருடத்திலும் கரைந்தது.

ஒரு நாள் அருகில் இருக்கும் புண்ணிய தலத்திற்கு பயணமானார் குரு. மாதவன் இல்லாமல் பயணமா? அவனும் குருவுடன் பயணித்தான்.

கோவிலின் வாயில் அருகே அதிக கூட்டம் இருப்பதை கண்டார்கள். திருவிழா நேரம் என்பதால் இறைவனின் திருவீதி உலாவிற்காக கூட்டம் குழுமி இருந்தது. கோவிலின் வாயிலில் இருவரும் நின்றார்கள்.

இறைவனின் பல்லாக்கை கோவிலுக்குள் இருந்து வெளியே எடுத்து வரும் நிலையில் கோவிலின் வாசலில் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பல்லாக்கை சரியாக வெளியே கொண்டு வர முடியவில்லை.

நெரிசலை கண்ட குரு, “ஓ இறைவனை நகர் வலம் கொண்டு செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறதே..” என புலம்பினார்.

இதைக்கேட்ட மாதவன், “குருஜீ... மிகப்பெரிய காட்டெருமையை இந்த சின்ன வாயிலில் கொண்டு வர முடியுமா? வாயிலை அகலப்படுத்த வேண்டும். முட்டாள்கள்” என்றான்.

--------------------------------ஓம்----------------------------------------

இறைவன் அருவமானவன்.
இறைவன் குருவின் வாக்கினால் உருவமாகிறார்.

குருவே இறைவனை நமக்கு காட்டும் கண்களாக இருக்கிறார்.
அதில் தெரியும் காட்சிகள் என்றும் தெய்வீகமானது.

குரு கூறும் எவ்வாக்கியமும் மஹாவாக்கியமாகிவிடும்.


Monday, June 21, 2010

ஆன்மீக குருவுடன் முதல் சந்திப்பு

ரிஷிகளின் கருப்பை என அழைக்கப்படும் ரிஷிகேசத்தின் கிழக்கு பகுதி. சூரியன் தன் கதிர்களை தளர்த்தி செம்பாகும் மாலை நேரம். அந்த மலைபகுதியை ஒட்டி இருக்கும் ஆசிரம குடில்கள் நிறைந்த ஏகாந்தமான சூழலுக்குள் நுழைந்தான் விஷ்வ தாஸ்.

நீண்ட காலமாக குருவை தேடி பல இடங்களுக்கு பயணப்பட்டவனுக்கு அந்த இடம் ஒரு ரம்மியமான அமைதியை கொடுத்தது. ஆசிரம குடில்களுக்கு மத்தியில் இருந்த ஆலமரத்தின் அடியில் சிறிது கூட்டம் தென்பட அதை நோக்கி சென்றான் விஷ்வதாஸ்.

கண்கள் மூடி அன்பர்கள் சுற்றி அமர்ந்திருக்க ஒரு தெய்வீகமான உருவத்தில் நடு நாயகமாக அமர்ந்திருந்தார் யோகி யஸ்வந். வெண் பஞ்சு போன்ற நீண்ட தலை முடியும் தாடியும் ஆழ்ந்த அமைதியை பறைசாற்றியது. அவரின் முன் சென்று அமைதியாக அமர்ந்தான் விஷ்வ தாஸ். எங்கும் பேரமைதி நிலவியது.

சில நிமிடங்கள் கரைந்தது. மெல்ல கண்களை திறந்தான் விஷ்வ தாஸ், யோகி அவனை உற்று நோக்கிய வண்ணம் இருந்தார். சைகையால் அவனை அருகில் அழைத்தார்.

முக மலர்ச்சியுடன் அவரின் அருகில் சென்று பணிந்து வணங்கினான் விஷ்வ தாஸ். மீண்டும் சைகையால் கண்களை மூடச்சொன்னார். கண்கள் மூடி ஆழ்ந்த ஆன்மீக எதிர்பார்ப்புடன் இருந்தான் விஷ்வ தாஸ்.

“பளார்...”

அசுரத்தனமான அடி ஒன்று கண்ணத்தில் இறங்கியது. எதிர்பாராத அடியால் நிலை குலைந்து போனான் விஷ்வ தாஸ்.

சுற்றி இருந்தவர்கள் அனைவரும் இவனை பார்த்து பலமாக சிரிக்க, அவமானமும் ஏமாற்றமும் இணைந்து கண்களில் நீர்துளியாக எட்டிபார்த்தது.

வேறு யோசனைகள் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு வெளியேரினான் விஷ்வதாஸ். ஆசிரமத்தை விட்டு வெளியேறி வெளியே இருக்கும் பாதையில் நடக்கலானான். அவமானம் ஆத்திரமாக மாறியது. பல பேர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய யோகியை பழிதீர்க்க எண்ணினான். வேறு ஆசிரமம் சென்று அங்கே இணைந்து இவருக்கு முன் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

கங்கை கரையை பாலத்தின் மூலம் கடந்து மறுகரையில் இருக்கும் மற்றொரு ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

சிஷ்யர்கள் ஒருவர் முன் அமர்ந்து கொண்டு பஜனை பாடிகொண்டிருந்தார்கள்.


அங்கே மழிக்கப்பட்ட தலையுடன் கருப்பு கம்பளியை மட்டும் உடலில் போர்த்திய கம்பளி யோகி அமர்ந்திருந்தார். யோகி யஸ்வந் உடன் கம்பளி யோகியை ஒப்பிட்டு பார்த்தான். உடை, தலை முடியின் அமைப்பு என பல்வேறு ஒப்பீடுகள் நடத்தினான். யோகி யஸ்வந்க்கு முற்றிலும் எதிரான நிலையை கப்பளி யோகியிடம் கண்டான். தான் சரியான இடம் வந்திருப்பதாக உணர்ந்து கொண்டான்.

விஸ்வ தாஸ் சிஷயர்களுடன் அமர்ந்து கண்களை மூடி தானும் பஜனை பாடியவாறே மெல்ல தலையை அசைத்துக் கொண்டிருந்தான்.

யாரோ அவனை உற்று நோக்குவது போல இருந்தது கண்களை திறந்து பார்த்தான். கம்பளி யோகி இவனை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். கம்பளி யோகி தன்னை ஏற்றுக் கொண்டதாக உணர்ந்தான். இவனுக்கு ஆனந்த அனுபவமாக இருந்தது.

சில வினாடிகளில் சைகையால் தன்னை நோக்கி அழைத்தார் கம்பளி யோகி. மெல்ல அவரிடம் சென்றான். சைகையால் கண்களை மூடு என்றார்.

கண்களை மூடியவனுக்கு மனதுக்குள் மின்னலாய் முன்பு நடந்த அனுபவம் நிழலாடியது. யோகி யஸ்வந் விட்ட அறை ஞாபகம் வர....சற்று பின்னோக்கி நகர்ந்து கண்களை திறந்தான்.

அங்கே நீண்ட திரிசூலத்தை தூக்கி இவனை நோக்கி பாய்ச்சும் தருவாயில் இருந்தார் கம்பளி யோகி. அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான். சடாரென சுதாரித்துக் கொண்டு திரும்பி ஓட துவங்கினான்.

கம்பளி யோகி அவனை விடாமல் துரத்த துவங்கினார்..

குருவை தேடிவந்தது குற்றமா? ஆன்மீக எண்ணத்தை தவிர தவறான எண்ணம் எதுவும் தனக்கு இல்லையே. அடிப்பதற்கும் கொல்லுவதற்கும் இவர்கள் துணியும் அளவுக்கு நாம் என்ன பாவம் செய்தும் என நினைத்து தன்னை நொந்து கொண்டான். விஸ்வ தாஸ் ஓடுவதை நிறுத்தவும் இல்லை. கம்பளி யோகியும் விடுவதாக இல்லை.

கங்கை கரையில் நீண்ட தூரம் ஓடியவனுக்கு கம்பளி யோகியின் மேல் எரிச்சல் உண்டானது. கம்பளி யோகி தன்னை கொலை செய்ய துரத்துவதை பார்க்கும் பொழுது யஸ்வந் யோகி தன்னை அடிக்க மட்டுமே செய்தார். அவர் எவ்வளவோ நல்லவர் என தோன்றியது.

பல எண்ணங்களுடன் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தவன் எதிலோ மோதி கீழே விழுந்தான். மெல்ல எழுந்து பார்த்தான்.

அங்கே யஸ்வந் யோகி நின்று இருந்தார். அவனை ஆதரவாக தூக்கி கையில் இருந்த இனிப்பை அவனுக்கு புகட்டினார். வாயில் இனிப்புடன் கலவரத்துடன் திரும்பி பார்த்தான் விஸ்வ தாஸ்.

அங்கே கம்பளி யோகி தென்படவில்லை.

-------------------ஓம்-----------------------

குருவை நீங்கள் தேடத்துவங்கினால் உங்கள் அறியாமையை தூண்டுபவரை சென்று அடைவீர்கள். உங்களுக்கு சுகமான உணவையும், சூழலையும் சுகானுபவத்தையும் கொடுப்பவர் குரு என நீங்கள் நினைப்பீர்கள். அப்படிபட்டவர்கள் உங்களை அறியாமை என்ற தூக்கத்தில் ஆழ்த்தி விடுவார்கள்.

ஆன்மாவை நேரடியாக தொடர்பு கொள்ள உங்கள் ஆணவத்துடன் போர் புரிபவரே உங்கள் குருவாக இருக்க முடியும். அவரை நீங்கள் சந்தித்ததும் உங்களிடம் இருந்து எதையோ முக்கியமானதை இழக்கப் போகிறேன் என்ற ஆழ்ந்த துக்கம் ஏற்படும். உங்கள் ஆணவம் தன்னை இழக்க தயாராகாமல் அவருடன் போராடி தோற்கும்.

எளிமையாக சொல்லுவதென்றால், உங்கள் உள் கட்டமைப்புகளை தகர்த்து யார் அதில் புதிய ஒளியை ஏற்றுகிறாரோ அவரே குருவாக இருக்க முடியும்.

உங்களை தூங்க செய்பவர் குரு அல்ல.. விழிக்கச் செய்பவரே குரு...!

Saturday, April 10, 2010

குரு - அடி - திருவடி..!

குருவே சரணம், அனைவருக்கும் வணக்கம்.
நான் நந்து என்கிற முக்தானந்த கிரி பேசுகிறேன்.

எனக்கு சிறு வயதிலிருந்தே ஆன்மீக தாகம் அதிகம். ஆன்மீக வாழ்க்கையில் வாழ்ந்து இறைவனைக்கான வேண்டும் என்பது ஆழ்ந்த விருப்பமாக இருந்தது.ஆர்வம் அதிகரித்ததால் சுவாமி வேதானந்த கிரியின் ஆஸ்ரமத்தில் வந்து சேர்ந்தேன். கடந்த சில நாட்களாக சுவாமியின் அருட்பார்வையில் வாழும் பாக்கியம் கிடைத்தது.

சுவாமி வேதானந்தகிரி ஒரு மெளனகுரு. எந்த போதனையோ கருத்துக்களோ சொல்லமாட்டார். இடையில் கோமணத்தை கட்டிக்கொண்டு கையில் ஒரு சிறிய கம்பு ஒன்றும் வைத்திருப்பார். அவரை பார்த்தால் அதிகபட்சம் ஒரு மாடு மேய்க்கும் முதியவரை போன்று காட்சி அளிப்பார். மக்கள் அவரை வேதானந்த கிரி என அழைத்தார்கள். ஆனால் அவர் தன் பெயரை வெளியே சொன்னது இல்லை.

யாரிடமும் பேசாமல் அமைதியாக மரத்தடியில் இருந்தவரின் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு பலர் அவருடன் இணைந்து இருக்க துவங்கினார்கள். மெல்ல அந்த சூழல் ஓர் ஆன்மீக ஆசிரமமாக மலர்ந்தது.

தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் சிறிய குடில்கள் மற்றும் வீடுகளுடன் வேதானந்தகிரி ஆஸ்ரமம் செயல்பட்டுவந்தது. ஒரு பக்கம் சமையல் அறை மற்றும் குடியிருப்புக்கள், மறுபுறம் குருநாதர் இருக்கும் இடம், நந்தவனம் ஆகியவை இருந்தது.

எனக்கு நந்தவனத்தை சீரமைக்கும் பணி. தினமும் காலை எழுந்து நீராடிவிட்டு, குருவின் முன் வந்து விழுந்து வணங்குவேன். அவரோ ஏதோ ஒரு நிலையில் இருப்பார். அவர் முன் யார் இருக்கிறார்கள் என பார்க்கும் நிலையில் இருக்க மாட்டார். பிறகு நான் நந்தவனத்திற்கு சென்று அன்றைய பணியை துவக்குவேன்.

அன்று அப்படித்தான் பணியை துவக்கி மதியம் நெருங்கும் வேளையில் ஒரு முனகல் சப்தம் கேட்டது. அரளிச்செடியின் அருகே அழகான ஒரு நாய்க்குட்டி. பிறந்து சில மாதங்கள் ஆனதன் சுவடுகளுடன் மிகவும் மென்மையாக வலம் வந்து கொண்டிருந்தது.

அதன் துள்ளலும், ஓட்டமும் எனக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தின. அதற்கு சில உணவுகளை கொடுத்தவுடன் என்னுடன் மிகவும் நெருங்கியது அந்த நாய்க்குட்டி.



ஒரு நாள் மதிய உணவுக்காக நெடுஞ்சாலையை தாண்டி இருக்கும் ஆஸ்ரமத்தின் சமையலறைக்கு சென்றுவிட்டு வரும்பொழுது தான் கண்டேன். சமையலறை வாசலில் நாய்க்குட்டி. உணவை தேடி வந்திருந்தது.

அதற்கு உணவளித்துவிட்டு நான் மறுபுறம் சாலையை கடக்க எத்தனிக்கும் பொழுது நாயும் என்னுடன் வரத்துவங்கியது. நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகமாக இருந்ததால் நாய்க்குட்டியை கையில் எடுத்துக்கொண்டு சாலையை கடந்து நந்தவனம் நோக்கி சென்றேன்.

“தட்” எதிர்பாராத விதமாக அந்த அடி என் முதுகில் விழுந்தது.

மரண வலி.

திரும்பிப்பார்த்தேன். வேதானந்தகிரி நின்று கொண்டிருந்தார்.

தனது கையில் இருக்கும் கம்பு கொண்டு என்னை அடித்திருக்கிறார்.

புரியாமல் பார்த்தேன். வழக்கம் போல எங்கோ பார்த்தவாரே நடந்து சென்றுவிட்டார்.

அடியைவிட அதற்கு காரணம் தெரியாமல் இருந்தது அதிகமாக வலித்தது. சில நாட்கள் கடந்தது அவரின் பார்வையை தவிர்த்து வந்தேன். இங்கே வந்திருக்கக் கூடாது என்றுகூட நினைத்தேன்.

------------------------------------------------------

மற்றொரு நாள் மதிய உணவுக்காக நாய்குட்டியை கைகளில் ஏந்திய வண்ணம் எதிர்பக்கம் இருந்த சமையலறையை நோக்கி நெடுஞ்சாலையை கடக்க துவங்கினேன்.

“தட்” மீண்டும் அந்த மரண அடி.

இந்த முறை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
கண்கள் கலங்கியது.

எந்த சலனமும் இல்லாமல் நடந்து சென்றுகொண்டிருந்தார் வேதானந்த கிரி.
மனநிலை பாதிக்கப்பட்டவரிடம் சிக்கிக்கொண்டோம் என நினைத்தேன்.
அன்று சாப்பிடும் எண்ணமே இல்லாமல் நந்தவனத்திலேயே இருந்தேன்.

------------------------------------------

சில நாட்கள் கடந்தது...

ஒரு நாள் என் அறையில் இருந்து நந்தவனம் நோக்கி சென்றுகொண்டிருந்தேன்.

சாலையைக் கடக்கும் பொழுது அந்த கோரக்காட்சியை கண்டேன்.

வாகனத்தில் அடிபட்டு அந்த நாய் இறந்துகிடந்தது. அதன் தலைப்பகுதி கூழாகி ஈக்கள் அதன் மெல் மொய்க்க அந்த காட்சி என்னை மிகவும் கலக்கம் அடையச்செய்தது.


அடுத்த நொடி அந்த சப்தத்தை கேட்டேன்...

“தட்”

“தட்”

அந்த அடியின் சப்தம்..
ஆனால் என்மேல் அடிவிழவில்லை.

நாயின் நசுக்கப்பட்ட உடலின் அருகே நின்ற வேதானந்த கிரி தன் உடலில் கம்பு கொண்டு தானே அடித்துக்கொண்டிருந்தார். அவரின் கண்கள் நாயின் உடல் மேல் இருந்தது.

அன்று நந்துவாக இருந்த நான் முக்தானந்த கிரியாக என்னுள் மாற்றமடைந்தேன்.

--------------------------ஓம்----------------------------

குரு தன் சிஷ்யனுக்கு போதிப்பது இல்லை. அவனின் வாழ்வியலில் ஒரு சிறிய நெருப்பு பொறியை தூண்டுகிறார். அது ஆன்மீகமாக கொழுந்துவிட்டு எரிகிறது.

எப்பொழுதும் கருத்துக்களையும், விளக்கங்களையும் கொடுத்துக் கொண்டிருப்பவரை நாம் குருவாக நினைத்து பின் தொடர்ந்தால் , நம் கதி நந்துவின் நாயின் கதியை போன்றாகிவிடும்.அதாவது போதனையை மட்டும் குருவாகக் கொண்டால் நெடுஞ்சாலை என்ற வாழ்க்கையை கடக்கும் நாய் போல விபத்துக்கள் நேரும்.

குரு நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தி நம்மை சுயமாக ஆன்ம முன்னேற்றும் பெறச்செய்வார். அத்தகைய குரு இல்லாத தருணத்தில் கூட நம்மால் சமநிலை தவறாமல் இருக்க முடியும்.