“ஏண்ட சங்கரு அவரு கூடயாடா சுத்திக்கிட்டு இருக்க?
அவனே ஒரு பைத்தியக்கார பய..” இப்படி சண்முகம் சொல்லி முடிப்பதற்குள்
அவனின் மேல் பாய்ந்து கட்டிப்புரண்டான் சங்கர்.
இப்படி பார்ப்பவர்கள் எல்லாம் தன் குருவை பைத்தியம் என சொன்னாலும் சங்கருக்கு குருவின் மேல் ஏதோ ஒரு இனம் புரியாத நேசம் இருந்தது. தனக்கு மிக நெருக்கிய தன்மையை அவரிடம் உணர்ந்தான்.
அதனால் யாரேனும் அவரை பைத்தியம் என சொன்னால் அவனால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது. இத்தனை நாள் அவருடன் இருக்கும் சங்கருக்கு தன் குருவின் நடவடிக்கையில் எப்பொழுதும் சந்தேகம் வந்ததில்லை. அவர் மிகவும் அமைதியானவர் யாரிடமும் பேச மாட்டார்.
யோக பயிற்சியை பலருக்கு கற்றுக்கொடுப்பது ஆன்மீக இடங்களுக்கு செல்லுவது என அவரின் செயல்பாடுகள் விரல் விட்டு எண்ணிவிடலாம்.இப்படி இருக்க அவரை ஏன் பைத்தியம் என கூறுகிறார்கள் என சங்கருக்கு பிடிபடவில்லை.
இன்று குருவுடன் ஒரு ஆன்மீக பயணத்திற்கு தயாராகும் பொழுது நண்பன்
சண்முகத்துடன் இந்த தகறாரு ஏற்பட்டது. தன் உடமைகளை தயார் செய்துகொண்டு ஆசிரமம் வந்தடைந்தான் சங்கர். குருவுடன் மிகவும் கடினமான மலைக்கு பயணப்படப்போகிறான். அங்கே உச்சியில் இருக்கும் மலைக்குகையில் தரிசனம் செய்யலாம் என குரு சொன்னவுடன் கிளம்பிவிட்டான்.
செங்குத்தான மலையில் ஏழு மணிநேர பயணத்திற்கு பிறகு வெண்மேகம் சூழ்ந்த அந்த மலை உச்சியை அடைந்தார்கள். மேகக்கூட்டங்களுடன் குளிர்காற்று வீசும் சூழலில் குகை அமைந்திருந்தது. அந்த குளிர் உடலில் புகுந்து எலும்புகளை அசைத்துப்பார்த்தது. அங்கே இருக்கும் அருவியில் நீராடிவிட்டு, குகைக்குள் சென்று அமர்ந்தார்கள்.
குரு ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.
திடீரென ஒரு சப்தம் ...”ஹம்சோ ஹம்சோ ஹம்சோ”
அங்கே சங்கர் தன் குருசொல்லிக்கொடுத்த யோக பயிற்சியை குகையில் அமர்ந்து செய்து கொண்டிருந்தான்.
யோக பயிற்சி முடித்தபின் கண் திறந்த பார்த்த சங்கர் அங்கே குரு இல்லாததை கண்டு குகைக்கு வெளியே வந்தான்.
அங்கே குளிர்காற்று வீசும் குகையின் முகப்பில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்திருந்தார் குரு.
அவரின் கையில் ஒரு விசிறி இருந்தது. அதிக கோடைகால மதிய நேரத்தில் காற்று வீசிக்கொள்வதை போல விசிறியால் வீசிக்கொண்டிருந்தார்.
கம்பளி ஆடையுடன் கடும் குளிரில் நான் வெட வெடக்க இவரோ கையில் விசிறியுடன் இருப்பது சங்கருக்கு விசித்திரமாகப்பட்டது.
ஊர்காரர்கள் சொல்லுவது போல இவர் ஒரு மாதிரியோ என எண்ணம் ஏற்பட்டது. இவ்வாறு சங்கர் நினைத்து முடிக்கவும் குரு அவன் பக்கம் திரும்பி பார்க்கவும் சரியாக இருந்தது.
“என்ன...என்னை பார்த்தால் பைத்தியமா தெரியுதா?” என கேட்டு குரு பெரும் சப்தமாக சிரித்தார்.
இவரிடம் மலை உச்சியில் தனியாக வந்து மாட்டிக்கொண்டோமோ என்ற பயன் வந்தது சங்கருக்கு...
ஆழ்ந்த பார்த்த குரு பேசத்துவங்கினார்...
“சங்கர்..... உனக்கு யோக பயிற்சி கற்றுக்கொடுத்தது ஆன்மீக ஆற்றல் குறைவாக இருக்கும் இடத்தில் செய்து ஆன்மிக்க ஆற்றலை பெருக்கிக்கொள்ளத்தான். இங்கே வந்து யோக பயிற்சி செய்வது... நான் இங்கே இருந்து விசிறியால் வீசிக்கொள்வதை போலத்தான்.. மீனுக்கு தாகம் எடுக்கலாமா?” என சொல்லி மீண்டும் சிரித்தவாறே மலை இறங்கத்துவங்கினார்.
இவரையா பைத்தியம் என்கிறார்கள் என நினைத்தவாரே சங்கர் பின் தொடர்ந்தான்.
-------------------ஓம்--------------------------
குருவின் செய்கைகள் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ மிக சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கிறது.
இதில் சம்பந்தப்படாதவர்களுக்கு குருவின் செய்கைகள் பைத்தியத்தை போல தெரியலாம்.
கண் திறந்து கொண்டு இருட்டில் இருப்பவனுக்கே ஒளியை கையில் வைத்திருப்பவரின் செயல் அர்த்தமுள்ளதாக இருக்கும். இருட்டில் கண்மூடி தூங்குபவனுக்கு ஒளியை ஏந்தி இருப்பவர் பைத்தியம் தானே?
நாம் குருவின் அருகில் இருந்தால் சடங்குகளோ,ஆன்மீக பயிற்சிகளோ தேவையில்லை. குருவின் இருப்பே அனைத்தையும் செய்யும்.