Saturday, November 8, 2008

குரு நிலை


மஞ்சுநாதனுக்கு பெருத்த சந்தேகம். பலகாலமாக குருவுடன் இருக்கிறோம். அவரின் கண் அசைவை புரிந்து கொண்டு செயல்படும் முதல் மாணவனாக இருக்கிறோம். இருந்தும் நமது குரு நம்மை பாரட்டுவதில்லையே. நமக்கு சுகந்திரமாக பொறுப்புகளை கொடுப்பதில்லையே என கவலை. குருவை போல ஆன்மீக விஷயங்கள் பேசுவதற்கும் சாஸ்திர கருத்திகளுக்கு பதில் சொல்ல தெரிந்தாலும் நம்மை அவர் அளவுக்கு யாரும் மதிப்பதில்லையே ஏன் இந்த நிலை என யோசிக்க துவங்கினான்.

குருவுடன் தனியாக பயணப்படும் தருணத்திற்காக காத்திருந்தான். அதற்கான சந்தர்ப்பம் விரைவிலேயே வாய்த்தது. ஓர் தொழிற்சாலையில் உழியர்களுக்கான கூட்டத்தில் அவர்களின் பணியை ஊக்குவிக்கும் பொருட்டு குரு அழைக்கப்படிருந்தார்.

கூட்டத்தில் பேசியது அனைத்தும் மஞ்சுநாதனுக்கு புதிய விஷயமாக தெரியவில்லை. குருவுடன் எப்பொழுதும் இருப்பதால், அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தை மனதில் உதிக்கும் வண்ணம் அவனுக்கு குருவின் உரை பழகி இருந்தது. அது வரை பொருமையாக இருந்த மஞ்சுநாதன் தனது கேள்வியை இன்று கேட்டே விட வேண்டும் என முடிவு செய்தான்.

அன்று மதிய உணவு அருந்திய பின் குரு ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது அவரின் கால்களை மெல்ல பிடித்து விட்டபடியே மஞ்சுநாதன் கேட்டான், “குருவே, நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா?”.

படுக்கையில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்த குரு ஜன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்த வண்ணம் இருந்தார். மஞ்சுநாதனின் கேள்விக்கு “ம்” என ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாலும் அவரின் கண்கள் வெளியே எங்கோ பார்த்த வண்ணம் இருந்தது.

மஞ்சுநாதன் தனது கேள்விகளை கேட்க துவங்கினான்...

“நீங்கள் சொன்ன அனைத்து ஆன்மீக சாதனைகளையும் செய்து வருகிறேன். மக்களுக்கு நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளும் எனக்கு தெரிந்த விஷயம் தான். நானும் குரு நிலையை அடைந்து விட்டேனா? இன் நிலையில் எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?” என்றான்.

கேள்வி கேட்கும் வரை திரும்பாத அவர் முகம் , கேள்வி கேட்டு முடித்ததும் அவனை பார்த்து திரும்பிய போது சிறிது கலங்கித்தான் போனான் மஞ்சுநாதன்.


அவனது கலக்கத்தை போக்கும் வகையில் அவரின் முகத்தில் ஓர் புன்னகை வெளிப்பட்டது.

“மஞ்சுநாதா, வெளியே ஓர் கட்டிடத்தின் முகப்பில் என்ன எழுதியிருக்கிறது என பார்” என்றார் குரு.

கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாத விஷயமாக இருந்தாலும், குருவின் கட்டளைக்காக உட்கார்ந்த நிலையிலேயே எட்டி பார்த்துவிட்டு சொன்னான். “Go Down" - கீழே போ என எழுதியிருக்கிறது குருவே..”

குரு அவனை மேலும் ஓர் அகலமான புன்னகையுடன் பார்த்துவிட்டு சொன்னார்... “மஞ்சு நாதா , இந்த தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு அது Godown (கிடங்கு). உனக்கு அது Go Down.(கீழே போ). ஆனால் எனக்கோ அது God Own (கடவுளுக்கு சொந்தமானது).

சாமானிய மனிதர்கள் சாஸ்திரங்களை மூதாதயர்களின் சேமிப்பாக பார்க்கிறார்கள். நீ அதை கீழ் நிலையில் ஓர் புத்தகமாகவோ உரையாகவோ பார்க்கிறாய். நான் அதை கடவுளின் சொந்த பொருளாக பார்க்கிறேன். குரு நிலையை அடைய சாஸ்திரம் தேவையில்லை. விழிப்புணர்வே தேவை”.


அன்று முதல் மஞ்சுநாதன் தன்னை கடவுளுக்கு சொந்தமாக்க துவங்கினான்.

-------------------ஓம்--------------------------

குரு நிலை என்பதை நாம் எளிமையாக எண்ணிவிடுகிறோம். பகவத் கீதையையோ அல்லது வேறு ஆன்மீக கருத்துக்களையோ சுவை பட பிரசங்கம் செய்பவர்கள் குரு நிலையில் இருக்கிறார்கள் என நினைத்து கொள்ளுவது தவறு. அதே நேரத்தில் கடவுளை பற்றி சுவை பட பேச தெரியாதவர்கள் எல்லாம் குரு இல்லை என முடிவு செய்வதும் தவறு. குருவை விழிப்புணர்வு நிலையிலேயே புரிந்துகொள்ள முடியும்.

குரு நிலை அடைய விரும்புனால் விழிப்புணர்வு அடைவதே வழி அதை விடுத்து, சித்துக்களை கற்பதோ- புராணங்களை மனப்பாடம் செய்வதோ முட்டாள் தனம்.

விழிப்புணர்வு பெற்றவர்களுக்கு எதுவம் கற்க வேண்டியதில்லை. விழிப்புணர்வற்றவர்களுக்கு அனைத்தையும் கற்றாலும் எதுவம் பயனில்லை.

8 comments:

Unknown said...

ஸ்வாமி,

உங்கள் கதைகள் அற்புதமாக இருக்கிறது. கதையின் நடை படிப்பவர்களை கூட்டி செல்லுகிறது.

குரு கதை தவிர்த்து வேறு கதைகள் எழுதி இருக்கிறீர்களா?

ராமலக்ஷ்மி said...

//குரு அவனை மேலும் ஓர் அகலமான புன்னகையுடன் பார்த்துவிட்டு சொன்னார்... “மஞ்சு நாதா , இந்த தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு அது Godown (கிடங்கு). உனக்கு அது Go Down.(கீழே போ). ஆனால் எனக்கோ அது God Own (கடவுளுக்கு சொந்தமானது).

சாமானிய மனிதர்கள் சாஸ்திரங்களை மூதாதயர்களின் சேமிப்பாக பார்க்கிறார்கள். நீ அதை கீழ் நிலையில் ஓர் புத்தகமாகவோ உரையாகவோ பார்க்கிறாய். நான் அதை கடவுளின் சொந்த பொருளாக பார்க்கிறேன். குரு நிலையை அடைய சாஸ்திரம் தேவையில்லை. விழிப்புணர்வே தேவை”.//

அற்புதமான விளக்கம்.

//விழிப்புணர்வு பெற்றவர்களுக்கு எதுவம் கற்க வேண்டியதில்லை. விழிப்புணர்வற்றவர்களுக்கு அனைத்தையும் கற்றாலும் எதுவம் பயனில்லை.//

மிகச் சரி.

Subbiah Veerappan said...

Godwon' சொல்லைப் பிரித்துச் சொன்ன விளக்கம் அருமை ஸ்வாமிஜி!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா அவர்களுக்கு,

உங்கள் பாரட்டுக்கு நன்றி.

வேறு கதைகள் எழுதும் அளவுக்கு எனக்கு ஞானமோ, நேரமோ இல்லை.
எனது வாழ்க்கையில் அனுபவித்த, கேட்ட விஷயங்களை கதைவடிவில் தருகிறேன். அவ்வளவே.

இனி வரும் கதைகளுக்கும் உங்கள் ஆதரவு இருக்கும் என நினைக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

எனது அன்பு ராமலஷ்மி,

கருத்துக்களை சரியாக மேற்கோள் காட்டி பாரட்டியதற்கு நன்றி.

உங்கள் வரவு இந்த தளத்தை மேலும் மெருகேற்றிவிட்டது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்பையா வாத்தியாருக்கு எனது வணக்கங்கள்.

உங்கள் வருகைக்கு நன்றி.

பொன். வாசுதேவன் said...

அருமை.

manjoorraja said...

அருமையான கதை. நன்றி