Tuesday, July 22, 2008

சிஷ்யன் செய்த வேலைகள்

ஆற்றங்கரை ஓரம் குடிசை போன்று ஓர் ஆசிரமம். அங்கு வயதான குரு ஒருவரும் , சிஷ்யரும் வாழ்ந்து வந்தார்கள்.

இவர்கள் இருவர்களுக்கும் ஆன்மீக நிலையில் இருக்க வேண்டும் என்பதை காட்டிலும் வேலை செய்யாமல் உணவு கிடைக்க இந்த வேஷம் தேவை பட்டது என்றே சொல்ல வேண்டும்.

ஒரு நாள் இரவு...குருவும் சிஷ்யனும் படுக்கையில் படுத்து இருந்தனர்.

"சிஷ்யா வெளியே மழை பெய்கிறது என நினைக்கிறேன் ... நமது ஆடைகள் துவைத்து காய வைத்து இருக்கிறோம் அல்லவா? அதை எடுத்து கொண்டு வா.." என்றார் குரு.

படுகையில் படுத்த வண்ணமே சிஷ்யன் கூறினான்.
" குருவே நமது ஆசரமத்தில் இருக்கும் பூனை வெளியே சுற்றி விட்டு இப்பொழுது தான் உள்ளே வந்தது. எனது படுக்கை அருகே வந்த அந்த பூனையை தொட்டு பார்த்தேன் அது ஈரமாக இருக்க வில்லை. வெளியே மழை பெய்யவில்லை என்பதுக்கு இதை விட வேறு வழியில் பார்க்க தேவையில்லை என நினைக்கிறேன். "


சிறிது நிமிடங்கள் கடந்தது...

'சிஷ்யா ஆசிரம வாயில் ஏன் திறந்திருக்கிறது. அதை அடைத்து விட்டு வா..." என்றார் குரு.

"நாம் இருப்பதோ குடிசை போன்ற வீட்டில் , நாம் செல்வந்தர்களும் இல்லை அப்படி இருக்க நம்மிடம் திருடி செல்ல என்ன இருக்கிறது குருவே? கதவை நாம் ஏன் தாழிட வேண்டும் ?" என்றான் சிஷ்யன்.


மேலும் சிறுது நேரம் கடந்தது...

"மகனே விளக்கையாவது அணைத்து விட்டு தூங்கு....." என்றார் குரு.

"குருவே நீங்கள் சொன்ன இரு வேலைகளை செய்த களைப்பில் இருக்கிறேன். இந்த ஒரு வேலையாவது நீங்கள் செய கூடாதா?..." என்றான்..



________________________ஓம்_____________________________

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழி விழுமாறே.
-திருமந்திரம்

திருமூலரின் கருத்தை தவிர இதில் கூற என்ன இருக்கிறது?
நானும் எனது அனுபவத்தில் பல குருடுகளை கண்டிருக்கிறேன். அந்த இரு குருடுகளும் குழியில் விழுவதை தடுத்தாலும் மீறி விழுவதையும் ஆதங்கத்துடன் பார்த்திருக்கிறேன்.

தற்சமயம்......கண்ணை திற என்பவர்களை காட்டிலும் , குருடாக இரு என்பவர்களுக்கே மதிப்பு அதிகம்.

3 comments:

Ramesh said...

Swami,

Is this one of the paramaartha guru story?

Regards
Ramesh

ஸ்வாமி ஓம்கார் said...

I am not sure. this stories are came by ear to ear( Karna parampara). But same kind of story i red in ZEN stories.

Unknown said...

குருடனுக்கு குருடன் வழிகாட்ட முடியுமா? இருவரும் குழியிலே
விழுவார்கள் என்ற கருத்தை திருuமூலர் கூறுவதற்கு முன்பே இயேசு கிறிஸ்து சொல்லிவிட்டார் . இதை பரிசுத்த வேதாகமத்தில் நாம் பார்க்கலாம்.