Friday, May 1, 2009

சிவ பூஜையை விட சிறந்தது எது?

எழில் மிகு இயற்கை வளம் கொஞ்சும் அந்த ஊரில் ஒரு ஆசிரமம் இருந்தது.

ஸ்வாமி விஸ்வானந்தரை அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு உபதேசிப்பதும் , பக்தி ரசம் பொங்க பாடல்கள் பாடுவதும் அவரின் முக்கிய பணி. தனது சிஷ்யர்களுடன் ஆன்மீக பணி ஆற்றும் விஸ்வானந்தருக்கு சிவ பூஜை, சம்பிரதாயம் என தனது நித்திய கடமைகளில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்.

காலை பிரம்ம முஹூர்த்ததில் எழுந்ததும் தனது பூஜையை ஆரம்பித்தார் என்றால் பகல் பத்து மணிவரை தொடரும். மேலும் மாலை சந்தியாகாலத்தில் மறுபடியும் பூஜை. அவரது சிஷ்யர்கள் அவருக்கு உதவியாக பூஜையில் ஈடுபடுவார்கள்.
பூஜைக்கு தேவையான மலர்கள் மற்றும் அபிஷேக பொருட்களை தயாரிப்பது, பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்வது என அனைவருக்கும் வேலை சரியாக இருக்கும்.


பூஜை துவங்கியதும் சிவலிங்கத்தை பார்த்து அவர் அமர்ந்து கொள்வார்.
கைகள் அவர் நீட்ட அந்த தருணத்திற்கு தேவையான பொருட்களை சிஷ்யர்கள் அவருக்கு தருவார்கள். தவறான பொருட்களை தந்தாலோ அல்லது காலதாமதம் செய்தாலோ அவ்வளவுதான். ருத்திர பூஜை செய்பவர், ருத்திரனாகவே மாறிவிடுவார். அந்த சிஷ்யனின் கதி அதோகதிதான்.



இன்னிலையில் தான் சில மாதங்களுக்கு முன் நாதன் அவரிடம் சிஷ்யனாக சேர்ந்திருந்தான். கடைநிலையில் தொண்டாற்றி வந்த நாதன் படிப்படியாக முன்னேறி அவரின் பூஜைகளுக்கு உதவி செய்ய துவங்கினான்.

நாதனின் எளிமை, பணிவு விஸ்வானந்தருக்கு பிடித்திருந்தது. தனது பூஜைக்கான பணியை பிறரைவிட நேர்த்தியான முறையில் நாதன் செய்ததும் இதற்கு ஒரு காரணம்.

ஒரு நாள் பூஜையை ஈடுபட்டிருந்தார் விஸ்வானந்தர். என்றும் இல்லாதது போல அன்று சில தடங்கலை உணர்ந்தார் விஸ்வானந்தர். பூஜையில் மனது ஈடுபடவில்லை. ஏதோ யோசனையில் இருந்தார். தன்னை பார்க்க வந்த ஒருவர் தரக்குறைவாக திட்டியது தான் முக்கிய காரணமாக இருந்தது. நேற்று முதல் அவருக்கு மனதில் இது ஓடிக்கொண்டே இருந்தது. பலர் முன்னில் தன்னை அவமானம் கொள்ள செய்ததாக நினைத்தார்.

திடிரென தனது உடலை யாரோ தொடுவதை உணர்ந்த விஸ்வானந்தர் சுயநினைவுக்கு வந்தார். எதிரே நாதன் நின்று கொண்டு, “குருவே பூஜையை தொடராமல் என்ன யோசனை? தயவு செய்து தொடருங்கள்” என்றான்.


என்றும் இல்லாத கோபம் விஸ்வானந்தரை சூழ்ந்தது. நித்திய பூஜைக்காக ஆச்சாரமாக இருக்கும் என்னை ஏன் தொட்டாய்? உனக்கு என்னை தொடும் அருகதையை யார் தந்தது? சிவ பூஜையை பற்றி உனக்கு தெரியுமா? இதை தான் சிவ பூஜையில் கரடி என்பார்கள். சரியான கரடி நீ. என் முன்னே நிற்காதே என கோபம் கொப்பளிக்க தத்தினார்.

அமைதியாக பார்த்த நாதன் கூறினான்.. “ குருவே ஆச்சாரம் என்பது ஏது?. நேற்று ஒருவன் சொன்ன கடும் சொல்லை மனதில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் உடல் ஆச்சாரம் பற்றி சொல்லிகிறீர்களா அல்லது மன ஆச்சாரம் பற்றி சொல்லுகிறீர்களா? உங்களுக்குள் இருக்கும் சிவனை பூஜித்திருந்தீர்கள் என்றால் அவனின் அவமான சொற்காள் உங்களுக்கனதல்ல சிவனுக்கானது என இருந்திருப்பீர்கள். யாராவது புகழ்ச்சியான சொல்லை கூறியிருந்தாலும் உங்கள் நிலை சமநிலை தவறி இருக்காது. சிவ சொல் இருக்க வேண்டிய மனதில் அவச்சொல் இருக்கலாமா?” என்றான்.


ஏற்கனவே கோபத்தில் இருந்த விஸ்வானந்தர் கோபத்தின் உச்சத்திற்கு சென்று, “தினமும் இரு வேளையும் சிவனை பூஜிக்கும் என்னை பார்த்து விமர்சிக்கும் தன்மை உனக்கு யார் அளித்தார்கள்? எனக்கு பக்தி போதவில்லை என கூறுகிறாயா? எனது மனதில் இருப்பதை நீ சொல்லுகிறாய் ஆச்சரியம் தான். பூஜை செய்யாத உனக்கு எப்படி இந்த ஆற்றல் வந்தது? நீ மாயக்காரனா?” என்றார்.

“நான் மாயன் அல்ல குருவே. பல மணி நேரம் பூஜை செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. ஒவ்வொரு ஷணமும் குருவாகிய உங்களை எனது மனதில் பூஜிக்கிறேன் இதை விட வேறு பக்தி என்ன வேண்டும்? என்னை பொருத்தவரை இறைவனை காட்டிலும் குருவான நீங்களே எனக்கு முக்கியம். நீங்கள் சிவனை பூஜிக்க நான் உங்களை பூஜித்ததன் விளைவே இந்த விமர்சனம் தவறிருந்தால் மன்னிக்கவும்”
என்றான் நாதன்.

நாதனின் குருபக்தியை உணர்ந்த விஸ்வானந்தர் அவனை ஆரத்தழுவினார்.

-------------------ஓம்--------------------------


தினமும் நான்கு வேளை குளிப்பதாக சொல்லும் பக்திமான்களே தவளை நித்தமும் நீரில் இருக்கிறது அது உங்களை விட ஆச்சரமானதல்லவா? எனும் சிவவாக்கியரின் பாடல் நினைவுக்கு வருகிறது.

உள் பூஜை செய்யாமல் பிறர் பார்வைக்காக வெளிப்பூஜை செய்து என்ன பயன்?


மானச பூஜை செய்ததால் பூசலார் மனதில் குடிகொண்டான் ஈசன்.
அரசனுக்கு கிட்டாதது ஆண்டிக்கு கிட்டியது.


குரு பக்தி இருக்கும் பட்சத்தில் பிற பக்திகள் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களே.

7 comments:

Anonymous said...

உண்மைதான்...பூஜை புனஷ்காரம் என்று வரும் போது, ஆச்சாரத்திற்க்கும் கடை பிடிக்கும் விதி முனற்களுக்கும் முக்கியதுவம் கொடுக்கும் போது இரைவனை மற‌ந்து விடுகிறார்க‌ளோ. அவர்கள் க‌ண்முன் நிற்பது அசாரமும் அனுஷ்டான‌மும் மட்டுமே..இனற‌வனே முன்வந்து நின்றால் கூட கண்டுகொள்ளமாட்டார்கள்.

Unknown said...

swamiji

நிகழ்காலத்தில்... said...

\\உங்களுக்குள் இருக்கும் சிவனை பூஜித்திருந்தீர்கள் என்றால் அவனின் அவமான சொற்காள் உங்களுக்கனதல்ல சிவனுக்கானது என இருந்திருப்பீர்கள்.\\

மிகச் சரியான வார்த்தைகள்

வாழ்த்துக்கள்..

இது நம்ம ஆளு said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Nambi Aroorar said...
This comment has been removed by a blog administrator.
வெற்றிவேல் said...

பக்தி மாறாத சீடன்...