Sunday, September 7, 2008

சிவன் எங்கே இருக்கிறார்?

ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது...

மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி.

அவனது கண்கள் கலங்கி இருந்தன... தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்...”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களிடம் பணிவிடை செய்வதிலும் , உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்களே. இது நியாயமா?”..

அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கி குரு அவனை தீர்க்கமாக பார்த்தார்..”விஸ்வநாதா..! சாஸ்திர ஞானத்தை மட்டும் தான்
என்னால் உனக்கு வழங்க முடியும். உனக்கு பிரம்ம ஞானத்தை வழங்க குரு ஒருவர் காத்திருக்கிர்றார் . காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக...வளர்ச்சி அடையும் வரைதான் புழு கூட்டில் வசிக்க முடியும். அதன் பின் வண்ணத்து பூச்சியாக மாற கூட்டை கடந்து சென்றாக வேண்டும்...சென்று வா”...என்றார் குரு.


பிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி..
காசியை அடைந்து அங்கு அவன் பெயரில் வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்துவிட்டு , நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான்.

வனத்திற்கு உள்ளே இரு நாட்களாக நடந்தும் யாரும் கண்களுக்குதட்டுபடவில்லை. தனது குரு அனுப்பியதன் நோக்கம் புரியாமல் குழப்பம் மேலோங்க பயணத்தை தொடர்ந்தான். பசியும் தாகமும் அவனை சோர்வடைய செய்தது. வழியில் தென்பட்ட தடாகத்தில் நீர் அருந்த குனிந்தான்.

அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அருகில் இருந்த கோவில் கோபுரம் நிழலாகதெரிந்தது... நடுக்காட்டில் கோவில் இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் அதை அடைந்தான்..

கோவில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் பேச துவங்கியது.....
”வா விஸ்வநாத உனக்காகத்தான் காத்திருக்கிறேன்...உனது குரு என்னை பார்க்கவே அனுப்பினார்..”

தனது ஞான குருவை காணும் ஆவலில் கோவிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன்.

அங்கே கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது...


பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர்...கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்து கொண்டும் படுத்திருந்தார்.

விஸ்வநாதனுகோ கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. “எனது குருஉங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள். ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வைக்க கூடாதா?” என்றான்.

அந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக்கொள்ளாமல்அவனை பார்த்து கூறினார்..”ஓ நீ அவ்வளவு பக்திமானா? உனக்குவேண்டுமென்றால் எனது கால்களை எடுத்து வேறு இடத்தில் வை. என்னால் கால்களை எடுக்க முடியாது..” என்றார்.

கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன் , அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்ற முயற்சிசெய்தான்.
கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தது...

பல இடங்களில் மாறி மாறி வைத்தான்...அனைத்து இடத்திலும் சிவலிங்கம்தோன்றின...

கடைசியல் முடிவுக்கு வந்தவனாக...

தனது தலையில் அவரின் கால்களை வைத்து கொண்டான்...

தானே சிவமானான்...

----------------------------------ஓம்-----------------------------
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி
ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி
ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி
ஞானமே திண்சித்தி முத்தியே.
திருமந்திரம்
- 1598

ஞானகுருவின் திருவடி நம்மை முழுமையான பரப்பிரம்ம நிலைக்கு கொண்டுசெல்லும். வேத நூல்களோ அல்லது தத்துவமோ எட்ட முடியாத எல்லையை குருவின்கருணை எளிதில் எட்டிவிடும்.


Friday, September 5, 2008

பிரம்ம ஞானத்தை தேடு ...


கங்கைக்கரை பகுதி.....மெல்லிய தேவலோக இசை போன்ற பாடல் காற்றில் கசிந்து வந்தது....


ஒளிரும் தேகமும் ஞானம் ததும்பும் முகமுடன் பிரம்ம ஞானி அமர்ந்திருந்தார்.
அவரின் ஆசனத்தை சுற்றி சிஷ்யர்களும் பொதுமக்களும் ஆனந்தமயமான நிலையில் இருந்தனர்.

இறைநாமத்தை சங்கீதமாக ஒரு குழு இசைத்துக் கொண்டிருந்தது.
இவை அனைத்தையும் மெளன சாட்சியாக ரசித்துக்கொண்டிருந்தாள் கங்கை.. தேவலோகத்திலிருக்கும் அனைவரும் தங்கள் இடத்தை விட்டு அங்கு வந்துவிடலாம் என எண்ணும் அளவிற்கு தெய்வீக சூழ்நிலையை அங்கு காண முடிந்தது.

தன்முன்
னே ஓர் உருவம் நிழலாடுவதை கண்ட ஞானகுரு கண்களை திறந்தார். எதிரில் பட்டுவேஷ்டி அணிந்து உடல் முழுவதும் சந்தனம் பூசிய நிலையில் ஒருவர் வணங்கி நின்றார். கைகளில் தங்கத்தால் ஆன தட்டும் அதில் வைரம் வைடூரியம் என விலைமதிக்க முடியாத பொருட்கள் நிறைந்து வழிந்தது..

பணக்கார தோரணை கொண்ட அந்த மனிதர் ஞானகுருவை பார்த்து..” உலக மக்களை உயர்நிலைக்கு அழைத்து செல்லும் குருவே...உங்களிடம் எத்தனையோ முறை பிரம்ம ஞானத்தை
உபதேசிக்க கேட்டேன் ஆனால் நீங்கள் மனம் இளகவில்லை. என்னிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத செல்வத்தை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். எனக்கு பிரம்ம ஞானத்தை உபதேசியுங்கள்...” என கேட்டார்.


ஞான குரு மெல்ல எழுந்து தனது காவி துணியில் அனைத்து செல்வங்களையும் போட சொன்னார். அவரின் காவித்துணியில் அனைத்தும் போடப்பட்டதும் அதை மூட்டையாக கட்டி, தலைக்கு
மேல் உயர்த்தி யாரும் எதிர்பாராத வண்ணம் கங்கையில் எறிந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பணக்காரர் கங்கை நீரில் பாய்ந்து அந்த மூட்டையை பிடிக்க நீந்தினார்.


கங்கையின் வேகத்திற்கு மூட்டையும் அவரும் அடித்துச்செல்லப்பட்டார்கள்.
அதுவரை கண்களை மூடி அமர்ந்த்திருந்த சிஷ்யர்கள் நீரில் செல்வந்தர் குதித்த சப்தம் கேட்டு கண்களை திறந்து பார்த்தனர்.

குழப்பம் கொண்ட சிஷ்யர்கள் குருவிடம் கேட்டார்கள்...”குருதேவா என்ன நடக்கிறது? அவர் கங்கையில் குதித்து என்ன தேடிக்கொண்டிருக்கிறார்..?”


தனது ஆசனத்தில் அமந்த ஞான குரு புன்புறுவலுடன் சிஷ்யர்களை பார்த்து கூறினார்...

”அவர் பிரம்ம ஞானத்தை தேடுகிறார்”


----------------------ஓம்------------------------------------------------


நம்மில் பலர் ஆன்மீக உயர்வு நிலையை பணத்தை வழங்குவதன் மூலம் பெறலாம் என எண்ணுகிறார்கள்.

என்னிடத்தில் பலரும் தீட்சை தாருங்கள் அதற்காக நன்கொடை தருகிறோம் என கேட்டதுண்டு.
அப்பொழுது ஞானகுரு கதை எனக்கு நினைவு வருவதுண்டு.

செல்வந்தருக்கு விலைமதிக்க முடியாத செல்வம் பிரம்ம ஞானத்திற்கு ஈடாக தெரிந்ததால்
குருவும் அது பணக்காரனின் பிரம்ம ஞானம் என குறிப்பிடுகிறார்.

கடவுளை பார்க்க கோவிலில் “சிறப்பு” நுழைவாயில் வழியாக செல்லுவதிலிந்து ஆரம்பிக்கிறது நமது ஆணவ செருக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

Thursday, September 4, 2008

ஞானிக்கும் சித்தருக்கும் என்ன வித்தியாசம்?

இளஞ்சூரியன் தனது கதிர்களை சுருக்கிக்கொண்டிருக்கும் மாலை வேளை. தனது சிஷ்யர்களுடன் பயணப்பட்டு கொண்டிருந்தார் பிரபுலிங்கா எனும் ஞானி.
கோகர்ணம் எனும் அழகிய நகரத்தை அடைந்தார்கள்.


கடற்கரையோரம் அமர்ந்து சிஷ்யர்களுடன் சத்சங்கமித்தார் ஞானபுருஷர். தனது சிஷ்யர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரிடமிருந்து விரிவானதும் ஆழமானதுமான பதில்கள் வெளி வந்தவண்ணம் இருந்தது.


அவரின் முதன்மை சிஷ்யன் பணிவுடன் அவர் முன்வந்து கேள்வி கேட்க துவங்கினான்..

“சத்குரு பல சித்துகள் கைவரப்பட்ட சித்தர் கோரக்நாத் இந்த ஊரில் வாழ்ந்து வருகிறார். அவரின் ஆன்மீக நிலைக்கும் உங்கள் ஆன்மீக நிலைக்கும் என்ன வித்தியாசம்?”

“அனந்தா... எனக்கு எப்படி அவரின் நிலை தெரியும்? ”...தனது உடலை சுட்டிகாட்டி தொடர்ந்தார் ஞானி, “...இதற்கு இதை தவிர அன்னியமான வஸ்து கிடையாது”.

சிஷ்யனுக்கோ அவரின் பதில் திருப்தியை கொடுக்கவில்லை. குருவுக்கு தெரியாமல் சித்தர் கோரக்நாதை சந்தித்து தனது குரு சொன்ன கருத்துக்களை கூறினான்.

எனது அருமை தெரியாமல் உனது குரு அவ்வாறு கூறி இருக்கலாம். நாளை அவர் இருக்கும் இடத்திற்கு நான் வந்து சந்திக்கிறேன். அப்பொழுது அவர் என்னை பற்றி அவர் மட்டுமல்ல அனைவரும் புரிந்துகொள்வீர்கள்” என்றார் கோரக்நாத் சித்தர்.


அதிகாலை நேரம் தனது சிஷ்யர்களுடன் தியானத்தில் இருந்தார் ஞானி பிரபுலிங்கா... சித்தர் அவரின் இருப்பிடத்திற்கு வந்தார்...


கண்களை திறந்து பார்த்த ஞானி அவரை வரவேற்று அமரவைத்தார்.அவர் வந்த காரணத்தை கேட்டார்.

“எனது பெயர் கோரக்நாத், என்னை பற்றி தெரியாது என உங்கள் சிஷ்யர்களிடம் சொன்னீர்களாமே? என்னை பற்றி கூறவே வந்திருக்கிறேன். அஷ்டமா சித்தியை கைவரப்பட்டவன் நான். எனது உடலை காயகல்பமாக்கி இருக்கிறேன்...” என கூறியவாரே தனது இடுப்பில் வைத்திருந்த வாளை எடுத்து தனது மார்ப்பில் குத்தினார்....


அனைத்து சிஷ்யர்களும் அந்த பயங்கரமான செயலால் அதிர்ச்சி அடைந்து எழுந்து நின்றார்கள்...
ஆனால் கோரக்நாத் கையில் இருந்த வாள் வளைந்து போயிற்று. அவர் உடல் காயகல்பம் ஆனதால் வாளைவிட கடினமாக மாறியிருந்தது.

கோரக்நாத் ஞானி பிரபுலிங்காவை பெருமையுடன் பார்த்தார்...அவர் பார்வையில் உன்னால் இதுபோல முடியுமா என்று கேட்பது போல இருந்தது.

தனது சிஷ்யர்களிடம் வாள் கொண்டு வர சொன்னார். அதை கோரக்நாத்திடம் கொடுத்து தனது உடலில் பாய்ச்ச சொன்னார்....


முழுவேகத்துடன் வாள் வீசினார் கோரக்நாத்.... வாள் பிரபுலிங்காவின் உடலில் புகுந்து மறுபுறம் வெளியே வந்தது...
மெல்ல வாளை சுழற்றினாலும் காற்றில் சுழலுவதை போல சுழன்றது...அவர் உடல் அங்கு இருந்தாலும் வாள் அதை தொட முடியவில்லை...


ஞானி பிரபுலிங்கா மெல்ல புன்புறுவலுடன் கூறினார்....”சித்த நிலை என்பது உனது சித்தத்துடன் நின்றுவிடுவது...ஞான நிலை என்பது நான் எனும் அகந்தையை வேறுடன் எடுத்து சித்தத்தை கடந்து சுத்த வெளியில் இருக்கும் தன்மை... ஒருவன் ஞானம் அடைந்ததும் ஆகாசத்தை போல ஆகிவிடுகிறான்..அவனை எதுவும் தடுக்கவோ அசுத்தப்படுத்தவோ முடியாது...ஞானி எல்லை அற்றவன்...சித்தன் உடல் எனும் எல்லைக்கு உட்பட்டவன்..”

சித்தர் கோரக்நாத் ஞானியின் கால்களில் பணிந்தார்...தனக்கு ஞானத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்...

சத்குரு பிரபுலிங்கா பிரம்ம சொரூபத்தை அவருக்கு அளிக்கதுவங்கினார்...


----------------ஓம்---------------

ஆன்மீகத்தை தேடிவரும் பக்தர்கள் அனைவரும் சரியான பாதையில் செல்வதில்லை.
ஞானத்தை தேடாமல் சிலர் காட்டும் போலி வித்தையில் மதிமயங்கி மாயத்தில் விழுகிறார்கள்.

வாயிலிருந்து லிங்கம் எடுப்பவருக்கும் , கடன் தொல்லை நீங்க தீட்சை தருகிறேன் என விளப்பரம் செய்பவர்களிடம் செல்லும் மக்கள் உண்மை நிலையை விளக்கும் ஞானிகளிடன் செல்வதில்லை. அந்த ஞானி சமாதி அனதும் அவர் சமாதியில் தூமம் காட்டும் இழிநிலையிலேயெ இருக்கிறார்கள்..

உள்ளத்தில் உள்ளே உளபல தீர்த்தங்கள் என திருமூலர் கூறியவாக்கை கருத்தில் கொண்டு பிரம்ம ஞானத்திற்கு பாடுபடுவோம்...

Tuesday, September 2, 2008

தூரப்போ....


குகன் எனும் ஒரு பாமர விவசாயி வாழ்ந்துவந்தான் . சிறிதளவு படிப்பறிவு இருந்ததால் பல ஆன்மீக புத்தகங்களை படித்தான். அதன்விளைவாக தனக்கும் ஆன்மீக ரீதியான முன்னேற்றம் ஏற்பட்டு முக்தி அடையவேண்டும் எனஎண்ணினான். அந்த ஊரில் உள்ள கோவில் அர்ச்சகரை அணுகி ஆன்மீகவாழ்க்கைக்கு என்ன செய்யவேண்டும் என விசாரித்தான்.

"நீர் நல்ல அதிர்ஷ்டகாரந்தானையா ... பக்கத்தூரில் ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்தா ஸ்வாமிகள் அவர்களே விஜயம் பண்ணிருக்கார் . அவர்கிட்ட போன மந்திரஉபதேசம் செய்வார். அதை ஜபிச்ச போதும் உனக்கு எல்லாம் கிடைக்கும். சுவாமிகோபக்காரர் , சுவாமிகள் கிட்ட போகும்போது பவ்யமா அடக்கமா போகணும். உபதேசம் வாங்கறதுக்கு பதிலா சாபம் வங்கிடாதே சரியா? "..என கூறியஅர்ச்சகரை பார்த்து நன்றி கூறிவிட்டு பக்கத்து ஊருக்கு பயணமானான்.

குகன் எதிர்பார்த்ததை விட அங்கு மக்கள் கூட்டம் கடல் போல திரண்டிருந்தது. தனது வீட்டில் விளைந்த சிறிய மாம்பழங்களை கணிக்கையாக கொடுக்க எடுத்துவந்திருந்தான். சுவாமிகளை நெருங்க முடியுமா என சந்தேகம் கொள்ளும்வண்ணம் மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்தது. பலமணிநேரம் காத்திருந்தான், சுவாமிகளை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

சுவாமிகளின் குளத்தில் குளித்து விட்டு பூஜைக்கு வரும் வழியில் கூட்டம்குறைவாக இருப்பதை கண்டு வேகமாக தரிசிக்க ஓடினான். சுவாமிக்கு அருகில்வரும் சமயம் குகன் கால் தடுக்கி சுவாமிகளின் பாதத்தில் விழுந்தான். மாம்பழங்கள் திசைக்கு ஒன்றாக பறந்தன...

அதைகண்டு திடுக்கிட்ட சுவாமிகள், சினம் கொண்டு "தூர போ " எனஆத்திரத்துடன் காலால் அவனை எட்டி உதைத்தார்.

வெள்ளை மனம் கொண்ட குகன், சுவாமி தனக்கு உபதேசம் அளித்துவிட்டார் எனநம்பினான். தன்னை காலால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்ததாகவும் "தூரப்போ" என்ற மந்திரம் கொடுத்ததாகவும் முடிவுசெய்து யாரும் தொந்திரவுசெயாதவண்ணம் வனத்தில் சென்று தவம் இருக்க துவங்கினான்.

பல வருடங்கள் கடந்தது...

ஒருநாள்....வனத்தில் ஒரு இடத்தில் கரையான் புற்றுக்கு உள்ளே இருந்துதொடர்ந்து ...'தூரப்போ" எனும் மந்திர ஒலி கேட்டவண்ணம் இருந்தது.
திடீரென தனது உடலில் ஏற்பட்ட அதிர்வால் கரையான் புற்றை உடைத்துகொண்டு வெளிப்பட்டார் ஒரு முனிவர்.

'தூரப்போ" எனும் மந்திரம் அவருக்கு ஸித்தி ஆயிருந்தது. தனது உடலை நீட்டி சரி செய்து நடக்க துவங்கினார். வழியில் காட்டு மரம் ஒன்று வேருடன் விழுந்துபாதையை மறைத்துக்கொண்டிருந்தது.

பிரம்மாண்டமான அந்தமரத்தை கூர்ந்து பார்த்து கூறினார் "தூரப்போ..."

பல யானைகள் கட்டி இழுக்க வேண்டிய அந்த மரம், அவரின் ஒரு சொல்லுக்குகட்டுப்பட்டது போல பல அடிதுரம் தூக்கி எறியப்பட்டது.

தனது மந்திரம் வேலை செய்வதை உணர்ந்தார் குகன் எனும் மாமுனி.
கட்டிற்கு அருகில் இருக்கும் ஊருக்கு பயணமானார். அங்கு எளிமையாக தனதுவாழ்கையை அமைத்து கொண்டார்.

யார் வந்து தனது கஷ்டத்தை கூறினாலும் , அந்த கஷ்டத்தை மனதில் நினைத்து ஒருமுறை தனது மகாமந்திரத்தை ஜெபிப்பார்...."தூரப்போ" உடனடியாகஅவர்களின் கஷ்டம் விலகிவிடும்.

நோயுற்றவர்கள் வந்தால் நோயை நினைத்து .."தூரப்போ" என்றதும் உடனடியாககுணமடைவார்கள். மெல்ல தூரப்போ சுவாமிகளின் புகழ் பரவ ஆரம்பித்தது.

வயது முதிர்த நிலையில் ஒரு துறவி துரப்போ சுவாமிகளை பார்க்க தனதுசிஷ்யர்களுடன் வந்திருந்தார். தனக்கு உடல் முழுவதும் ஒருவித ரோகம்வந்திருப்பதாகவும், துரப்போ சுவாமிகளின் சக்தியை கேள்விப்பட்டு வந்ததாகவும் தன்னை குணப்படுத்தவேண்டும் என வேண்டினார்.

முதிர்ந்த துறவியை கண்ட துரப்போ சுவாமிகளின் எழுந்து அவரின் கால்களில்விழுந்தார். "....மகா குரு ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்
தா சுவாமிகள் அவர்களே நீங்கள் தான் எனது குரு. உங்கள் உபதேசத்தால் தான் இந்த சக்தி கிடைத்தது. நீங்கள் வேண்டுவதா? கட்டளை இடுங்கள் உங்கள் சிஷ்யன் நான் உடனேசெய்கிறேன் என்றார்.." துரப்போ சுவாமிகளின்.

தனது மந்திரத்தை மீண்டும் மனதில் நினைத்து குருவை பார்த்தார். அவர் உடலில்உள்ள ரோகம் நீங்கியது.

பக்தனந்த சுவாமிகளுக்கு ஒரே குழப்பம், இவருக்கு நாம் உபதேசித்தோமா எனசந்தேகம் கொண்டு துரப்போ சாமிகளிடம் கேட்டார்.

தனக்கு நேர்ந்த அனுபவங்களை கூறினார் துரப்போ சுவாமிகள்.

தனது ஆணவத்தாலும் கோபத்தாலும் தவறு நடந்ததை உணர்த்த பக்தனந்தசுவாமிகள் ...."துரப்போ சுவாமிகளே எனது அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் அன்று உங்களிடம் அப்படி நடந்து கொண்டேன். எனது ஆணவம் என்னை விட்டுபோக என் ஆவணத்தை பார்த்து தூரப்போ எனும் மந்திரத்தை சொல்லி இந்தபாவிக்கு மோட்சம் அளியுங்கள் .." என வேண்டினார்.

"எனது குருநாதா...எனக்கு நீங்கள் தீங்கு எதையும் விளைவிக்க வில்லை. உங்களை ஆணவம் கொண்டவராக பார்க்கும் அளவுக்கு நான் வளர்ந்துவிடவும் இல்லை. நீங்கள் அளித்த மந்திரம் உங்களையும் என்னையும் இணைத்துநன்மையையே ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் காலத்தில் உங்களின் எளியசிஷ்யனாக இருக்க ஆசைப்படுகிறேன்...இதற்கு நீங்கள் அனுமதி அளிக்கவேண்டும்..." என தூரப்போ சுவாமிகள் வேண்டினார்.

பின்பு தூரப்போ சுவாமிகள் சப்தமாக கூறினார்..."எனக்குள் இருக்கும் மந்திர ஆற்றலை பார்த்து கடைசியாக சொல்கிறேன் ...

"தூரப்போ"....

அங்கே துரப்போ சுவாமிகள் மறைத்து குகன் நின்று இருந்தான்...
தனது குரு பக்தனந்
தா வுடன் எளிய சிஷ்யனாக பயணமானான் குகன்.

-------------------------ஓம்--------------------------

குரு நிலையை உணர்தவர்கள் அனைத்தையும் துறக்க முடியும்...
குருவை ஆழமாக பூஜிப்பவர்கள் தான் குருவை உணர முடியும்... குரு அருள் பெறமுடியும்...

தெளிவு குருவின் திருமேனி காண்டல் என திருமூலர் கூறிய வாக்கு மிகவும் சக்திவாய்ந்தது தானே?