தம்பூராவை நித்தமும் மீட்டுவது போன்ற ஓங்கார இசையால் அந்த சூழல் நிரம்பி இருந்தது. முனிவர்களுக்கு எல்லாம் முனிவர் என போற்றப்பட்ட ரிபு கண்கலங்கி நிற்கும் தனது மாணவன் நிதாங்கனை தீர்க்கமாக பார்த்தார்...
“நிதாங்கா நான் கூறுவதை கேள், நானும் நீயும் வேறல்ல. நான் எப்பொழுதும் இருக்கிறேன்.
நீ வாழ்வியல் அனுபவம் பெறவே உன்னை உனது ஊருக்கு திரும்ப சொல்லுகிறேன்.
கலக்கமடையாதே உன்னை வெகுவிரைவில் வந்தடைவேன்.”.
குருவின் சொல்லுக்கு கட்டுப்பட்ட நிதாங்கன் ஊருக்கு திரும்பி தனது இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டான்.
காலங்கள் சென்றது....
ஒரு நாள் சாலையில் நடந்துவந்து கொண்டிருந்தான் நிதாங்கன். மக்கள் கூட்டமாக கொண்டாட்டதுடன் வருவதை கண்டான். பெரிய மேள தாளத்துடன் மக்கள் நடனமாடி ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார்கள். ஊர்வலத்தின் கடைசியில் பட்டத்து யானையின் மேல் அரசன் அமர்ந்து ஒய்யாரமாக வந்துகொண்டிருந்தார்...
அரசனின் அழகையும் மக்களின் ஆர்ப்பரிப்பையும் ரசித்துக்கொண்டிருந்தான் நிதாங்கன்.
பின்னாலிருந்து ஒரு கை அவனை தோளை தொட்டது....
தனது ரசிக்கும் மனோபாவத்திலிருந்து கலைந்து திரும்பிப்பார்த்தான்.
அங்கே முகத்தில் சுருக்கத்துடன், அழுக்கடைந்த உடையும், கலைந்த கேசமுமாக ஒருவர் நின்றிருந்தார். ஏதோ கிராமத்திலிருந்து வரும் நபராக இருக்க வேண்டும்.
தனது உள்ளங்கையை புருவத்தின் மேலே வைத்து அரசனின் ஊர்வலத்தை பார்த்தவாரே கேட்டார்...
“தம்பீ.. அங்கே என்ன ஒரே கூட்டமா இருக்கு?”
அவரை பார்த்தவுடன் நிதாங்கனுக்கு ஏனோ ஒருவித ஈர்ப்பு ஏற்படவில்லை. கல்விஅறிவில்லாத நாட்டுபுரத்தானிடம் என்ன பேச என என்னினான்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி, பேச்சை வெட்டிவிட எண்ணினான்.
“அதுவா.. ராஜா யானையில் ஊர்வலமா போராரு...” என்றான் நிதாங்கன்.
“ஓஹோ..” என இழுத்தார் அந்த கிராமத்துக்காரர்.
“என்ன ஓஹோ? நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சுதா?”.. என கேட்டான் நிதாங்கன்.
” ராஜா ...யானை.... புரியுது தம்பி ஆனா அதில எது ராஜா எது யானை?”
“என்னய்யா அதுகூடவா தெரியல?.. மேல இருக்கிறது ராஜா, கீழ இருக்கிறது யானை”
குதுகூலத்துடன் படபடவென கைகளை தட்டிய கிராமத்தான்...
“எனக்கு இப்பதான் தம்பி புரிஞ்சுது...எது ராஜா எது யானைனு புரிஞ்சுது:”..
இப்படியும் ஒரு மனிதனா என நினைத்தவாறே வேறுபக்கம் திரும்பினான் நிதாங்கன்..
”தம்பி ஒரு சந்தேகம்..”
மீண்டும் அவர் அழைக்கவே பொறுமை இழந்து திரும்பி என்ன என்பதை போல பார்த்தான்..
“யானை, ராஜா எல்லாம் புரியுது தம்பி. மேல கீழனு சொன்னீங்களே அது என்ன?”
தன்னிடம் வம்பு செய்ய வந்திருக்கிறார் என நினைத்து தானும் அவரை கலாட்டா செய்ய நினைத்தான் நிதாங்கன்..
எதிர்பாராத தருணத்தில் திடீரென அவரின் முதுகில் ஏறி காலை தோள்பட்டையில் போட்டு குதிரை சவாரி செய்வதை போல அமர்ந்தான்.
“நீ என் கீழ இருக்க. உனக்கு மேல நான் இருக்கேன். இத்தான் மேல் கீழ். புரியுதா?”
“மேல் கீழ் புரிஞ்சுது தம்பி.... ஆனா..”
“என்னையா ஆனா?”.. அவரின் தோள்பட்டையிலிருந்து இறங்காமலேயே கேட்டான் நிதாங்கன்..
“நீ - நான் அப்படினு சொன்னீங்களே அப்படின்னா என்ன?”
“அ...ஹா... என்னது என்ன கேட்ட?”
“நீ நான் அப்படீனு பேசும்போது சொன்னீங்களே அப்படீனா என்ன? முதல்ல 'நான்' அப்படினா என்னனு சொல்லுங்க.. அப்பறம் நீ பத்தி சொல்லுங்க”
கேள்வியின் ஆழம் புரியாமல் சிந்திக்க துவங்கினான் நிதாங்கன்...
“நான் என்பது என்ன? நிதாங்கன் என்பதா.... இல்லை அது எனது பெயர்..
இந்த உடலா? இல்லையே.. தூக்கத்தில் நான் அதை உணருவதில்லையே.
அப்பொழுது நான் என்பது ........?
ஒரு ஒளிக்கீற்று அவனுக்குள் ஒளிர்ந்தது...
உணர்விற்கு வந்தவனாக முன்புறம் இருந்த கிராமத்தானை பார்த்தான். அவர் இவனை ஒருவித குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்..
அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து...கண்ணீர்வடித்தான்...
“ஐயா என்னக்கு எண்ணிலா தெளிவை கொடுத்துவிடீர்கள். நீங்கள் எனது குரு ரிபுவை தவிர வேறு யாராகவும் இருக்க வாய்ப்பில்லை. உங்களிடம் இருக்கும் பொழுது தான் இத்தகைய சத்தியத்தை உணர்ந்திருக்கிறேன்...”
அவனை தூக்கி தன்னுடன் அனைத்துக்கொண்டார் மகரிஷி ரிபு.
அன்று முதல் நிதாங்கனுக்கு அனுபவ பூர்வமான அத்வைத்த பாடம் துவங்கியது...
-----------------------------ஓம்---------------------------------------
குரு எப்பொழுதும் கற்றுக்கொடுப்பதில்லை.
தனது வாழ்வை அனைவருக்கும் போதிக்கிறார்.
அங்கே ஞானம் பிறக்கிறது.
4 comments:
//குரு எப்பொழுதும் கற்றுக்கொடுப்பதில்லை//
100% சரி !!
//குரு எப்பொழுதும் கற்றுக்கொடுப்பதில்லை.
தனது வாழ்வை அனைவருக்கும் போதிக்கிறார்.
அங்கே ஞானம் பிறக்கிறது.//
ஆஹா சத்தியமான வார்த்தைகள் ஸ்வாமி!
ஆஹா!கண் திறந்தது!
சத்தியமான வார்த்தைகள் குருஜி
Post a Comment