Monday, March 16, 2009

குரு தாசி


நகுலனுக்கு எந்த கவலையும் இல்லை. காலையில் எழுந்ததும் சுவையான உணவுகளை உண்டு, நறுமண பொருட்களால் தன்னை மிகவும் வாசனையானவன் ஆக்கி கொண்டு ஊர்சுற்ற கிளம்பி விடுவான்.

தனது தந்தை பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதால் அவன் தொழில் மேல் நாட்டம் இல்லாமல் இருந்தான். தினமும் குடி மற்றும் பெண்கள் மேல் இச்சை என அவனின் கும்மாளம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது.

நகுலனின் தந்தையும் இதை கண்டிக்கவில்லை. தனது ஒரே மகன் செய்யும் காரியம் அனைத்தும் அவருக்கு சரியாகவே பட்டது.

இவ்வாறு நகுலனின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கும் பொழுது தான் அந்த ஊருக்கு வந்தாள் வேதயாணி.

வேதயாணி நல்ல அழகும் துடுக்குத்தனமும் கொண்ட பெண். அவள் ஒரு தாசியாக வாழ்ந்து வந்தாள்.

பல ஊருகளுக்கு நாடோடி போல பயணம் செய்து அத்தொழிலை செய்துவந்தாள். வேதயாணியை கண்டவுடன் நகுலனுக்கு தனது மனதை கட்டுபடுத்த முடியவில்லை. தினமும் பல பெண்களை காணும் அவனுக்கு வேதயாணி மேல் அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டது.

வாரத்தில் சில நாட்கள் சென்று வேதயாணியை சந்தித்து வந்த நகுலன் பின்பு தினமும் சந்திக்க நினைக்கும் அளவுக்கு அவளிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

ஒரு முறைக்கு மேல் பழகிய பெண்களை மீண்டும் சந்திக்க விரும்பாத நகுலனுக்கு தன்னிடம் ஏற்பட்ட மாற்றம் வியப்பாக இருந்தது.

ஊருக்கு எல்லையில் ஓடும் ஆற்றங்கறையின் மறுபுறம் இருக்கும் நந்தவனத்தில் தான் வேதயாணியின் வீடு இருந்தது.



தினமும் பரிசல்காரனின் உதவியுடன் ஆற்றைகடந்து சென்று நந்தவனத்தில் வேதயாணியுடன் செலவிடுவது நகுலனுக்கு வழக்கம்.வேதயாணியின் வீட்டின் முன் இருக்கும் செண்பகப்பூ மரத்தின் நிழலில் இருவரும் சந்தித்து உரையாடுவார்கள். இதற்கு முன் எந்த பெண்ணையும் அவன் இவ்வாறு

சென்று சந்தித்ததில்லை. தனது பண செருக்கால் அவர்களை தான் இருக்கும் இடத்திற்கு வர சொல்லி அதிகாரம் செய்வான். தானே சென்று வேதயாணியை சந்திக்கும் செயலை தனது நண்பர்கள் கிண்டல் செய்தாலும் கவலைபடவில்லை நகுலன்.


இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது...


ஒரு நாள் கனமழையின் காரணமாக ஊர் முழுவதும் வெள்ளப்பெருக்கு இருந்தது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் இருந்தார்கள்.

காமமும்,மோகமும் ஊர்மக்கள் போல் அல்லவே, நகுலனை விட்டு வெளியே வர துடித்தது.

பெரும் மழையை பொருட்படுத்தாது வேதயாணியை காண புறப்பட்டான்.
கனமழையால் அற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.

பரிசல்காரர்கள் யாரும் இல்லாதது நகுலனுக்கு ஏமாற்றம் அளித்தது. ஆற்றை நீந்தி கடக்கலாம் என்றால் வேகம் அதிகம். நகுலனுக்கு சாதகமாக ஒரு சிறிய மரம் ஆற்றில் அடித்துக்கொண்டு வந்தது..


அதை பாய்ந்து பிடித்து கொண்டே, மறு கையால் நீந்தி ஆற்றைகடந்தான்.மறு கரையை அடைந்ததும் சிறிய மரத்தை கரைக்கு அருகில் போட்டுவிட்டு வேதயாணியின் வீட்டை பார்த்தான். வீட்டை சுற்றி நீர் தேங்கி இருந்தது.

வீட்டின் மேல் மாடத்தில் இருந்து நகுலனின் வருகையை பார்த்தவண்ணம் இருந்தாள் வேதயாணி.

மிகவும் வேகமாக வந்த நகுலனுக்கு வீட்டின் முன் தேங்கி இருந்த நீர் ஒரு தடையாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவன், செண்பக மரத்தில் இருந்த கயிற்றை பிடித்து நீரை தாண்டி அவளின் வீட்டு முற்றத்தை அடைந்தான்.

வேதயாணியை பார்க்கும் ஆவலுடன் அவளை நெருங்கினான்.

என்றும் புன்னகையுடன் வரவேற்கும் அவள் இன்று அவனிடத்தில் கேட்டாள்.

"காம சுகத்தில் என்ன இருக்கிறது?”

இது வரை எவரும் தன்னிடம் கேள்வி கேட்டதில்லை. தன்னிடம் ஒரு பெண் கேள்வி கேட்கிறாளே என கோபம் கொண்ட நகுலன்.

அதைவிட இந்த உலகின் என்ன சுகம் இருக்க முடியும்? என்றான்.

உன் கண்கள் காமத்தால் கட்டப்படிருக்கிறது, உனது மனம் அறியாமையால் சூழப்பட்டு இருக்கிறது என்றாள் வேதயாணி.

தாசியாக இருந்தவள் திடிரென வேதாந்தம் பேசுகிறாளே என அவளை ஏறிட்டான்.

பிறகு , “என்னை விட உலகில் இன்பம் துய்ப்பவன் யாரும் இல்லை. தெரியுமா உனக்கு” என்றான் நகுலன்.

அவனை தீர்க்கமாக பார்த்த வேதயாணி ”இருக்கவே முடியாது” என தீர்மானமாக சொன்னாள்.

அவனை திருப்பி ஆற்றின் கரையோரம் காண்பித்தாள்.

அதோ பார் நீ நீந்தி வந்தது மரம் அல்ல, ஒரு பிணம்.
அதை மரம் என நினைத்து ஆற்றை கடந்தாய்.

மரத்தில் இருந்த பாம்பை கயிறு என நினைத்து நீரை கடந்து இந்த வீட்டை அடைந்தாய்..

அப்பொழுது தான் கவனித்தான் நகுலன். அது ஒரு பிணம் இது ஒரு பாம்பு.

வேதயாணி தொடர்ந்தாள் .. “பிணத்திற்கும் மரத்திற்கும், பாம்புக்கும் கயிறுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் நீ எப்படி உலகின் உயர் இன்பத்தை உணர்ந்தவனாவாய் ?”

தனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட
சூழலை சந்திக்காத நகுலன் தன்னில் நிலைகுழைந்து நின்றான்.

சில நிமிட மெளனத்திற்கு பிறகு வேதயாணியை பார்த்து கேட்டான்.

“உலகின் உயர் இன்பம் பெற என்ன செய்ய வேண்டும்?”

அவனது நிலை உணர்ந்த வேதயாணி “இரண்டு எழுத்து மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சரி. அது போதும்” என்றாள்.


சொன்ன
து மட்டுமல்லாமல் அவனது காதில் அதை உபதேசித்தாள்.

வேட்டைக்காரனை வால்மீகியாகிய மந்திரம்
நகுலனை ராமதாஸனாக்கியது.

தன்னை உணர்ந்து ...
உயர் இன்பன் அடைந்தான் ராமதாஸன்.



-------------------------------------------------------------------------

நமது உணர்வுகள் விழிப்புணர்வின் விரோதிகள். காமம் குரோதம் மற்றும் மாயை நம்மை முழுமயான செயல் நிலைக்கு இட்டுச் செல்லுவதில்லை.

மேற்கண்ட கதையை படிக்கும் பொழுது கூட “வேதயாணி” எனும் பெயரை ஒரு முறையேனும் “தேவயாணி” என உச்சரித்திருப்பீர்கள்.

உணர்வுகளின் தலையீட்டால் இந்த பிழை நேரக்கூடும்.

உங்கள் கண்கள், உணர்வு இவை ஓருங்கிணைந்து வேலை செய்தால் மட்டுமே விழிப்புணர்வில் இயங்க முடியும்.

குரு நிலை என்பது உருவாக்கபடுவதில்லை. இறைநிலை ஒருவருக்குள் புகுமபொழுது அவர் குருவாகிறார். அதனால் தாசி உபதேசிக்க முடியுமா என

மேற்கண்ட கதையில் உங்களுக்கு தோன்றினால் அது உங்களின் முழுமை நிலை இல்லை என்பதை காட்டும்.

தாசி குருவாகவில்லை. நகுலனை ராமதாசனாக்க குரு தாசியானாள் என்பதே உண்மை.

அதனால் தான் நான் அடிக்கடி சொல்லுவேன்...

குரு உன்னை எப்பொழுதும் பார்த்து கொண்டே இருக்கிறார்.
நீதான் அகமும்-புறமும் கண்கள் இல்லாமலேயே வாழ்கிறாய்.


7 comments:

கோவி.கண்ணன் said...

//அந்த ஊருக்கு வந்தாள் வேதயாணி.

வேதாயணி நல்ல அழகும்//

தேவயாணின்னு படிச்சது போலவே, 'வேதயாணி வேதாயணி' எழுத்துப் பிழையும் படிக்க நேர்ந்தது.

தாசிகள் தான் தத்துவம் பேசுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஏனெனில் முனிவர்களைப் போல அவர்களும் 'உடலை' ஒரு பொருட்டாக நினைக்காமல் வெறும் பொருளாக நினைக்கிறார்களாம்.
:))))))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,
தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி.

//முனிவர்களைப் போல அவர்களும் 'உடலை' ஒரு பொருட்டாக நினைக்காமல் வெறும் பொருளாக நினைக்கிறார்களாம்.//

கர்ம செய்ததால் உடல் எடுத்தோம் என்பார்கள் முனிவர்கள்..

கர்ம செய்யவே உடல் எடுத்தோம் என்பார்கள் இவர்கள்.

எந்த கர்மாவும் ஆன்மாவை அசுத்தமாக்க முடியாது..

நாமக்கல் சிபி said...

ஆஹா! அருமையான கதை!

Vishnu - விஷ்ணு said...

ஆன்மாவை அசுத்தம் செய்யாமுடியாது எனில் ஏன் கர்ம வினைகளால் பிறவிகள் ஏற்படுகின்றன?

Unknown said...

நல்லா இருக்கு ஸ்வாமிஜி.

அந்த எழுத்து Presentation,அதாவது,
அழகாக பிரிக்கப் பட்ட பாராக்கள். கொஞ்சம் ஓவர் கூட? எழுத்துரு(font) ,அதன் அளவு,டெம்பிளேட் கலர்,
கடைசியில் ஒரு போட்டோ,அருமை.

வாழ்த்துக்கள்!

SEKAR70 said...

பாறப்பா பலவாராய் சக்கரம்பூட்டி, பணம்பறிக்கும் வித்தையது
பாரில்பாரு. கூறப்பா உன்மனத்தை திடப்படுத்தி, உத்தமனை
ஊள்வினையே எடுத்துச்செப்பு

Umashankar (உமாசங்கர்) said...

Really worderful lesson, Guruji.

Thank you,

Umashankar:-)A