Sunday, July 27, 2008

நாம ஜபம்

சப்த ரிஷிகளில் ஒருவரான நாரதர் எப்பொழுதும் கையில் தம்பூராவுடன், " ஓம் நமோ நாராயணாயா:" எனும் மந்திரத்தை சொன்னபடி மூன்று உலகையும் வலம் வருபவர். பக்திக்கு உதாரணமான நாரத முனிவர் பற்றி நமக்கு தெரியும்...
ஆனால் அவர் ஏன் அந்த மந்திரத்தை எப்பொழுதும் ஜபிக்கிறார் என தெரியுமா?


ஒரு நாள் வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் அனந்த சயனத்தில் இருந்தார். அவரின் பாத கமலத்திற்கு அருகில் மகாலக்ஷ்மி அமர்த்திருந்தார்.
அங்கு வந்த நாரதர் "பரப்பிரம்ம சொரூபா, அனைவரும் உனது நாமத்தை சொல்கிறார்களே ? அப்படி என்ன இருக்கிறது உனது நாமத்தில்?" என கேட்டார்.

தேன் சொட்டும் சிரிப்புடன் மஹாவிஷ்ணு நாரதரை பார்த்தார். "நாரதா நாம ஜபத்தின் மகிமையை உனக்கு விளக்குவதை விட, நீயே பரீட்சித்து பார்த்து தெரிந்து கொள். பூலோகம் சென்று தென்திசை தேசத்தில் ஒரு வனம் இருக்கும். அங்கு வாழும் ஒரு புழுவிடம் மஹா மந்திரத்தை சொல்." என்றார்.

பரந்தாமன் சொன்ன வனத்தை நோக்கி பயணமானார் நாரதர். அங்கு ஒரு புழு இலையின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் அருகில் சென்று கூறினார் ....
" ஓம் நமோ நாராயணாயா:"

உடனே அந்த புழு செத்து விழுந்தது.நாரதர் குழப்பம் அடைந்து வைகுண்டம் சென்றார்.
"பரமாத்மனே நான் நாமத்தை கூறியதும் அந்த புழு செத்து விழுந்தது. இது தான் உங்கள் நாம மகிமையா? " என கேட்டார் நாரதர்.

மந்தகாச புன்னகையுடன் மாதவன் கூறினார்.."நாரதா மீண்டும் பூலோகம் செல் அங்கு ஒரு பசு மாடு ஒரு கன்றை ஈனும் அதனிடம் சென்று மஹா மந்திரத்தை சொல்" என்கிறார்.

நாரதர் மீண்டும் பூலோகம் வந்தார். அங்கு இவருக்காகவே காத்திருந்ததை போல ஓர் பசு மாடு கன்றை ஈன்றது. கன்றின் அருகில் சென்று கூறினார் ....
" ஓம் நமோ நாராயணாயா:"

பிறந்து சில நிமிடங்களே வாழ்ந்த அந்து கன்று கீழே விழுந்து இறந்தது.
நாரதர் திடுக்கிட்டார். என்ன ஒரு பாவம் செய்து விட்டோம்?. பசுமாட்டை கொல்வதே மஹா பாவம். இதில் பிறந்து சில கணமேயான கன்றாக இருக்கும் பொழுதே அல்லவா கொன்றுவிட்டோம்.

வைகுண்டத்துக்கு ஓடோடி வந்தார் நாரதர். "பிரபோ ...! நான் மஹா பாவம் செய்து விட்டேன். உங்கள் நாமத்தை சொன்னதும் கன்று இறந்து விட்டது. இது என்ன விளையாட்டு? "

"நாரதா கவலை படாதே , மீண்டும் ஒரு முறை பூலோகம் சென்று மஹா மந்திரத்தை சொல். அங்கு ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருப்பான். இந்த முறை அவனிடம் சொல்" என்றார் அனைத்தும் அறிந்த அச்சுதன்.

நாரதருக்கோ பயம். ஏற்கனவே இரு முறை பட்ட அநுபவம் அவரை நடுங்க வைத்தது. ஒரு சிறுவன் தன்னால் மடிந்து விடக்கூடாதே என கவலை பட்டார்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பூலோகம் வந்தார்.

அங்கு சிறுவன் பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருந்தான். அவனருகில் சென்ற நாரதர் கூறினார்....
" ஓம் நமோ நாராயணாயா:"

நீங்கள் எதிர்பார்த்தது சரிதான்.. அந்த சிறுவன் நாமத்தை கேட்ட மாத்திரத்தில் இறந்தான்.

நாரதருக்கோ பித்து பிடித்த நிலை அடைந்தார். வைகுண்ட வாசன் ஏன் நம் வாழ்கையில் விளையாடுகிறார் என சந்தேகம் கொண்டார்.

மீண்டும் வைகுண்டம் அடைந்தார். அங்கு ஸ்ரீ மந் நாராயணனும் மஹா லக்ஷிமியும் அமர்ந்திருக்க அவர்களின் பாத கமலத்திற்கு அருகில் ஒரு முனிவரும் அமர்ந்து இருந்தார்.

மனம் தடுமாறிய நிலையில் வந்த நாரதரை கண்ட கேசவன் கேட்டார் ," நாரத என்ன ஆயிற்று உனக்கு?" என வினாவினார்.

தனது ஐயத்தை கேட்பதற்கு முன் வைகுண்டத்தில் புதிதாக வந்த முனிவரை குழப்பத்துடன் பார்த்தார் நாரதர். பின்பு வைகுண்டவாசனை நோக்கி "ஐயனே இது என்ன சோதனை. நான் மஹா மந்திரம் ஜபிக்கும் இடத்தில் எல்லாம் உயிர்கள் அனைத்தும் இறந்து விடுகின்றன. பால் மனம் மாறாத பாலகன் அவனும் எனது நாமத்தை கேட்டு இறந்து விட்டான். உங்கள் நாமம் அவளவு கொடுமையானதா ? அல்லது நான் உச்சரித்தது தவறா?" என கேட்டார் பக்திக்கு சூத்திரம் சொன்ன நாரதர்.

வாசுதேவர் நாரதரை பார்த்தார் ," நாரதா நீ சொல்வதிலும் உண்மை இருக்கும் என நினைக்கிறேன். எங்கே என் முன்னாள் ஒரு முறை மஹா மந்திரத்தை கூறு" என்றார்.

அனந்த சயனன் இருக்கும் தைரியத்தில் தனது மனதை திடமாக்கி கண்களை மூடி மீண்டும் ஒருமுறை சொன்னார்.
" ஓம் நமோ நாராயணாயா:"

நாரதர் கண்களை திறந்து பார்த்ததும் , ஸ்ரீ மன் நாராயணனின் பாதத்தில் இருந்த முனிவர் உடலை விடுத்து பரமாத்மாவிடம் சரணடைந்தார்.

நாரதர் ஒருவித கலக்க நிலை அடைந்தார்.

வரம் அளிக்கும் கரிவரத மூர்த்தியானவர் நாரதரை பார்த்து கூறினார் "....பக்தியின் வடிவமான நாரதா...எனது நாமத்தை உச்சரித்தால் அனைத்து உயிர்களும் முக்தி அடையும். உனது நாமத்தை கேட்டதும் புழு பசுவாகவும், பசு பாலகனகவும், மறு பிறப்பை அடைந்தது. பாலகன் மாமுனியாக அவதரித்ததும் மஹா மந்தரத்தால் தான் . கடைசியாக நீ மஹா மந்திரத்தை உச்சரித்தும் அந்த மாமுனியும் முக்தி அடைந்தான்....

மஹா மந்திரம் அனைவரையும் முக்தியடைய வைக்கும் சாதனம் என்பதை உணர்த்தவே உன்னை பயன்படுத்தினேன். ... மஹா மந்த்திரத்தை கேட்பவர்களுக்கே முக்தி என்றால் , அதை ஜபிப்பவர்கள அடையும் பயனை எண்ணிப்பார்"


நரதனுக்கு அனைத்தும் புரிந்தது. அன்று முதல் கையில் தம்பூராவுடன் தொடர்ந்து
உச்சரிக்க தொடங்கிறார்...

" ஓம் நமோ நாராயணாயா:"

" ஓம் நமோ நாராயணாயா:"

" ஓம் நமோ நாராயணாயா:"


--------------------ஓம்--------------------------


இந்த கதையை படிக்கும் சுவாரசியத்தில் உங்களை அறியாமல் எத்தனை முறை மஹா மந்திரம் ஜபித்தீர்கள் பார்த்தீர்களா? உங்களையும் சுற்றி இருக்கும் அனைத்து வஸ்துவையும் வளமாக்கும் ஒரே மந்திரம் மஹா மந்திரமே.

மேலும் ஸ்ரீ மந் நாராயணனின் ஸஹஸ்ர நாமத்தில் உள்ள சில பெயர்களை கதையில் சேர்த்தால் ஸஹஸ்ர நாமம் சொன்ன பலனும் கிடைத்தது.


மஹா வாக்கியம் என்றும் பொய்ப்பதில்லை . மந்திர ஜபம் நம்மை நல்கதிக்கு நாரதரை போல கொண்டு செல்லும்.


" ஓம் நமோ நாராயணாயா:"

5 comments:

Anonymous said...

OM NAMO NARAYANAYA,
EXCELLENT SWAMYJI.
ARANGAN ARULVANAGA
ANBUDAN
K.SRINIVASAN.

Senthil said...

Arumaiyaana kathai.
ஒம் நமோ நாராயணா.

சிவமுருகன் said...

ஒம் நமோ நாராயணா

Unknown said...

நன்றிகள் கோடி சுவாமிஜி

ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ

Unknown said...

நன்றிகள் கோடி சுவாமிஜி

ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் நமோ நாராயணாய நமஹ