Friday, December 26, 2008

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

பூபாளம் இசைக்கும் காலை நேரம்....


சத்குரு விஷ்வ தீர்த்தர் தனது நித்திய பூஜையில் ஈடுபட்டிருந்தார். மங்கள வாத்தியம் முழங்க தீபாரதனை செய்தார் மூத்த சிஷ்யன் ஜகதீஷ்.

இறைவனின் சன்னிதானத்திலிருந்து படையல் செய்த பொருட்களை சிஷ்யர்கள் அனைவருக்கும் வழங்கினார்கள். அனைவரும் பக்திச் சுவையாலும் , பிரசாத சுவையாலும் மகிழ்ந்து கலைந்தனர்.

சத்குரு தனது ஆசனத்திலிருந்து எழுந்து தனது அறை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவரின் கால்கள் நடந்தாலும் கண்கள் ஜகதீஷை பார்த்த வண்ணம் இருந்தது...

குருவின் தீர்க்கமான பார்வையை உணர்ந்த ஜகதீஷ் அவரின் பின்னால் நடக்க துவங்கினான்.

அறைக்குள் வந்ததும் ஜகதீஷை நோக்கி கேட்டார்... “ எனது பிரிய ஜகதீஷ் சில நாட்களாக உனது செயல்களில் ஓர் வித்தியாசம் இருந்ததை உணர்கிறேன். முன்பு நைவேதியம் செய்யும் பிரசாதத்தை அனைவருக்கும் வழங்குவதில் முனைப்பாக இருப்பாய் , ஆனால் இப்பொழுது ஒதுங்கி இருக்கிறாயே என்ன காரணம்?”

தனது நிலையை குரு இவ்வளவு உன்னிப்பாக கவனிப்பார் என எதிர்பார்க்காத ஜகதீஷ் தனது நிலையை கூற துவங்கினான்.. “ குருவே ஆசிரம வாழ்க்கை துவங்கிய பொழுது பக்தி பூர்வமாக இருந்தேன். நித்திய பூஜை, நைவேதியம் என அனைத்திலும் ஈடுபட்டேன். தற்சமயம் தெளிவு பெற்றேன். நாம் படைக்கும் நைவேதியதை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? இது போன்ற தர்க்கம் எனக்குள் தோன்றியதால் என்னால் பிரசாதம் வழங்குவதில் ஈடுபட முடியவில்லை குருவே...”

அவனை ஊடுருவி பார்த்த குரு, “ ஜகதீஷ் உனது விருப்பபடியே செய். நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.


இறைவணக்கத்துடன் வகுப்பு துவங்கியது.. சென்ற வகுப்பில் புதிய பாடம் இன்று போதிக்கபடுவதாக குரு சொன்னதால் அனைவரும் ஆர்வமாக இருந்தனர்..

கால்கள் இரண்டையும் இணைத்து யோக முத்திரையில் அமர்ந்திருந்த சத்குருவை பார்க்க தக்‌ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்வதை போல இருந்தது.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு விஷ்வ தீர்த்தர்.

அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு ஜகதீஷை சைகையால் அழைத்தார் விஷ்வ தீர்த்தர்.


குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

“எனதருமை ஜகதீஷ், மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான் ஜகதீஷ்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியாதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”

பதட்டம் அடைந்த ஜகதீஷ், புத்தகத்தை காண்பித்து கூறினான்.. “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”

“ஜகதீஷ்.. இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.. என்றால் விஷ்வதீர்த்தர்.


மெல்ல தலையசைத்தான் ஜகதீஷ்..


சத்குரு தொடர்ந்தார்... “ இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”


குழப்பமடைந்தான் ஜகதீஷ்...


“எனது பிரிய ஜகதீஷ்.. உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உற்கொள்கிறான்.
நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான் இறைவன் உற்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேதியத்தை உற்கொள்கிறோம். ”

வகுப்பில் இருக்கும் அனைவரும் இருவரின் சம்பாஷணை புரியாமல் இருக்க...ஜகதீஷின் முகத்தில் ஒளி தெரிந்தது.

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவித்தியம் செய்து முழுமையடைந்தான் ஜகதீஷ்.