Wednesday, June 15, 2011

வயிரே வைகுண்டம்...கக்கூஸே கைலாசம்...!

அந்த பிரபல கோவில் நகரத்தின் மையப்பகுதி அங்கே கரிய நிறத்தில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் தன் கால்களை நனைத்த வண்ணம் அமர்ந்திருந்தார் அந்த நபர்.

உடலின் சில பகுதியை சாக்கு மறைத்திருந்தது. அழுக்கும் சிக்குகளும் நிறைந்த சடை மேல் உடலை மறைத்துக் கொண்டிருந்தது. முகத்தின் முன் விழுந்த சடைகளால் அவரின் முகம் தெளிவாக தெரியவில்லை. தாடி சூழ்ந்த முகவாயில் இருந்து காது கூசும் கெட்ட வார்த்தைகள் வந்த வண்ணம் இருந்தது. இப்படி பட்ட ஒருவரை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவரின் பெயர் தான் சாக்கடை சித்தர்...!

மக்கள் அவரை சூழ்ந்து நின்று ஏதாவது கேட்பார்கள். அவர் பதில்பேச மாட்டார். ஏதாவது பேசினால் அது கெட்ட வார்த்தையாகவோ அல்லது புரியாத வார்த்தைகளாகவோ இருக்கும். மக்கள் அதிகமாக கூடி இவரை தொந்தரவு செய்தால் தனது கையால் சாக்கடை நீரை எடுத்து அமிர்ந்தம் போல பருகுவார். பிறர் மேல் அதை தெளிப்பார். அவ்வளவு தான் கூட்டம் கலைந்துவிடும்.

அன்று காலை சாக்கடை சாமி வழக்கம் போல தன் விளையாட்டை சாக்கடையில் துவக்கி இருந்தார்.

அவரை இருவர் நெருங்கி நின்று பார்த்த வண்ணம் இருந்தனர். ஒருவர் எளிமையான உடையுடன் காணப்பட்டார். மற்றொருவர் வசதியான தோற்றத்தில் நின்று இருந்தார்.

“என்னடா ...... பசங்களா என்னையே பார்க்கிறீங்க? என்னை கொல பண்ண போறீங்களா? இந்த பிச்சக்காரன் கிட்ட கொள்ளை அடிக்க வந்தீங்களா...என்னடா வேணும் ” என்றார் சாமி.

“சாமி... கடவுளை அடைய வழி சொல்லுங்க சாமி” என்றார்கள் இருவரும்....

“ கடவுளை அடைய வழியா...கேட்கரானுங்க பாரு கேள்வி ......... மாதிரி...” என்று தன் வழக்கமான அமிர்தத்தை எடுத்து பருகிவிட்டு....

“சொல்றேன் கேட்டுக்கோ...

வயிரே வைகுண்டம்...கக்கூஸே கைலாசம்”..என்றார்.

“சாமி புரியலையே..கொஞ்சம் விளக்கமா...” என இருவரும் சொல்லி முடிக்கும் முன் அவர்கள் மேல் சாக்கடை அமிர்ந்த மழை பொழிய...இருவரும் அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.

நாட்கள் கடந்தது....

வயிரே வைகுண்டம்...கக்கூஸே கைலாசம் - என்ற கருத்தை யோசித்து கடவுளை அடைய முயன்றார் பணக்காரர். தனது உணவுகளை மிகவும் சுவையாகவும் விலைபதிப்பாகவும் உண்ணத் துவங்கினார். தனது கழிவறையை பல லட்சம் செலவு செய்து பளிங்கு கற்களால் இழைத்தார். ஆனால் கடவுளை அடைவதற்கு பதில் நோய்வாய்பட்டு காலமானார்.

அதே நேரத்தில் ஏழ்மை நிலை கொண்ட மற்றொரு சாக்கடை சாமியின் வார்த்தைகளை ஆழமாக புரிந்துகொண்டார். ஒவ்வொரு மனிதனின் வயிறும் வைகுண்டமாக அவருக்கு தெரிந்தது. தினமும் அன்னதானம் செய்யது வைகுண்டத்தை அன்னம் மூலம் நிரப்பினார். அதே போல பொதுக்கழிப்பிடத்திற்கு சென்று மனதில் அருவெறுப்பு இல்லாமல் சுத்தம் செய்தார்.

அன்னதானத்தின் மூலமும் பொது சேவை மூலமும் கர்மயோக பாதையில் உயர்ந்து ஞானம் பெற்றார்....

--------------ஓம்------------

குரு அனைவருக்கும் ஒன்றே உபதேசிக்கிறார். அவருக்கு உயர்வு தாழ்வு இல்லை. ஆனால் நம் அஹங்காரம் உயர்வு தாழ்வுடன் இருப்பதால் குருவின் உபதேசத்தை தவறாக உணர்ந்து கொண்டு ஆன்மீக பாதையில் தவறிவிடுகிறோம்.

குருவின் உபதேசத்தை சுயநலமும் அஹங்காரமும் இல்லாமல் கண்டால் இறையருளை எளிமையாக அடையலாம்.

7 comments:

Mahesh said...

/குரு அனைவருக்கும் ஒன்றே உபதேசிக்கிறார். அவருக்கு உயர்வு தாழ்வு இல்லை. ஆனால் நம் அஹங்காரம் உயர்வு தாழ்வுடன் இருப்பதால் குருவின் உபதேசத்தை தவறாக உணர்ந்து கொண்டு ஆன்மீக பாதையில் தவறிவிடுகிறோம்.
//

very true....

Anonymous said...

அன்னதானமும் அதன் மகிமையும் குருவின் அருமையும் புரிந்தது சுவாமி

Umashankar (உமாசங்கர்) said...

அன்னதானத்தின் மூலமும் பொது சேவை மூலமும் கர்மயோக பாதையில் உயர்ந்து ஞானம் பெற்றார்.

!

Umashankar.A

nantha said...

அருமையான கட்டுரை,குருவின் உபதேசத்தை-பற்றி மிக அழகாக கூறியிருக்கிறீர்கள்.

"மலம் சோரும் ஒன்பது வாயிற்குடிலை" என்ற திருவாசக வரிகள் கூறுவதும் இதை தானோ


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத்( குரு)தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

Karthikeyan Rajendran said...

நல்ல சிந்தனை !!

இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

என்றும் இனியவன் said...
This comment has been removed by a blog administrator.
Naveen said...

சுவாமி, பதிவிற்கு நன்றி!!! அஹங்காரம் ஆணவத்தை கட்டுப்படுத்த வழி ஏதானும் உண்டா?