Sunday, October 26, 2008

ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறேன்

தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆஸ்ரமம் அது.


ஓர் தெய்வீகமான மெளனம் அங்கே சூழ்ந்திருந்தது. ஓர் கையை தலையிலும் தொடையிலும் வைத்தவண்ணம் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார் சத்குரு.

அவரது கண்கள் எங்கோ நிலைத்திருந்தது. அவரது உடல் அசைவற்று இருந்தது , அவர் சமாதி நிலையில் இருப்பதை காட்டியது.சத்குருவை பார்த்த படி அவரது சிஷ்யர்களும் மக்களும் அமர்ந்திருந்தனர்.

ஓர் இளைஞன் கைகளில் மலர் மாலை மற்றும் பழங்களுடன் அவர் முன் வந்து நின்றான்.
அவருக்கு மலர்மாலையை அணிவித்து அவரை விழுந்து வணங்கி கேட்டான் “குருவே என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்று எனக்கு சன்னியாசம் வழங்குங்கள்.”

தனது சமாதியிலிருந்து கலைந்த அவர், அவனை தீர்க்கமாக பார்த்தார். “உன்னிடத்தில் சன்னியாசத்திற்கான கூறு இல்லை.


முயற்சி செய் , அழ்ந்த முயற்சி உன்னை மேம்படுத்தும்” என சொல்லி அவனை பார்த்தார்.

அந்த இளைஞனோ விடுவதாக இல்லை. “அவ்வாறு சொல்லி என்னை தவிர்க்காதீர்கள். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என இரு கரம் கூப்பி தொழுதான்.

குரு புன்புறுவல் செய்தவாறே கூறினார்...“சரி உன்னை ஏற்றுக்கொள்கிறேன். சன்னியாசம் கொடுப்பதற்கு முன் நீ சிலகாலம் இங்கு இருந்து வா. உனது சன்னியாசம் கொடுக்கப்படும் நாளை பிறகு கூறுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. நீ யாருடனும் சைகையிலோ வாய் மூலமாகவோ பேச கூடாது. . மூன்று வருடத்திற்கு ஒரு முறை என்னிடம் மட்டும் பேசலாம். அதுவும் ஒரு வாக்கியம் தான். இதற்கு சம்மதித்தால் நீ இங்கு இருக்கலாம்”

தன்னை ஏற்று கொண்ட குருவை கண்கள் குளமாக தொழுது விட்டு தலையசைத்தான் இளைஞன்.

“மெளனி” என்ற எழுதபட்ட வாசகம் கழுத்தில் இருக்க ஆஸ்ரமத்தை வலம் வர துவங்கினான் அந்த இளைஞன்.

மூன்று வருடம் கழித்தது. குரு முன் வந்தமர்ந்தான்..

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை ஒரே வாக்கியத்தில் கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே எனக்கு கொடுக்கப்பட்ட படுக்கை வசதி குறைவாக இருக்கிறது”.

குரு கூறினார், “ நன்று. உனது மெளனம் தொடரட்டும்”.
.
.
.
.
.
.
மீண்டும் மூன்று வருடம் கழித்தது. அந்த நாளும் வந்தது.

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே என்னை பிறர் சரியாக நடத்துவதில்லை”.

குரு கூறினார், “ நன்று. உனது மெளனம் தொடரட்டும்”.
.
.
.
.
.
.
.
.
.
மீண்டும் மூன்று வருடம் கழித்தது. அந்த நாளும் வந்தது.

குரு அவனை நோக்கி கூறினார்..“..இன்று நீ பேசும் நாள். நீ பேச விரும்புவதை கூறு”

இளைஞன் கூறினான் ,“குருவே எனக்கு ஆஸ்ரம வாழ்க்கை திருப்தி இல்லை. ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுகிறேன்”.

குரு கூறினார், “ நன்று. உனது பயணம் தொடரட்டும்”.

--------------------------------ஓம்-------------------------------------
இக்கதை ஓர் ஜென் கதையை தழுவி சொல்லப்பட்டது.

தன்னில் அமைதியையும் உள்நிலையில் ஈடுபாட்டையும் காணாதவர்கள் ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தல் தவறானது.

குரு சிஷ்ய உறவின் தெளிவையும், தான் எதற்காக இருக்கிறோம் என்ற இருப்பும் காண தவறுவதால் ஏற்படும் குறையே இதற்கு காரணம்.

இந்த குறைபாடு குரு சிஷ்ய உறவில் மட்டுமல்ல. அனைத்து வகையான உறவு முறையிலும் உண்டு.குரு சிஷ்யா நிலையில் கணவன் - மனைவி, தந்தை மகன், தலைவர் - பணியாள் என வேறு உறவு முறைகளை வைத்து இக்கதையை சிந்தித்துப்பாருங்கள். யாரை வைத்தாலும் அவர்கள் உறவில் வரும் தடுமாற்றத்தின் காரணம் யாரோ ஒருவர்

தனது இருப்பை உணராமல் தன் சுகத்தை மட்டுமே உணருகிறார்கள் என்பது தான்.

உங்கள் இருப்பை உணர்ந்து உள் நிலையைல் விழிப்புணர்வு பெருங்கள். அனைத்து உங்களுக்கு ஆனந்தமயமாக தெரியும்.

Wednesday, October 15, 2008

நான் கடவுள்

நகரத்தின் மையத்தில் உள்ள பொதுக்கூட்ட மைதானம்.


கண்களுக்கு எட்டிய வரை மக்கள் கூட்டம். மக்கள் அனைவரும் ஒருமுக சிந்தைனையுடன்அமர்ந்திருந்தனர். ஒரு புறம் சிறு குழுவாக பக்த்தர்கள் இசைத்த பஜனை பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த மண்டபம் பூக்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடையில் அலங்கார வளையம் மற்றும் மரத்தால் ஆன ஆசனம் என அனைத்து அம்சமும் ஒர் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெறப்போவதை குறித்தவண்ணம் இருந்தது.



ஆம். அனைவரும் சத்குரு ஞானேஷ்வர் வருகைக்காக காத்திருந்தனர்.

கூட்டத்தில் திடீரென சலசலப்பு. பின்பு அமைதி ஏற்பட்டது...
கூடியிருந்த கூட்டத்தின் நடுவே மக்கள் இருபுறமும் விலக ஓர் பாதை உருவானது..

சத்குரு தனது சிஷ்யர்களுடன் இரு புறமும் குழுமி இருந்த மக்களை வணங்கியபடியே மேடையை நோக்கி நடந்தார்.

பஜனை குழுவின் பாடல்கள் உச்சகட்டத்தை எட்டியது.

சிலர் அவர் கால்களை ஸ்பரிசிக்க முயன்றார்கள், சிலர் ஆவேசமாக அவரின் பெயரை உச்சரித்தனர்.

மேடையில் ஏறியதும் அனைவரையும் ஒருமுறை தனது ஞானம் நிறைந்த கண்களால் பார்த்தார்.

கூட்டம் அமைதியடைந்தது.

”எனது ஆன்மாவிற்கு அருகில் இருப்பவர்களே.....” என தொடங்கி தனது ஆன்மீக அருளுரையை துவங்க...அனைவரும் அதில் மூழ்கினர்.

ஒரு மணிநேரம் அங்கு யாரும் அசையக்கூட இல்லை. தனது ஆன்ம ஆற்றலாலும் , ஞான கருத்தாலும் மக்களை கட்டிவைத்தார் சத்குரு.

குருதேவரின் சிஷ்யர் ஒருவர் மக்களை பார்த்து கூறினார், “ சத்சங்கம் துவங்குகிறது, உங்களுக்கு சத்குருவிடம் கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம்”.


இதே நேரம் தேவலோகத்தில்.... கடவுள் இக்காட்சிகளை பார்த்துகொண்டிருந்தார்.
தன்னை பற்றி பேசும் ஆன்மீகவாதிக்கும், அதை கேட்டு ஆன்மீக வயப்பட்டிருக்கும் மக்களுக்கும் தனது திருக்காட்சியை ஏற்படுத்தும் வண்ணம் அவர்கள் முன் தோன்ற எண்ணினார்.


ஆன்மீகம் பற்றி, வாழ்வியல் பற்றி, தத்துவம் பற்றி என பல கேள்விகள் ஒவ்வொருவராக எழுந்து கேட்டார்கள். அனைத்துக்கும் சத்குரு ஞானேஷ்வர் புதிய புரிதலை ஏற்படுத்தும் கோணத்தில் பதில் அளித்துக்கொண்டிருந்தார்.

எளிய உடையில் வந்தால் அவர்களுக்கு குழப்பம் ஏற்படும் என எண்ணி அவர்கள் வழிபடும் வடிவிலேய தங்க கீடம், பட்டு பீதாம்பரம் அணித்து பரமத்மா மெல்ல நடந்து அந்த சபைக்கு நடுவே வந்தார்.

அனைவரின் கவனமும் அவரிடத்தில் திரும்பியது. அவர் மெல்ல நடந்து சத்குரு இருக்கும் மேடைக்கு அருகே வந்தார். அதற்குள் சத்குருவின் சிஷ்யர்கள் அவரை கூடி என்ன வேண்டும் என வினாவ தொடங்கினார்கள்.

பரமாத்மா புன்புறுவலுடன் கூறினார் ..”நான் கடவுள்”.

இதை கேட்ட சிஷ்யர்களும் மக்களும் கூக்குரலிட்டனர். அனைவரும் கூச்சலிடவே கைகளால் அமைதிப்படுத்திவிட்டு சத்குரு கடவுளை பார்த்தார்,

கடவுள் நம்பிக்கையுடன் சத்குருவை ஆழமாக பார்த்தார்.

சத்குரு சிஷ்யர்களை பார்த்து கூறினார்...”சத்சங்க்த்தின் நடுவே குழப்பம் விளைவிக்கும் இவரை கூட்டி சென்று எனது அறையில் அமரச்செய்யுங்கள்”


சிஷ்யர்கள் இருவர் கடவுளின் கைகளை பற்றி சத்குருவின் அறைக்கு அவரை கொண்டு சென்று அடைத்து வாயிற்கதவை சாத்தினார்கள்.

”சத்குருவிற்கு ஜெய்... சத்குருவிற்கு ஜெய்”
குழப்பம் விளைவித்தவரையும் மன்னித்துவிடும் சத்குருவின் தன்மையை கண்டு மக்கள் கோஷம் எழுப்ப துவங்கினர்.


சத்சங்கம் மீண்டும் துவங்கி மக்களுக்கு ஞானகருத்துகளை சத்குரு கூற துவங்கினார்.பின்பு மங்கள இசையுடன் சத்சங்க நிகழ்ச்சி நிறைவடைந்தது...

அந்த நகர பிரபலங்களும் பிரமுகர்களும் சத்குருவை காண வரிசையில் நின்றனர். ஆனால் சத்குரு இயல்புக்குமாறாக அனைவரையும் சந்திப்பதை தவிர்த்துவிட்டு தனது அறைக்கு திரும்புனார்.

சிஷ்யர்களை தனது அறைகதவை திறக்க சொல்லி அவர்களை வெளியே நிற்கசொன்னார்.

உள்ளே சென்ற வேகத்தில் அறைகதவை உற்புறமாக தாழிட்டு , அறுபட்ட மரம் போல் கடவுளின் காலில் விழுந்தார்.

தனது முகத்தை அவரின் கால்களில் புதைத்த வண்ணம் தழுதழுத்த குரலில் கூற துவங்கினார்...” பிரம்ம சொருபனே உங்களை பார்த்த உடனே கண்டுகொண்டேன். ஆனால் மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் என தெரிந்திருந்தால்.. தனது வாழ்க்கைக்கு தேவையான சுயநல கருத்துக்களை கேட்க துவங்குவார்கள். உங்களுடன் இருக்கும் ஆனந்தத்தை பருக தயாரக இருக்கமாட்டார்கள். இந்த எளியவனை மன்னித்தருளும்...”

தனது வருகையின் தவறை உணர்ந்த கடவுள் மறைந்தார்...


-----------ஓம்------------

கோவில், மடாலயம் என எங்கும் குவியும் மக்கள் பெரும்பன்மையாக தனது வாழ்க்கையின் தேவை பூர்த்தி செய்யும் கோரிக்கை மனதில் கொண்டிருக்கிறார்கள்.


இந்த பிறப்பை வாழும் சூழ்நிலையை படைந்தவனுக்கு நன்றி சொல்லும் இயல்பு எங்கும் காணப்படுவதில்லை.


பிறருக்காக பரார்தனை செய்தல் என்பதும் குறைந்து வாருகிறது.
தன்னை அறிதல் என்பதை காட்டிலும் தன் சுயநலத்தின்பால் மக்களுக்கு தேடல் அதிகம்.

சுயநலம் மிக மிக - கடவுளே எதிரில் வந்தாலும் நமக்கு பல சமயம் அவரை காணமுடிவதில்லை.
வேண்டுதல் என்பது தனது வாழ்க்கையில் உள்ள சிறு சம்பவத்தை வேண்டுவதல்ல.

வேண்டுதல் என்பது அதனுடன் அதுவாகவே ஆக அதனிடத்தில் வேண்டுவதை குறிக்கும்.


Sunday, October 5, 2008

கடவுளை காண்பது எப்படி?

காய்ந்த சருகாக தலைமுடி.... கண்களில் ஓர் தெய்வீக ஒளி. உடலில் குறைந்த ஆடையும் அவரை ஞான செல்வந்தராக காட்டியது.

வழக்கமாக தான் அமரும் ஆற்றங்கரை அரசமரத்தடியில் அமர்ந்து உதயமாகும் சூரியனை உற்று பார்த்துக் கொண்டிருந்தார் ஞானி.

“ஐயா குருவே ...எனக்கு வழிகாட்டுங்கள் ....” என கூறியவாரே...திடீரென ஓர் கரம் அவரின் கால்களை பற்றியது..அவரின் கால்களில் தனது தலையை வைத்து ஒருவன் கதறிகொண்டிருந்தான்.


சலனமற்ற ஓர் பாறை போன்று ஞானி உட்கார்ந்திருந்தார். அவரின் கண்கள் சூரியனை விட்டு அகலவில்லை.

“உங்களிடம் எத்தனையோ முறை கேட்டுவிட்டேன். எனக்கு கடவுளை காண வேண்டும். எனக்கு காட்டுங்கள்.... எனக்கு காட்டுங்கள்....” அவனது குரலில் ஓர் கடவுளை பார்க்க வேண்டும் என்ற உறுதி தெரிந்தது.

இன்று மட்டும் நடப்பதல்ல இந்த காட்சி... பல நாட்களாக தினம் இவன் வருவதும்..ஞானி சலனமற்று அமந்திருப்பதும் வாடிக்கையாகி விட்டது...

ஆனால் இன்று ....மெல்ல ஞானி அவனை நோக்கி திரும்பினார்.. அவன் கைகளை பற்றி அவனுடன் ஆற்றை நோக்கி நடந்தார்.

இருவரும் ஆற்றில் இறங்கினார்கள். இவனும் தனக்கு மார்பு வரை ஆற்றில் இறக்கி
ஞானி மந்திர உபதேசம் தருவார் என நினைத்தான்.

சற்றும் எதிர்பாராத விதமாக அவனின் கழுத்தை பிடித்து நீரில் அமிழ்த்தினார் ஞானி.

சுவாசம் திணறியது. திக்கு முக்காடினான்...

இறப்பின் எல்லையை உணர்ந்தான்..

சில நொடிகளுக்கு பிறகு அவனை விட்டார் ஞானி.


“யேஹ்....”
எனும் சப்தத்துடன் ஆற்றிலிருந்து வெளிவந்து பெரும் மூச்சு எடுத்தான்.

தன்னை திடப்படுத்திக் கொண்டு ஆற்றின் கரையை நோக்கி ஓடினான்.

திரும்பி பார்த்தால் ஞானி மெல்ல சலனமில்லமல் நடந்து வந்துகொண்டிருந்தார்.

அவனுக்கு கோபம் தலைக்கேறியது.“உங்களுக்கு கடவுளை காணும் வழி தெரியாவிட்டால் தெரியாது என சொல்ல வேண்டியது தானே? என்னை கொலை செய்ய வேண்டுமா? உங்களை நம்பி வந்ததுக்கு இதுதான் பலனா?”

தீர்க்கமாக பார்த்த ஞானியின் உதடுகள் அசைய துவங்கியது...”தினமும் கடவுளை காட்டு... கடவுளை காட்டு என கேட்டதால் உபயோகம் இல்லை. தண்ணீரில் மூழ்கியதும் வேறு சிந்தை இல்லாமல் சுவாசத்தை எடுக்கவேண்டும் என்பது மட்டுமே பிரதானமாக இருந்ததல்லவா? அது போல கடவுளை காணவேண்டும் என்பதை மட்டும் சிந்தையில் வைத்து முயற்சி செய். கடவுளை காணலாம்.” என்றார்

இவனக்கு புது சுவாசம் கிடைத்தது.

------------------------------ஓம்-----------------------------------------

கடவுளை காணவேண்டும் என பலர் கேட்டும் செவி சாய்க்காத பரமஹ்ம்சர் நரேனுக்கு செவிசாய்த்ததின் ரகசியம் தெரிந்ததா?

இந்த கருத்தை சிருங்கேரி மஹா சன்னிதானம் நவீன யுகத்திற்கு ஏற்றார்ப்போல் நகைச்சுவையுடன் கூறுகிறார். ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பொழுது வேறு சிந்தனை ஏற்படுமா? அதுபோல கடவுளை காண வேண்டும் எனும் ஒருமுக சிந்தனை நிச்சியம் அவரை வெளிப்பட வைக்கும் என்கிறார்.

நாமும் முயற்சி செய்வோமா?

Wednesday, October 1, 2008

ரசவாதம் செய்யும் முறை


ஜெயசிம்மன் வாழ்க்கையில் அனுபவிக்காத பணமோ அந்தஸ்தோ இல்லை. நீண்ட பரம்பரையாக செல்வந்தராக வாழந்த குடும்பவம் அவனுடையது.

ஆனால் தற்போதய அவனின் நிலை நேர்மாறாக அமைந்து விட்டது. ஒரு வேளை உணவுக்கே பிறரின் கையை எதிர்பார்க்கும் நிலை.வாரி கொடுத்த கையால் வாரி எடுத்து உண்ணும் நிலை ஏற்பட்டதற்கு ஒரே ஒரு காரணம் தான்.

அது - ரசவாதம்

அன்று ஒருநாள் தனது நண்பர்களுடன் உரையாடும் பொழுது ரசவாதம் எனும் விஷ(ய) வாதம் விவாதிக்கப்பட்டது. எந்த பொருளையும் தங்கமாக்கும் ரசவாத வித்தையை கற்றுக்கொள்ளும் ஆவல் அவனுக்கு கிளர்ந்தெழுந்தது. தனது செல்வ நிலையை ரசவாதம் செய்து பெருக்கி தனது பல சந்ததியினர் செல்வ நிலையுடன் வாழவைக்கும் எண்ணம் ஜெயசிம்மனுக்கு ஏற்பட்டது.

பலரை வரவழைத்தான், எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்தது. சித்தர் என அழைக்கப்படவர்களுக்கு முன் தலை வணங்கினான்- அவர்களை பூஜித்தான், ஆனால் நடந்தது என்னமோ வேறு. தனது சொத்துக்கள்,குடும்பம் மற்றும் கெளரவம் என அனைத்தையும் இழந்து மண் குடிசையில் வாழும் நிலை ஏற்பட்டது.

இனி வரும் சந்ததிகளுக்கு பொருள் சேர்க்க எண்ணியவனுக்கு தனது அடுத்த வேளை உணவுக்கு அலையும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

சிரமம்மான நிலையில் வாழும் அவனுக்கு வரண்ட நிலத்தில் சில துளி மழை பொழிவை போல இனிப்பான ஒர் செய்தி கேட்டான். அவனது ஊருக்கு பிரம்ம ஞானி வருகிறார் என கேள்விபட்டதும் அவனது மகிழ்ச்சிக்கு அளவில்லை.

பிரம்ம ஞானி தனது யோகசக்தியாலும் ஞான சக்தியாலும் பலரை வழிகாட்டுபவர். அவரை பற்றிய அற்புத செய்திகளை பல காலங்களாக கேட்டிருக்கிறான். அவர் தனது நிலைக்கு ஓர் மருந்தாக அமைவார் என எண்ணினான். அவரால் தனக்கு ரசவாத வித்தையை கற்றுக்கொடுக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வந்தது. அவரிடம் கற்றதும் தனது இழந்த செல்வத்தை மீட்டுகொள்ள முடியும் என நம்பினான் ஜெயசிம்மன்.

பிரம்மஞானியை சந்தித்து வணங்கி நின்றான். மெல்ல கண்களை திறந்த ஞானி அவனை பார்த்து கேட்டார்... ”எனது அன்பு ஜெயா ரசவாதம் பற்றி அறிய ஆவாலா?”

தனது மன நிலையை சொல்லமலே வெளிப்படுத்திய பிரம்ம ஞானியை கண்ணீர்மல்க பார்த்தான் ஜெயசிம்மன்.

ஒர் நீர் நிறைந்த பாத்திரத்தை கொண்டுவர சொன்னார் பிரம்மஞானி. குனிந்து நிலத்திலிருந்து சிறிது மண் எடுத்து அந்த பாத்திரத்தில் மெல்ல போட்டார் பிரம்ம ஞானி.

ஆச்சரியமான மாற்றம் நிகழ்ந்தது. மண் நீரை தொட்டு பாத்திரத்தின் அடியில் செல்லும் பொழுது தங்க துகள்களாக மாறி இருந்தது.

ஜெயசிம்மனுக்கு தனது கண்களை நம்ப முடியவில்லை. இவ்வளவு எளிதாக யாரும் ரசவாதம் செய்து பார்த்ததில்லை.
ஆச்சரியம் விலகாமல் ஆச்சாரியரிடம் கேட்டான்...”குருவே இது எப்படி சாத்தியம்? மண்னை நீரில் இட்டால் பொன்னாகுமா? எதாவது மந்திரம் சொல்ல வேண்டுமா?”

அவனை அர்த்தத்துடன் பார்த்த குரு கூறினார், “ஜெயா மண்ணை பாத்திரத்தில் இடும் பொழுது தங்கத்தின் மேல் பற்று வைக்கக்கூடாது. பற்றில்லாமல் இருந்தால் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து பொருளும் உனக்கு தங்கமே. இதுவே ஞான ரசவாதம்”

ஜெயசிம்மனின் உள்நிலை ரசவாதம் அடைந்தது.

---------------------ஓம்-------------------------------------

பற்று என்பது இல்லாமல் இரு என்கிறார்கள் சிலர் பற்றுடன் இரு என்கிறார்கள். எதை பின்பற்றுவது ? என பலர் கேட்பதுண்டு.

ஒன்றின் மேல் ஆசை படும்பொழுது பற்று ஏற்படுகிறது அதை தொடர்ந்து சிக்கல்களும் முளைக்கிறது.

ஒரு சாரார் ஆசைபடாதே என்கிறார்கள், ஒரு சாரர் அத்தனைக்கும் ஆசைபடு என்கிறார்கள் என பலர் குழப்பதில் இருக்கிறார்கள்.

நான் புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.

கெளதம புத்தன் சொன்னான்- ஆசை அறுமின்.
வள்ளுவன் எழுதினான் - பற்றுக பற்றற்றான் பற்றினை.

ஆனால் இவை அனைத்தும் முடிவல்ல. இதை பின்’பற்றினாலும்’ சில பிரச்சனைகள் ஏற்படும்.

ஆசையில்லாமல் இருக்க வேண்டும் என்பதும் ஓர் ஆசைதானே?

திருமூலனே சரியாக சொன்னார்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படபட ஆய்வரும் துன்பங்கள்

ஆசைவிடவிட ஆனந்தம் ஆமே.

-திருமந்திரம் 2615

ஆசை அறுப்பீர்கள் தானே?