Saturday, August 9, 2008

ஓர் துறவி இப்படி செய்யலாமா?

குருவும் சிஷ்யனும் பயணத்தில் இருந்தார்கள். சன்யாச தர்மத்தை கடைப்பிடிப்பதால் பிச்சை எடுக்க ஒரு பாத்திரம் மற்றும் ஒரு மாற்று உடையுடன் பயணத்தில் இருந்தார்கள்.

வழியில் ஒரு ஓடை குறுகிட்டது. அதை கடக்க இருந்த பாலம் பழுது பட்டிருந்தது. இருவரும் அதை பற்றி யோசித்து கொண்டிருக்கும் பொழுது அழகிய மங்கை ஒருவள் அங்கு வந்தாள்.
பாலம் பழுது பட்டிருப்பதை கண்டு வருத்தம் கொண்டாள். துறவி இருவரையும் பார்த்து, " தெய்வீகமானவர்களே அவசரமாக அக்கரைக்கு செல்ல வேண்டும். எனக்கு உதவி செய்ய முடியுமா?" என கேட்டாள்.

உடனே குரு சிறிதும் தாமதிக்காமல் அவளை தோள்களில் சுமந்து கொண்டு ஓடையில் இறங்கி மறுகரையில் சேர்த்தார். இச்செயல் சிஷ்யனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இருவரும் பயணத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்துக்கு பின் குரு சிஷ்யனை கண்டார். பெருத்த யோசனையுடன் வரும் சிஷ்யனிடம் கேட்டார் "மகனே ஏன் இந்த யோசனை? வாழ்க்கையிலும் சரி வழிப்பயணத்திலும் சரி மனதில் கணம் இருந்தால்
பயணம் ருசிக்காது. சொல் என்ன உனக்கு பிரச்சனை?"

"எனது குருவே நாம் துறவி அல்லவா? அந்த பெண்ணை நீங்கள் தோளில் சுமந்து எப்படி சரியான செயலாகும் ?" என்றான் சிஷ்யன்.

சிஷ்யனை ஆழமாக பார்த்த குரு தொடர்ந்தார். ...
"உனது கேள்வியால் மகிழ்தேன். எனது சிஷ்யா , அப்பெண்ணை நான் சில நிமிடம் தான் தோளில் சுமந்தேன் ஆனால் நீயோ அவளை நெடுந்தொலைவு மனதில் சுமந்து கொண்டு வருகிறாயே இது மட்டும் முறையா? சன்யாசம் என்பது பற்றற்று மனதில் தூய்மையை சிறிதும் இழக்காமல் இருப்பதே ஆகும்.."

மனதில் இருந்த மங்கையை இறக்கி வைத்து பூரணத்துவம் அடைந்தான் சிஷ்யன்.

----------------------ஓம்------------------

இந்த கதையை படித்ததும் இது எல்லாம் நடைமுறையில் நடக்குமா? அல்லது சுவாரசியத்துக்காக புனயப்பட்டதா என சந்தேகம் உதிக்கலாம்.

பழங்கலம் முதல் இந்த கதை வழக்கத்தில் இருந்தாலும், இது குரு-சிஷ்யனுக்கு இடையே நடந்த உண்மை சம்பவமாகும்.

உண்மை சம்பவத்தை விவரிக்கிறேன் .....

ரிஷிகேஷ் எனும் ஆன்மீக பூமி.
மாலை நேரத்தில் கங்கை நதி ஓரமாக தெய்வீகமாக கட்சி அளித்தது ஆனந்த குடீரம்...

சத்சங்கம் முடிந்ததும் சன்யாசிகள் சூழ நடை பயிற்சியில் ஈடுபட்டார் குருநாதர்.
அந்த குழுவில் ஒரு தாயும் மகளும் தவிர அனைவரும் ஆண் சன்யாசிகள்.

அனைவரும் ஆசிரமத்தை விட்டு சிறிது வனப்பகுதில் நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த விபரீதம் நடந்தது. தாயுடன் வந்த அந்த இளவயது மகள் திடீரென "ஐயோ" என கதறி கீழே விழுந்தாள். அவளை தேள் ஒன்று தீண்டிருந்தது..

தனது மகளுக்கு நேர்ந்த துன்பத்தை கண்ட தாயும் கதறி அழ துவங்கினார். சன்யசிகளோ என செய்வது என திகைத்து நின்றனர்.

குருநாதர் அங்கு நடப்பதையும் தனது சிஷ்யர்களின் செயல்பாட்டையும் கவனித்து கொண்டிருந்தார்.

சில சன்யாசிகள் ஆசிரமம் சென்று கட்டை மற்றும் கயிறுகளை கொண்டுவந்து அதில் அப்பெண்ணை கொண்டு செல்லலாம் என திட்டமிட்டனர். மேலும் சிலர் வேறு வழிமுறைகளை ஆலோசித்தனர்.

இதனிடையே ஒரு சன்யாசி விரைந்து வந்து அந்த கன்னி பெண்ணை தூக்கி தோளில் போட்டுகொண்டு காட்டுப்பாதையில் விரைவாக பயணித்து ஆசிரம மருத்துவமனையில் சேர்த்தார்.

சில காலத்துக்கு ஆசிரமம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது. கன்னி பெண்ணை எப்படி சன்யாசி தொட்டு தூக்கலாம் என பேசினார்கள். ஆனால் இதை குருவும், அப் பெண்ணை தூக்கிய சிஷ்யரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

சில மாதங்கள் சென்றன. ..

ஆசிரமத்தில் வளர்ந்து வந்த ஒரு நாய் நோய்வாய்ப்பட்டது. உடல் முழுவதும் சொறியும், சீளுமாக காட்சியளித்தது. நோய்வாய்ப்பட்ட நாயை கால் நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல யாரும் முன்வரவில்லை. உடனே அந்த சன்யாசி ஒரு துணியால் அந்த நாயை எடுத்து வாகனத்தில் வைத்து மருத்துவ மனைக்கு செல்ல உதவினார்.

சத்சங்கத்தில் குரு கூறினார். .."எனது சிஷ்யனுக்கு கன்னி பெண்ணும் , நோயுற்ற நாயும் ஒன்றுதான். சன்யாசம் ஆன்மாவில் இருக்கவேண்டும், மனதில் அல்ல."

இந்த உண்மை சம்பவத்தில் வரும் குரு : சுவாமி சிவானந்தர் - www.dlshq.org
சிஷ்யன் : சுவாமி சச்சிதானந்தா - www.swamisatchidananda.org

ஆதாரம் : வாழ்வும் வாக்கும் -சுவாமி சச்சிதானந்தா

1 comment:

Anbu Selvaraj Subramanian said...

சுவாமி, நான் அந்த‌ அற்புதமான‌ சுவாமி ச‌ச்சுதாண‌ந்தரை நேரில் சந்திக்கும் பாக்கிய‌ம் பெற்ற‌வ‌ன்.ஆசிர‌ம‌த்தில் ச‌னிக்கிழ‌மை தோறும் சத்ச‌ங் ந‌ட‌க்கும். சுவாமிக‌ள் க‌ல‌ந்து கொண்டு அருளாசி வ‌ழ‌ங்குவார்க‌ள். ப‌க்த‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்கு விடைய‌ளிப்பார்க‌ள். அவ‌ர் பூத‌ உட‌ல் நீத்த‌து எங்க‌ளுக்கு இழ‌ப்பே.