Friday, April 26, 2013

மீன் முள்


 இரண்டு பக்கமும் பசுமையான மரங்கள் இருக்க தென்னை மரங்கள் தலை குனிந்து முகம் பார்க்கும் கேரளாவின் நீர் நிறைந்த ஆற்றங்கரை அது. 

ஆற்றின் ஒரு பக்கம் மக்கள் அதிகம் வரும் புகழ் பெற்ற கோவிலும் ஆற்றின் மறு கறையில் அமைதியே உருவான ஆசிரமமும் இருந்தது.

தினமும் ஸ்வாமி விஷ்ணுதேவானந்தர் ஆற்றை கடந்து மறுகரையில் இருக்கும் கோவிலுக்கு செல்லுவார். பிறகு மீண்டும் ஆசிரமத்திற்கு திரும்புவார். இது அவரின் தினசரி கடமைகளில் ஒன்றாக இருந்தது. இக்கடமையை மிகவும் சிறப்பாக அவருக்கு உதவும் பக்தி உள்ளம் ஒன்று இருந்தது. பக்தனின் பெயர் படகோட்டி சங்கரன்.

சங்கு மாஸ்டரே என்றும் பலராலும் அழைக்கப்படும் சங்கரனுக்கு சிறுவயது முதலே படகு செலுத்துவது தான் தொழில். ஆவணி மாதம் நடக்கும் படகு போட்டி தவிர வேறு காலத்தில் அதிகமாக சம்பாதியம் செய்ய முடியாது. சங்குவை போலவே மெலிந்த கரிய நிற படகு அவனின் சொத்து. நீண்ட கழியை கறையில் ஊன்றி தள்ளி படகை செலுத்துவான். லாவகமாக படகின் முனையிலிருந்து நடந்து கழியை ஆற்றுக்குள் செலுத்தி படகை ஓட்டும் சங்கரனை ஆற்றின் கரையில் இருப்பவர்கள் அவ்வளவு எளிதில் பார்க்காமல் போக முடியாது.

தினமும் காலை ஆறு மணிக்கு படகில் காத்திருப்பான் சங்கரன். ஸ்வாமிஜி தனது ஆசிரமத்திலிருந்து வருவதை பார்த்ததும், எழுந்து படகை கறைக்கு சமீபமாக வைத்துக்கொள்வான். 

ஸ்வாமிஜி படகின் அருகே வந்ததும், அவரின் மென்மையான பாதங்களை தன் படகில் வைக்க கை கொடுத்து உதவுவான். வெள்ளம் அதிகம் இருக்கும் காலங்களில் ஸ்வாமிஜியின் கால்களை அவனின் தொடையில் வைத்து ஏறி படகில் அமற துணைபுரிவான் சங்கரன்.

நேற்று வழக்கமாக வரும் ஸ்வாமி வரவில்லை. ஆசிரமத்தில் ஏதோ விழா என பேசிக்கொண்டார்கள்.  ஆசிரமத்திற்கு வந்த பக்தர்களை மறுகரைக்கு கொண்டு செல்லும்  வேலையில் மூழ்கிப்போனான் சங்கரன்.

மறுநாள் ஸ்வாமிஜி வருவாரா என காத்திருந்தான் அன்று ஆற்றில் வெள்ளம் மிகவும் அதிகமாக இருந்தது. ஸ்வாமிஜி ஆசிரமத்திலிருந்து வெளிப்பட்டார். படகை நோக்கி நடந்தார். ஆற்றின் ஓரத்தில் படகை கொண்டு வந்து ஸ்வாமியின் தாமரை போன்ற பாதத்தை தன் தொடையில் வைத்து ஏறி அமற உதவினான் சங்கரன்.

பிறகு தாவி ஏறி கழியை எடுத்து படகின் ஓரத்தில் நின்வாறு படகை செலுத்தி மறுகரையை நோக்கி புறப்பட்டான்.

படகு ஆற்றின் மையத்தில் வரும் பொழுது ஸ்வாமிஜியை பார்த்து சங்கரன் சொன்னான், “ஸ்வாமி நேத்து நிறைய பக்தர்கள் வந்திருந்தாங்கனு நினைக்கிறேன். எனக்கும் அவங்களை போல ஜபம் தியானம் செய்ய ஆசைதான்.” என நிறுத்தினான்.

கோவிலை நோக்கி பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணுதேவானந்தர் சங்கரனை நோக்கி திரும்பினார். மெல்ல இதழ் பிரித்து கூறினார், “சங்கரா நீயும் வரலாமே, உனக்காக எப்பொழுதும் தனி இடம் உண்டு.”

“வரலாம் சாமி, ஆன என் பொண்டாட்டி விடமாடாள். இல்லைனா நானும் இவங்கள போல ஆசிரமத்திற்கு வருவேன்..”

“ஏன் அவங்க விடமாட்டாங்க?”

“சாமி புதுசா கேக்கிறீங்களே? ஜபம் தியானம்னு செஞ்சு நான் புள்ள குட்டிய விட்டுட்டு ஆசிரமத்திலேயே வந்துட்டேன்னா? அவளும் படிக்காதவ என்ன செய்வா? அந்த பயந்தான் சாமி”

ஸ்வாமி மீண்டும் தலையை கோவிலை நோக்கி திருப்பிக்கொண்டார். கரை அடைந்து மீண்டும் ஆசிரமம் செல்லும் வரை எதுவும் பேசவில்லை.

மறுநாள்...பொழுது புலர்ந்தது.. உடலை சிரசாசனத்தில் வைப்பதை போல பெரிய முள்ளும் சின்ன முள்ளும் கடிகாரத்தில்  ஆறு மணியை காட்டியது.

சங்கரன் ஆற்றின் கரையில் ஸ்வாமிக்காக காத்திருந்தான். ஸ்வாமி அருகில் வந்ததும் வலது காலை மடக்கி அவரின் கால்களை வைக்க ஏதுவாக படகின் அருகே நின்றான். 

ஆனால் வழக்கத்திற்கு சங்கரனை தவிர்த்துவிட்டு மாறாக ஸ்வாமிஜி படகில் அவராகவே ஏறி அமர்ந்தார். ஸ்வாமியின் இந்த நடவடிக்கையால் மிகவும் சங்கடமடைந்தான் சங்கரன். 

இதைவிட அவனுக்கு ஆச்சரியமாகவும் இயல்புக்கு மாறாகவும் கண்டது ஸ்வாமி  கால்களில் அணிந்திருந்த செருப்பு...!

இத்தனை வருடங்களில் அவர் செருப்பு அணிந்து பார்த்ததே இல்லை. தினமும் அவர் கோவிலுக்கு செருப்பு இல்லாமல் இவனின் தொடையை படியாக கொண்டு ஏறி இறங்கி வருவதால் அவர் செருப்பு அணிந்து பார்த்ததே இல்லை. இவ்வளவும் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால் கலங்கினான் சங்கரன். மெளனமாக படகை செலுத்துபவன் வழக்கத்திற்கு மாறாக நேற்று பேசியதால் வந்த வினையோ என குற்ற உணர்ச்சி பெருகியது.

 கண்ணீர் மல்க, “ஸ்வாமிஜி நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னிச்சிருங்கோ, நீங்க இன்னைக்கு ஏதோ போல இருக்கிறது எனக்கு ஏதோ மாதிரி இருக்கு” என தன் உணர்ச்சிகளை வார்த்தையாக முடியாமல் விவரித்தான்.

“சங்கரா ஏன் ஏதோ போல இருக்கு? எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே?” என தெரிந்து கொண்டே சொன்னார் ஸ்வாமிஜி.

“ஸ்வாமிஜி எப்பவும் செருப்பு போட்டுக்கிட்டு படகில வரமாட்டீங்க. இன்னைக்கு செருப்பு போட்டுக்கிட்டு முதன்முதலா வந்திருக்கிறது எனக்கு வித்தியாசமா இருந்துச்சு, எம்மேல தப்பா இருந்தா ஸ்வாமிஜி மன்னிக்கனும்.” என்றான் சங்கடமான சங்கரன்.

“ஓ அதுவா சங்கரா, எப்பவும் நான் செருப்பில்லாமல் தான் போவேன். ஆனா ஆத்து தண்ணீல மீன் இருக்குல்ல. மீன் முள்ளு காலில் குத்திடுச்சுனா வலிக்கும் இல்லையா? அதனாலதான் செருப்பு போட்டிருக்கேன். நீ ஒண்ணும் மனசுல வச்சுகாத”இந்த பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காத சங்கரன் குழம்பிப்போனான். 

அவரை திரும்பி திரும்பி பார்த்தவாரே கழியை ஆற்றில் குத்தி படகை செலுத்தினான். உதட்டில் சிறு புன்னகையுடன் ஸ்வாமி இவனையே பார்ப்பது போல இருந்தது.

சில நிமிட மெளனத்திற்கு பிறகு...

“சங்கரா.... நான் மீன் முள் குத்தும் என செருப்பு போட்டுக்கிட்டது உனக்கு முட்டாள்த்தனமா தெரியுதில்லையா? அதேபோலதான் ஜபம் தியானம் செஞ்சா உடனே குடும்பத்தை விட்டு சன்யாசம் போயிடுவாங்கனு நினைக்கிறதும்...!

இந்த மீன் முள் குத்தனும்னா முதல்ல மீனை வலைவீசி பிடிக்கனும், அப்புறமா அதை தூய்மையாக்கி, அடுப்பில் வைத்து சமைக்கனும். அப்புறம் சுவைச்சு பார்க்கனும். இதெல்லாம் செஞ்சா கூடா காலில் மீன் முள் குத்த வாய்ப்பில்லை. இல்லையா? அது போலத்தான்...ஆன்மீகத்தில் ஈடுபடும் எல்லாரும் சன்யாசி ஆயிடனும் இல்லை. 

நீ உன் குடுபத்தில் இருந்துக்கிட்டே உன் உன்மை நிலையையான ஆன்மாவை உணரலாம். அதுக்குதான் இந்த ஜபம், தியானம் எல்லாம். பக்குவம் அடைய பல படிகள் இருக்கு, எடுத்தவுடன் மீன் முள் குத்தாது. அதை வலைவீசி பிடிக்கனும்...அதுபோல உன் அலைபாயும் மனசை வசப்படுத்த இந்த ஜபம் தியானம் செய்யனும். குரு வந்து அதை தூய்மையாக்கி சமைப்பார், அப்புறம் தான் மிச்சமெல்லாம்...” என கூறிவிட்டு செருப்பை ஆற்றங்கரையில் விட்டுவிட்டு சென்றார் ஸ்வாமிஜி. 

அன்று முதல் அந்த செருப்பு சங்கரனுக்கு குருபாதுகையானது.

-------------ஓம்------------------

துறவு மட்டுமே ஆன்மீகம் அல்ல. குருவானவர் உங்கள் பொறுப்புகளை விட்டுவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபடு என எப்பொழுதும் கூறமாட்டார். உங்கள் பொறுப்புகளை சிறப்பாக செய்ய வழிகாட்டுவார். சரியான வழிகாட்டியானவர் உங்களின் பிறப்பின் தன்மையை ஊடுருவி உங்களின் வாழ்க்கை அமைப்பிலேயே ஆன்மீகத்தை உணர்த்துவார்.

உங்கள் கர்மாவை எந்தவிதத்திலும் மாற்றாமல் அவ்வழியே உங்களை முக்திக்கு செலுத்துவது தான் குருவின் பணி. உங்கள் கர்மா அதிகரிக்கும் பொழுது தக்க சமயத்தில் காப்பாற்றி கர்மாவை வளரவிடாமல் செய்வது அவரின் பணிகளில் ஒன்று. 

ஆனால் முற்றிலும் உங்கள் கர்மாவை மாற்றி செயற்கையாக வழி ஏற்படுத்தமாட்டார். இயற்கையோட இணைந்து விதையை செடியாக்கி, மரமாக்கி, பூவிட செய்து காயாக்கி கனிந்து விட செய்வதே குருவின் நோக்கம்.

Thursday, July 26, 2012

புனித நூல்


சீனர்களின் கைவேலைப்பாடு மிக்க அந்த பேழையில் பட்டு துணி சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது அந்த புத்தகம். இன்று வரை யாரும் அதை திறந்து பார்த்ததில்லை.

குரு மட்டுமே அதை கையில் சில நேரம் வைத்திருந்து நான் பார்த்திருக்கிறேன். நான் அவரின் பிரதான சிஷ்யன் என்பதால் எனக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது.  இங்கே இருக்கும் பலருக்கு இதுவும் கிடைத்ததில்லை.

குரு பிறருக்கு காட்டாமல் பொத்தி வைத்திருக்கும் அந்த புனித நூலில் இருக்கும் தேவ ரகசியம் என்ன என தெரிந்துகொள்ள ஆவல் பிறந்தது.

எத்தனை நாள் தான் அதற்கு பூஜைகள் மட்டும் செய்து கொண்டிருப்பது? நானும் அதை படித்து ஆன்மீகத்தில் உயர வேண்டாமா? இந்த வேட்கை என்னை பல்வேறு வகையில்` தூண்டியது.

அன்று இரவு அப்புத்தகத்தை திறந்துபார்க்கும் திட்டம் உருவாகியது. குருவை அவரின் அறையில் சந்தித்து பூஜை அறையை தூய்மையாக்க போகிறேன் என சொல்லிவிட்டு தனியாக வந்துவிட்டேன்.

இதோ அறைக்கதவை சாத்தி தாழ்போட்டாகிவிட்டது.யாரும் உள்ளே வரவோ நடப்பதை பார்க்கவோ முடியாது.

நறுமணம் கமழும் அந்த பெட்டியை மெல்ல திறந்து பட்டுத்துணியை விலக்கி அந்த புனித நூலை எடுத்தேன்.

அப்புத்தகத்தின் அட்டைப்படம் தாண்டி உள்ளே இருக்கும் தேவரகசியத்தை ஒரே மூச்சில் பருகும் ஆவலில் திறந்தால்....அனைத்தும் வெற்றுக்காகிதமாக இருந்தது...!

புனித நூல் ஏன் வெற்று தாளாக இருக்கிறது? இதை ஏன் வைத்து வழிபட வேண்டும் என பல குழப்பம் தோன்றியது...

மெல்ல திரும்பினால்...

பூட்டிய அறைக்குள் குரு நின்று என்னை தீர்க்கமாக பார்த்துக்கொண்டிருந்தார்.

அதிர்ச்சியில் உச்சத்துக்கே சென்று அவர் காலில் விழுந்தேன். தேம்பி அழுதுக்கொண்டு என் கண்ணீரால் அவரின் கால்களை கழுவும் என்னை தோள்களை பிடித்து தூக்கினார்.

“புனித நூல் என்றவுடன் அதில் பல தெய்வீக கருத்துக்கள் இருக்கும் என நினைத்தாயா? இறை கருத்துக்கள் என்பது ஒரு மொழியில் அடங்கக் கூடியது அல்ல. இறைகருத்துக்கள் வார்த்தையால் உணரக்கூடியது அல்ல.. இறைவன் என்ற பிரம்மாண்டம் சில வார்த்தையால் விளக்கிவிட முடியுமா என்ன? இறைக்கருத்துகள் மெளனத்தால் பகிர வேண்டியவை... மெளனம் எப்படி அனைத்தையும் கொண்டிருக்கிறதோ...அதுபோல இந்த வெற்றுத்தாள்களும் எல்லையற்ற இறைவனின் வார்த்தைகளை நிரப்பிக்கொண்டு தேடுதல் உள்ளவர்களுக்காக காத்திருக்கிறது... இதோ நீ இன்று வந்துவிட்டாய்”

எனக்கூறி என்னை அவரின் கூர்மையான கண்களால் மெளனமாக பார்த்தார்.

------------ஓம்-------------------
இறைவனை மதத்தாலும்..மொழியாலும் சிறுமைபடுத்துவதைவிட இறை அனுபூதியை மெளனத்தால் உணர முற்படுவதே நாம் செய்ய வேண்டிய ஆன்மீக பயிற்சியாகும்..

Tuesday, July 17, 2012

தாகத்திற்கு தண்ணீர் கேட்ட மீன்


“ஏண்ட சங்கரு அவரு கூடயாடா சுத்திக்கிட்டு இருக்க? 
அவனே ஒரு பைத்தியக்கார பய..” இப்படி சண்முகம் சொல்லி முடிப்பதற்குள் 
அவனின் மேல் பாய்ந்து கட்டிப்புரண்டான் சங்கர்.

இப்படி பார்ப்பவர்கள் எல்லாம் தன் குருவை பைத்தியம் என சொன்னாலும் சங்கருக்கு குருவின் மேல் ஏதோ ஒரு இனம் புரியாத நேசம் இருந்தது. தனக்கு மிக நெருக்கிய தன்மையை அவரிடம் உணர்ந்தான்.

அதனால் யாரேனும் அவரை பைத்தியம் என சொன்னால் அவனால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது. இத்தனை நாள் அவருடன் இருக்கும் சங்கருக்கு தன் குருவின் நடவடிக்கையில் எப்பொழுதும் சந்தேகம் வந்ததில்லை. அவர் மிகவும் அமைதியானவர் யாரிடமும் பேச மாட்டார். 

யோக பயிற்சியை பலருக்கு கற்றுக்கொடுப்பது ஆன்மீக இடங்களுக்கு செல்லுவது என அவரின் செயல்பாடுகள் விரல் விட்டு எண்ணிவிடலாம்.இப்படி இருக்க அவரை ஏன் பைத்தியம் என கூறுகிறார்கள் என சங்கருக்கு பிடிபடவில்லை.

இன்று குருவுடன் ஒரு ஆன்மீக பயணத்திற்கு தயாராகும் பொழுது நண்பன் 
சண்முகத்துடன் இந்த தகறாரு ஏற்பட்டது. தன் உடமைகளை தயார் செய்துகொண்டு ஆசிரமம் வந்தடைந்தான் சங்கர். குருவுடன் மிகவும் கடினமான மலைக்கு பயணப்படப்போகிறான். அங்கே உச்சியில் இருக்கும் மலைக்குகையில் தரிசனம் செய்யலாம் என குரு சொன்னவுடன் கிளம்பிவிட்டான்.

செங்குத்தான மலையில் ஏழு மணிநேர பயணத்திற்கு பிறகு வெண்மேகம் சூழ்ந்த அந்த மலை உச்சியை அடைந்தார்கள். மேகக்கூட்டங்களுடன் குளிர்காற்று வீசும் சூழலில் குகை அமைந்திருந்தது. அந்த குளிர் உடலில் புகுந்து எலும்புகளை அசைத்துப்பார்த்தது. அங்கே இருக்கும் அருவியில் நீராடிவிட்டு, குகைக்குள் சென்று அமர்ந்தார்கள். 

குரு ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். 

திடீரென ஒரு சப்தம் ...”ஹம்சோ ஹம்சோ ஹம்சோ”

அங்கே சங்கர் தன் குருசொல்லிக்கொடுத்த யோக பயிற்சியை குகையில் அமர்ந்து செய்து கொண்டிருந்தான். 

யோக பயிற்சி முடித்தபின் கண் திறந்த பார்த்த சங்கர் அங்கே குரு இல்லாததை கண்டு குகைக்கு வெளியே வந்தான். 

அங்கே குளிர்காற்று வீசும் குகையின் முகப்பில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்திருந்தார் குரு.

அவரின் கையில் ஒரு விசிறி இருந்தது. அதிக கோடைகால மதிய நேரத்தில் காற்று வீசிக்கொள்வதை போல விசிறியால் வீசிக்கொண்டிருந்தார்.

கம்பளி ஆடையுடன் கடும் குளிரில் நான் வெட வெடக்க இவரோ கையில் விசிறியுடன் இருப்பது சங்கருக்கு விசித்திரமாகப்பட்டது.

ஊர்காரர்கள் சொல்லுவது போல இவர் ஒரு மாதிரியோ என எண்ணம் ஏற்பட்டது. இவ்வாறு சங்கர் நினைத்து முடிக்கவும் குரு அவன் பக்கம் திரும்பி பார்க்கவும் சரியாக இருந்தது.

“என்ன...என்னை பார்த்தால் பைத்தியமா தெரியுதா?” என கேட்டு குரு பெரும் சப்தமாக சிரித்தார்.

இவரிடம் மலை உச்சியில் தனியாக வந்து மாட்டிக்கொண்டோமோ என்ற பயன் வந்தது சங்கருக்கு...

ஆழ்ந்த பார்த்த குரு பேசத்துவங்கினார்...

“சங்கர்..... உனக்கு யோக பயிற்சி கற்றுக்கொடுத்தது ஆன்மீக ஆற்றல் குறைவாக இருக்கும் இடத்தில் செய்து ஆன்மிக்க ஆற்றலை பெருக்கிக்கொள்ளத்தான். இங்கே வந்து யோக பயிற்சி செய்வது... நான் இங்கே இருந்து விசிறியால் வீசிக்கொள்வதை போலத்தான்.. மீனுக்கு தாகம் எடுக்கலாமா?” என சொல்லி மீண்டும் சிரித்தவாறே மலை இறங்கத்துவங்கினார்.

இவரையா பைத்தியம் என்கிறார்கள் என நினைத்தவாரே சங்கர் பின் தொடர்ந்தான்.

-------------------ஓம்--------------------------

குருவின் செய்கைகள் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ மிக சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. 

இதில் சம்பந்தப்படாதவர்களுக்கு குருவின் செய்கைகள் பைத்தியத்தை போல தெரியலாம்.

கண் திறந்து கொண்டு இருட்டில் இருப்பவனுக்கே ஒளியை கையில் வைத்திருப்பவரின் செயல் அர்த்தமுள்ளதாக இருக்கும். இருட்டில் கண்மூடி தூங்குபவனுக்கு ஒளியை ஏந்தி இருப்பவர் பைத்தியம் தானே?

நாம் குருவின் அருகில் இருந்தால் சடங்குகளோ,ஆன்மீக பயிற்சிகளோ தேவையில்லை. குருவின் இருப்பே அனைத்தையும் செய்யும்.

Wednesday, June 15, 2011

வயிரே வைகுண்டம்...கக்கூஸே கைலாசம்...!

அந்த பிரபல கோவில் நகரத்தின் மையப்பகுதி அங்கே கரிய நிறத்தில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் தன் கால்களை நனைத்த வண்ணம் அமர்ந்திருந்தார் அந்த நபர்.

உடலின் சில பகுதியை சாக்கு மறைத்திருந்தது. அழுக்கும் சிக்குகளும் நிறைந்த சடை மேல் உடலை மறைத்துக் கொண்டிருந்தது. முகத்தின் முன் விழுந்த சடைகளால் அவரின் முகம் தெளிவாக தெரியவில்லை. தாடி சூழ்ந்த முகவாயில் இருந்து காது கூசும் கெட்ட வார்த்தைகள் வந்த வண்ணம் இருந்தது. இப்படி பட்ட ஒருவரை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவரின் பெயர் தான் சாக்கடை சித்தர்...!

மக்கள் அவரை சூழ்ந்து நின்று ஏதாவது கேட்பார்கள். அவர் பதில்பேச மாட்டார். ஏதாவது பேசினால் அது கெட்ட வார்த்தையாகவோ அல்லது புரியாத வார்த்தைகளாகவோ இருக்கும். மக்கள் அதிகமாக கூடி இவரை தொந்தரவு செய்தால் தனது கையால் சாக்கடை நீரை எடுத்து அமிர்ந்தம் போல பருகுவார். பிறர் மேல் அதை தெளிப்பார். அவ்வளவு தான் கூட்டம் கலைந்துவிடும்.

அன்று காலை சாக்கடை சாமி வழக்கம் போல தன் விளையாட்டை சாக்கடையில் துவக்கி இருந்தார்.

அவரை இருவர் நெருங்கி நின்று பார்த்த வண்ணம் இருந்தனர். ஒருவர் எளிமையான உடையுடன் காணப்பட்டார். மற்றொருவர் வசதியான தோற்றத்தில் நின்று இருந்தார்.

“என்னடா ...... பசங்களா என்னையே பார்க்கிறீங்க? என்னை கொல பண்ண போறீங்களா? இந்த பிச்சக்காரன் கிட்ட கொள்ளை அடிக்க வந்தீங்களா...என்னடா வேணும் ” என்றார் சாமி.

“சாமி... கடவுளை அடைய வழி சொல்லுங்க சாமி” என்றார்கள் இருவரும்....

“ கடவுளை அடைய வழியா...கேட்கரானுங்க பாரு கேள்வி ......... மாதிரி...” என்று தன் வழக்கமான அமிர்தத்தை எடுத்து பருகிவிட்டு....

“சொல்றேன் கேட்டுக்கோ...

வயிரே வைகுண்டம்...கக்கூஸே கைலாசம்”..என்றார்.

“சாமி புரியலையே..கொஞ்சம் விளக்கமா...” என இருவரும் சொல்லி முடிக்கும் முன் அவர்கள் மேல் சாக்கடை அமிர்ந்த மழை பொழிய...இருவரும் அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.

நாட்கள் கடந்தது....

வயிரே வைகுண்டம்...கக்கூஸே கைலாசம் - என்ற கருத்தை யோசித்து கடவுளை அடைய முயன்றார் பணக்காரர். தனது உணவுகளை மிகவும் சுவையாகவும் விலைபதிப்பாகவும் உண்ணத் துவங்கினார். தனது கழிவறையை பல லட்சம் செலவு செய்து பளிங்கு கற்களால் இழைத்தார். ஆனால் கடவுளை அடைவதற்கு பதில் நோய்வாய்பட்டு காலமானார்.

அதே நேரத்தில் ஏழ்மை நிலை கொண்ட மற்றொரு சாக்கடை சாமியின் வார்த்தைகளை ஆழமாக புரிந்துகொண்டார். ஒவ்வொரு மனிதனின் வயிறும் வைகுண்டமாக அவருக்கு தெரிந்தது. தினமும் அன்னதானம் செய்யது வைகுண்டத்தை அன்னம் மூலம் நிரப்பினார். அதே போல பொதுக்கழிப்பிடத்திற்கு சென்று மனதில் அருவெறுப்பு இல்லாமல் சுத்தம் செய்தார்.

அன்னதானத்தின் மூலமும் பொது சேவை மூலமும் கர்மயோக பாதையில் உயர்ந்து ஞானம் பெற்றார்....

--------------ஓம்------------

குரு அனைவருக்கும் ஒன்றே உபதேசிக்கிறார். அவருக்கு உயர்வு தாழ்வு இல்லை. ஆனால் நம் அஹங்காரம் உயர்வு தாழ்வுடன் இருப்பதால் குருவின் உபதேசத்தை தவறாக உணர்ந்து கொண்டு ஆன்மீக பாதையில் தவறிவிடுகிறோம்.

குருவின் உபதேசத்தை சுயநலமும் அஹங்காரமும் இல்லாமல் கண்டால் இறையருளை எளிமையாக அடையலாம்.

Saturday, July 24, 2010

சுழற்சியில் மாட்டிய குருவும் சிஷ்யனும்போன ஜென்மத்தை காட்டுகிறேன் வா என என் நெற்றிப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.

அந்த ஜென்மத்தின் நினைவுகள் தெரியத்து வங்கியது.

அதில் அடுத்த ஜென்மத்தை காட்டுகிறேன் வா என என் நெற்றிப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.

இவ்வாறு நாங்கள் பிறவிச் சுழற்சியில் மாட்டிக்கொண்டோம்..!

-----------------ஓம்-----------------

எந்த சிஷ்யனிடமும் குரு தான் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என கூறுவதில்லை.
அவ்வாறு கூறுபவர் அகந்தையின் சொரூபமாக தான் உயர்ந்தவன் என காட்டவே செய்கிறார்.

அவர் குரு நிலையில் இருக்க வாய்ப்பில்லை.

பல ஜென்மங்களை காட்டுகிறேன் என கூறுபவரை விட...

உனக்கு உன் இருப்பை மட்டுமே காட்டுகிறேன் என்ற விழிப்புணர்வை கொடுப்பவரை குருவாக இருக்க முடியும்.

கடவுள் ஒரு காட்டு எருமை..!

“குருஜீ நீங்க பிறக்கு போதே இந்த தாடி இருந்துச்சா?”

“தினமும் ஏன் குருஜீ மாலையை விரலால தேச்சு சேதமாக்கனும்?”

“எப்பவும் நாமதான் மூச்சு எடுக்கறோமே அப்பறம் ஏன் காலையில தனியா ஒரு மணிநேரம் மூச்சு எடுக்கனும்?”

மேற்கண்ட கேள்விகளின் நாயகன் மாதவனுக்கு பதினாறு வயது நேற்றுடன் முடிந்து. வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லை என்பார்கள். சிறு வயதிலிருந்தே மிகவும் குறும்புக்காரனாக வளர்ந்ததால் வீட்டில் இவனின் சேட்டைகளை அளவிட முடியாமல் பெற்றோர்கள் தவித்தார்கள்.

நல்வழிபடுத்தும் நோக்கில் பரமாணந்த ஆசிரமத்தில் கொண்டு விட்டு விட்டார்கள். ஆசிரமத்தில் அவனுக்கு தெரியாததே இல்லை என்பதை போல எந்த வேலையை கொடுத்தாலும் சலிக்காமல் செய்வான். சில நேரங்களில் சிறப்பாக செய்கிறேன் பேர்வழி என தனது புத்திச்சாலித்தனத்தால் குளறுபடிகளும் நடக்கும். அசிரமத்தில் பலர் இவனை கிண்டலும் கேலியும் செய்வதுண்டு.

இவனின் முட்டாள் தனமான கேள்விகளுக்கு சில நேரம் குரு பொருமையாக பதில் அளித்துக்கொண்டு இருப்பார். சில நேரங்களில் சிரித்துவிட்டு செல்வார். குரு மாதவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்குவது ஆசிரமவாசிகளுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்.

இவ்வளவு பொறுமையான குருவையே ஒரு நாள் கோபப்படுத்தினான் மாதவன். குரு தனது அன்றாட பூஜைக்காக மலர்களை நந்தவனத்தில் பறித்துக் கொண்டிருந்தார்.


உருவமற்ற பரம்பொருளை மானச பூஜை செய்வது குருவின் பூஜாமுறைகளில் ஒன்று. அவ்வாறு அவர் பூஜைக்காக தயாராகி வரும்பொழுது மாதவன் குருவின் அருகே வந்தமர்ந்து அவர் செய்வதை கவனித்துக் கொண்டிருந்தான்.

திடீரென பூ இருக்கும் தட்டிலிருந்து மகிழம் பூவை எடுத்து நாசிக்கு அருகில் வைத்து நுகர்ந்தான்.

இச்செய்கையை கண்ட குரு, “மாதவா கடவுளுக்கு வைத்திருக்கும் பூவை இப்படி செய்யலாமா? போ வெளியே” என கோபம் கொண்ட வார்த்தைகளால் கூறினார்.

தன் செய்த செய்கையை உணராத மாதவன் “குருவே கடவுள் எப்படி இருப்பார்?” என வேறு கேள்வியை கேட்டான்.

கோபத்தின் உச்சத்திற்கே சென்ற குரு “கடவுள் காட்டு எருமை போல இருப்பார். இப்பொழுது நீ வெளியே செல்” என கோபம் தனியாது கூறினார்.

குருவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை குழப்பத்துடன் பார்த்தவாறே வெளியே சென்றான் மாதவன்.

நாட்கள் மாதத்திலும் ... மாதங்கள் வருடத்திலும் கரைந்தது.

ஒரு நாள் அருகில் இருக்கும் புண்ணிய தலத்திற்கு பயணமானார் குரு. மாதவன் இல்லாமல் பயணமா? அவனும் குருவுடன் பயணித்தான்.

கோவிலின் வாயில் அருகே அதிக கூட்டம் இருப்பதை கண்டார்கள். திருவிழா நேரம் என்பதால் இறைவனின் திருவீதி உலாவிற்காக கூட்டம் குழுமி இருந்தது. கோவிலின் வாயிலில் இருவரும் நின்றார்கள்.

இறைவனின் பல்லாக்கை கோவிலுக்குள் இருந்து வெளியே எடுத்து வரும் நிலையில் கோவிலின் வாசலில் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பல்லாக்கை சரியாக வெளியே கொண்டு வர முடியவில்லை.

நெரிசலை கண்ட குரு, “ஓ இறைவனை நகர் வலம் கொண்டு செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறதே..” என புலம்பினார்.

இதைக்கேட்ட மாதவன், “குருஜீ... மிகப்பெரிய காட்டெருமையை இந்த சின்ன வாயிலில் கொண்டு வர முடியுமா? வாயிலை அகலப்படுத்த வேண்டும். முட்டாள்கள்” என்றான்.

--------------------------------ஓம்----------------------------------------

இறைவன் அருவமானவன்.
இறைவன் குருவின் வாக்கினால் உருவமாகிறார்.

குருவே இறைவனை நமக்கு காட்டும் கண்களாக இருக்கிறார்.
அதில் தெரியும் காட்சிகள் என்றும் தெய்வீகமானது.

குரு கூறும் எவ்வாக்கியமும் மஹாவாக்கியமாகிவிடும்.


Monday, June 21, 2010

ஆன்மீக குருவுடன் முதல் சந்திப்பு

ரிஷிகளின் கருப்பை என அழைக்கப்படும் ரிஷிகேசத்தின் கிழக்கு பகுதி. சூரியன் தன் கதிர்களை தளர்த்தி செம்பாகும் மாலை நேரம். அந்த மலைபகுதியை ஒட்டி இருக்கும் ஆசிரம குடில்கள் நிறைந்த ஏகாந்தமான சூழலுக்குள் நுழைந்தான் விஷ்வ தாஸ்.

நீண்ட காலமாக குருவை தேடி பல இடங்களுக்கு பயணப்பட்டவனுக்கு அந்த இடம் ஒரு ரம்மியமான அமைதியை கொடுத்தது. ஆசிரம குடில்களுக்கு மத்தியில் இருந்த ஆலமரத்தின் அடியில் சிறிது கூட்டம் தென்பட அதை நோக்கி சென்றான் விஷ்வதாஸ்.

கண்கள் மூடி அன்பர்கள் சுற்றி அமர்ந்திருக்க ஒரு தெய்வீகமான உருவத்தில் நடு நாயகமாக அமர்ந்திருந்தார் யோகி யஸ்வந். வெண் பஞ்சு போன்ற நீண்ட தலை முடியும் தாடியும் ஆழ்ந்த அமைதியை பறைசாற்றியது. அவரின் முன் சென்று அமைதியாக அமர்ந்தான் விஷ்வ தாஸ். எங்கும் பேரமைதி நிலவியது.

சில நிமிடங்கள் கரைந்தது. மெல்ல கண்களை திறந்தான் விஷ்வ தாஸ், யோகி அவனை உற்று நோக்கிய வண்ணம் இருந்தார். சைகையால் அவனை அருகில் அழைத்தார்.

முக மலர்ச்சியுடன் அவரின் அருகில் சென்று பணிந்து வணங்கினான் விஷ்வ தாஸ். மீண்டும் சைகையால் கண்களை மூடச்சொன்னார். கண்கள் மூடி ஆழ்ந்த ஆன்மீக எதிர்பார்ப்புடன் இருந்தான் விஷ்வ தாஸ்.

“பளார்...”

அசுரத்தனமான அடி ஒன்று கண்ணத்தில் இறங்கியது. எதிர்பாராத அடியால் நிலை குலைந்து போனான் விஷ்வ தாஸ்.

சுற்றி இருந்தவர்கள் அனைவரும் இவனை பார்த்து பலமாக சிரிக்க, அவமானமும் ஏமாற்றமும் இணைந்து கண்களில் நீர்துளியாக எட்டிபார்த்தது.

வேறு யோசனைகள் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு வெளியேரினான் விஷ்வதாஸ். ஆசிரமத்தை விட்டு வெளியேறி வெளியே இருக்கும் பாதையில் நடக்கலானான். அவமானம் ஆத்திரமாக மாறியது. பல பேர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய யோகியை பழிதீர்க்க எண்ணினான். வேறு ஆசிரமம் சென்று அங்கே இணைந்து இவருக்கு முன் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

கங்கை கரையை பாலத்தின் மூலம் கடந்து மறுகரையில் இருக்கும் மற்றொரு ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

சிஷ்யர்கள் ஒருவர் முன் அமர்ந்து கொண்டு பஜனை பாடிகொண்டிருந்தார்கள்.


அங்கே மழிக்கப்பட்ட தலையுடன் கருப்பு கம்பளியை மட்டும் உடலில் போர்த்திய கம்பளி யோகி அமர்ந்திருந்தார். யோகி யஸ்வந் உடன் கம்பளி யோகியை ஒப்பிட்டு பார்த்தான். உடை, தலை முடியின் அமைப்பு என பல்வேறு ஒப்பீடுகள் நடத்தினான். யோகி யஸ்வந்க்கு முற்றிலும் எதிரான நிலையை கப்பளி யோகியிடம் கண்டான். தான் சரியான இடம் வந்திருப்பதாக உணர்ந்து கொண்டான்.

விஸ்வ தாஸ் சிஷயர்களுடன் அமர்ந்து கண்களை மூடி தானும் பஜனை பாடியவாறே மெல்ல தலையை அசைத்துக் கொண்டிருந்தான்.

யாரோ அவனை உற்று நோக்குவது போல இருந்தது கண்களை திறந்து பார்த்தான். கம்பளி யோகி இவனை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். கம்பளி யோகி தன்னை ஏற்றுக் கொண்டதாக உணர்ந்தான். இவனுக்கு ஆனந்த அனுபவமாக இருந்தது.

சில வினாடிகளில் சைகையால் தன்னை நோக்கி அழைத்தார் கம்பளி யோகி. மெல்ல அவரிடம் சென்றான். சைகையால் கண்களை மூடு என்றார்.

கண்களை மூடியவனுக்கு மனதுக்குள் மின்னலாய் முன்பு நடந்த அனுபவம் நிழலாடியது. யோகி யஸ்வந் விட்ட அறை ஞாபகம் வர....சற்று பின்னோக்கி நகர்ந்து கண்களை திறந்தான்.

அங்கே நீண்ட திரிசூலத்தை தூக்கி இவனை நோக்கி பாய்ச்சும் தருவாயில் இருந்தார் கம்பளி யோகி. அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான். சடாரென சுதாரித்துக் கொண்டு திரும்பி ஓட துவங்கினான்.

கம்பளி யோகி அவனை விடாமல் துரத்த துவங்கினார்..

குருவை தேடிவந்தது குற்றமா? ஆன்மீக எண்ணத்தை தவிர தவறான எண்ணம் எதுவும் தனக்கு இல்லையே. அடிப்பதற்கும் கொல்லுவதற்கும் இவர்கள் துணியும் அளவுக்கு நாம் என்ன பாவம் செய்தும் என நினைத்து தன்னை நொந்து கொண்டான். விஸ்வ தாஸ் ஓடுவதை நிறுத்தவும் இல்லை. கம்பளி யோகியும் விடுவதாக இல்லை.

கங்கை கரையில் நீண்ட தூரம் ஓடியவனுக்கு கம்பளி யோகியின் மேல் எரிச்சல் உண்டானது. கம்பளி யோகி தன்னை கொலை செய்ய துரத்துவதை பார்க்கும் பொழுது யஸ்வந் யோகி தன்னை அடிக்க மட்டுமே செய்தார். அவர் எவ்வளவோ நல்லவர் என தோன்றியது.

பல எண்ணங்களுடன் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தவன் எதிலோ மோதி கீழே விழுந்தான். மெல்ல எழுந்து பார்த்தான்.

அங்கே யஸ்வந் யோகி நின்று இருந்தார். அவனை ஆதரவாக தூக்கி கையில் இருந்த இனிப்பை அவனுக்கு புகட்டினார். வாயில் இனிப்புடன் கலவரத்துடன் திரும்பி பார்த்தான் விஸ்வ தாஸ்.

அங்கே கம்பளி யோகி தென்படவில்லை.

-------------------ஓம்-----------------------

குருவை நீங்கள் தேடத்துவங்கினால் உங்கள் அறியாமையை தூண்டுபவரை சென்று அடைவீர்கள். உங்களுக்கு சுகமான உணவையும், சூழலையும் சுகானுபவத்தையும் கொடுப்பவர் குரு என நீங்கள் நினைப்பீர்கள். அப்படிபட்டவர்கள் உங்களை அறியாமை என்ற தூக்கத்தில் ஆழ்த்தி விடுவார்கள்.

ஆன்மாவை நேரடியாக தொடர்பு கொள்ள உங்கள் ஆணவத்துடன் போர் புரிபவரே உங்கள் குருவாக இருக்க முடியும். அவரை நீங்கள் சந்தித்ததும் உங்களிடம் இருந்து எதையோ முக்கியமானதை இழக்கப் போகிறேன் என்ற ஆழ்ந்த துக்கம் ஏற்படும். உங்கள் ஆணவம் தன்னை இழக்க தயாராகாமல் அவருடன் போராடி தோற்கும்.

எளிமையாக சொல்லுவதென்றால், உங்கள் உள் கட்டமைப்புகளை தகர்த்து யார் அதில் புதிய ஒளியை ஏற்றுகிறாரோ அவரே குருவாக இருக்க முடியும்.

உங்களை தூங்க செய்பவர் குரு அல்ல.. விழிக்கச் செய்பவரே குரு...!