Saturday, April 10, 2010

குரு - அடி - திருவடி..!

குருவே சரணம், அனைவருக்கும் வணக்கம்.
நான் நந்து என்கிற முக்தானந்த கிரி பேசுகிறேன்.

எனக்கு சிறு வயதிலிருந்தே ஆன்மீக தாகம் அதிகம். ஆன்மீக வாழ்க்கையில் வாழ்ந்து இறைவனைக்கான வேண்டும் என்பது ஆழ்ந்த விருப்பமாக இருந்தது.ஆர்வம் அதிகரித்ததால் சுவாமி வேதானந்த கிரியின் ஆஸ்ரமத்தில் வந்து சேர்ந்தேன். கடந்த சில நாட்களாக சுவாமியின் அருட்பார்வையில் வாழும் பாக்கியம் கிடைத்தது.

சுவாமி வேதானந்தகிரி ஒரு மெளனகுரு. எந்த போதனையோ கருத்துக்களோ சொல்லமாட்டார். இடையில் கோமணத்தை கட்டிக்கொண்டு கையில் ஒரு சிறிய கம்பு ஒன்றும் வைத்திருப்பார். அவரை பார்த்தால் அதிகபட்சம் ஒரு மாடு மேய்க்கும் முதியவரை போன்று காட்சி அளிப்பார். மக்கள் அவரை வேதானந்த கிரி என அழைத்தார்கள். ஆனால் அவர் தன் பெயரை வெளியே சொன்னது இல்லை.

யாரிடமும் பேசாமல் அமைதியாக மரத்தடியில் இருந்தவரின் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு பலர் அவருடன் இணைந்து இருக்க துவங்கினார்கள். மெல்ல அந்த சூழல் ஓர் ஆன்மீக ஆசிரமமாக மலர்ந்தது.

தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் சிறிய குடில்கள் மற்றும் வீடுகளுடன் வேதானந்தகிரி ஆஸ்ரமம் செயல்பட்டுவந்தது. ஒரு பக்கம் சமையல் அறை மற்றும் குடியிருப்புக்கள், மறுபுறம் குருநாதர் இருக்கும் இடம், நந்தவனம் ஆகியவை இருந்தது.

எனக்கு நந்தவனத்தை சீரமைக்கும் பணி. தினமும் காலை எழுந்து நீராடிவிட்டு, குருவின் முன் வந்து விழுந்து வணங்குவேன். அவரோ ஏதோ ஒரு நிலையில் இருப்பார். அவர் முன் யார் இருக்கிறார்கள் என பார்க்கும் நிலையில் இருக்க மாட்டார். பிறகு நான் நந்தவனத்திற்கு சென்று அன்றைய பணியை துவக்குவேன்.

அன்று அப்படித்தான் பணியை துவக்கி மதியம் நெருங்கும் வேளையில் ஒரு முனகல் சப்தம் கேட்டது. அரளிச்செடியின் அருகே அழகான ஒரு நாய்க்குட்டி. பிறந்து சில மாதங்கள் ஆனதன் சுவடுகளுடன் மிகவும் மென்மையாக வலம் வந்து கொண்டிருந்தது.

அதன் துள்ளலும், ஓட்டமும் எனக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தின. அதற்கு சில உணவுகளை கொடுத்தவுடன் என்னுடன் மிகவும் நெருங்கியது அந்த நாய்க்குட்டி.



ஒரு நாள் மதிய உணவுக்காக நெடுஞ்சாலையை தாண்டி இருக்கும் ஆஸ்ரமத்தின் சமையலறைக்கு சென்றுவிட்டு வரும்பொழுது தான் கண்டேன். சமையலறை வாசலில் நாய்க்குட்டி. உணவை தேடி வந்திருந்தது.

அதற்கு உணவளித்துவிட்டு நான் மறுபுறம் சாலையை கடக்க எத்தனிக்கும் பொழுது நாயும் என்னுடன் வரத்துவங்கியது. நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகமாக இருந்ததால் நாய்க்குட்டியை கையில் எடுத்துக்கொண்டு சாலையை கடந்து நந்தவனம் நோக்கி சென்றேன்.

“தட்” எதிர்பாராத விதமாக அந்த அடி என் முதுகில் விழுந்தது.

மரண வலி.

திரும்பிப்பார்த்தேன். வேதானந்தகிரி நின்று கொண்டிருந்தார்.

தனது கையில் இருக்கும் கம்பு கொண்டு என்னை அடித்திருக்கிறார்.

புரியாமல் பார்த்தேன். வழக்கம் போல எங்கோ பார்த்தவாரே நடந்து சென்றுவிட்டார்.

அடியைவிட அதற்கு காரணம் தெரியாமல் இருந்தது அதிகமாக வலித்தது. சில நாட்கள் கடந்தது அவரின் பார்வையை தவிர்த்து வந்தேன். இங்கே வந்திருக்கக் கூடாது என்றுகூட நினைத்தேன்.

------------------------------------------------------

மற்றொரு நாள் மதிய உணவுக்காக நாய்குட்டியை கைகளில் ஏந்திய வண்ணம் எதிர்பக்கம் இருந்த சமையலறையை நோக்கி நெடுஞ்சாலையை கடக்க துவங்கினேன்.

“தட்” மீண்டும் அந்த மரண அடி.

இந்த முறை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
கண்கள் கலங்கியது.

எந்த சலனமும் இல்லாமல் நடந்து சென்றுகொண்டிருந்தார் வேதானந்த கிரி.
மனநிலை பாதிக்கப்பட்டவரிடம் சிக்கிக்கொண்டோம் என நினைத்தேன்.
அன்று சாப்பிடும் எண்ணமே இல்லாமல் நந்தவனத்திலேயே இருந்தேன்.

------------------------------------------

சில நாட்கள் கடந்தது...

ஒரு நாள் என் அறையில் இருந்து நந்தவனம் நோக்கி சென்றுகொண்டிருந்தேன்.

சாலையைக் கடக்கும் பொழுது அந்த கோரக்காட்சியை கண்டேன்.

வாகனத்தில் அடிபட்டு அந்த நாய் இறந்துகிடந்தது. அதன் தலைப்பகுதி கூழாகி ஈக்கள் அதன் மெல் மொய்க்க அந்த காட்சி என்னை மிகவும் கலக்கம் அடையச்செய்தது.


அடுத்த நொடி அந்த சப்தத்தை கேட்டேன்...

“தட்”

“தட்”

அந்த அடியின் சப்தம்..
ஆனால் என்மேல் அடிவிழவில்லை.

நாயின் நசுக்கப்பட்ட உடலின் அருகே நின்ற வேதானந்த கிரி தன் உடலில் கம்பு கொண்டு தானே அடித்துக்கொண்டிருந்தார். அவரின் கண்கள் நாயின் உடல் மேல் இருந்தது.

அன்று நந்துவாக இருந்த நான் முக்தானந்த கிரியாக என்னுள் மாற்றமடைந்தேன்.

--------------------------ஓம்----------------------------

குரு தன் சிஷ்யனுக்கு போதிப்பது இல்லை. அவனின் வாழ்வியலில் ஒரு சிறிய நெருப்பு பொறியை தூண்டுகிறார். அது ஆன்மீகமாக கொழுந்துவிட்டு எரிகிறது.

எப்பொழுதும் கருத்துக்களையும், விளக்கங்களையும் கொடுத்துக் கொண்டிருப்பவரை நாம் குருவாக நினைத்து பின் தொடர்ந்தால் , நம் கதி நந்துவின் நாயின் கதியை போன்றாகிவிடும்.அதாவது போதனையை மட்டும் குருவாகக் கொண்டால் நெடுஞ்சாலை என்ற வாழ்க்கையை கடக்கும் நாய் போல விபத்துக்கள் நேரும்.

குரு நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தி நம்மை சுயமாக ஆன்ம முன்னேற்றும் பெறச்செய்வார். அத்தகைய குரு இல்லாத தருணத்தில் கூட நம்மால் சமநிலை தவறாமல் இருக்க முடியும்.