Thursday, July 31, 2008

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?

மாலை வேளை....வேதாந்த ஆச்ரமம் ரம்யமாக இருந்தது...
நந்தவனத்துடன் கூடிய ஆச்ரமம் முன்பு மாணவர்கள் அமர்ந்து விவாதித்து கொண்டிருந்தனர்.

தர்க்கம் , மீமாம்சை என பல வேத கருத்துக்களை மாணவர்கள் அந்த ஆசிரமத்தில் பயின்று வந்தார்கள்.

அப்பொழுது தென்றல் வீசியது...நந்தவனத்தில் இருந்த மலர் கொடி அசைந்தது...
இதை கண்ட மாணவர்களுக்குள் தர்க்கம் ஆரம்பித்தது.

"காற்று வந்ததும் கொடி அசைந்ததா?" என ஒரு பகுதியும் ,
"கொடி அசைந்ததும் காற்று வந்ததா? " மற்றொரு பகுதியும்
என மாணவர்கள் இரு பகுதியாக பிரிந்தனர்.

இந்த தர்க்கம் முற்றிபோகவே , சப்தம் கேட்டு குரு நாதர் வெளியில் வந்தார்.

இரு குழுவின் தர்கத்தையும் கேட்டார்.

பின்பு அனைவரையும் பார்த்து கூறினார் ..."பிரிய ஆன்மாக்களே...! கொடியும் அசையவில்லை, கற்றும் வீசவில்லை... உங்கள் மனம் அசைந்தது , அதனால் எண்ணம் உங்கள் மனதில் வீசியது. "

வேதாந்த மாணவர்கள் உண்மையான வேத சாரத்தை உணர்தார்கள்.

----------------------------- ஓம் ------------------------------------------------

ஆதி சங்கரரின் வேதாந்த கருத்தை எளிமையாக உணரும் கதை இது...

நமது கண்களில் தெரியும் உலகம் என்பது உண்மையல்ல. நமது மனம் அசைவதால் அனைத்தும் அசைவதாக தெரிகிறது...

அதனால் தான் வேதம் நம்மை "அசதோமா ஸத்கரமய" என இருள் நிலையில் இருந்து உண்மை நிலைக்கு வர ப்ராத்தனை செய்ய சொல்கிறது.


அசைவற்ற மனதை கொண்டு என்றும் ஆசையற்றவனை உணருவோம்.

Sunday, July 27, 2008

நாம ஜபம்

சப்த ரிஷிகளில் ஒருவரான நாரதர் எப்பொழுதும் கையில் தம்பூராவுடன், " ஓம் நமோ நாராயணாயா:" எனும் மந்திரத்தை சொன்னபடி மூன்று உலகையும் வலம் வருபவர். பக்திக்கு உதாரணமான நாரத முனிவர் பற்றி நமக்கு தெரியும்...
ஆனால் அவர் ஏன் அந்த மந்திரத்தை எப்பொழுதும் ஜபிக்கிறார் என தெரியுமா?


ஒரு நாள் வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் அனந்த சயனத்தில் இருந்தார். அவரின் பாத கமலத்திற்கு அருகில் மகாலக்ஷ்மி அமர்த்திருந்தார்.
அங்கு வந்த நாரதர் "பரப்பிரம்ம சொரூபா, அனைவரும் உனது நாமத்தை சொல்கிறார்களே ? அப்படி என்ன இருக்கிறது உனது நாமத்தில்?" என கேட்டார்.

தேன் சொட்டும் சிரிப்புடன் மஹாவிஷ்ணு நாரதரை பார்த்தார். "நாரதா நாம ஜபத்தின் மகிமையை உனக்கு விளக்குவதை விட, நீயே பரீட்சித்து பார்த்து தெரிந்து கொள். பூலோகம் சென்று தென்திசை தேசத்தில் ஒரு வனம் இருக்கும். அங்கு வாழும் ஒரு புழுவிடம் மஹா மந்திரத்தை சொல்." என்றார்.

பரந்தாமன் சொன்ன வனத்தை நோக்கி பயணமானார் நாரதர். அங்கு ஒரு புழு இலையின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் அருகில் சென்று கூறினார் ....
" ஓம் நமோ நாராயணாயா:"

உடனே அந்த புழு செத்து விழுந்தது.நாரதர் குழப்பம் அடைந்து வைகுண்டம் சென்றார்.
"பரமாத்மனே நான் நாமத்தை கூறியதும் அந்த புழு செத்து விழுந்தது. இது தான் உங்கள் நாம மகிமையா? " என கேட்டார் நாரதர்.

மந்தகாச புன்னகையுடன் மாதவன் கூறினார்.."நாரதா மீண்டும் பூலோகம் செல் அங்கு ஒரு பசு மாடு ஒரு கன்றை ஈனும் அதனிடம் சென்று மஹா மந்திரத்தை சொல்" என்கிறார்.

நாரதர் மீண்டும் பூலோகம் வந்தார். அங்கு இவருக்காகவே காத்திருந்ததை போல ஓர் பசு மாடு கன்றை ஈன்றது. கன்றின் அருகில் சென்று கூறினார் ....
" ஓம் நமோ நாராயணாயா:"

பிறந்து சில நிமிடங்களே வாழ்ந்த அந்து கன்று கீழே விழுந்து இறந்தது.
நாரதர் திடுக்கிட்டார். என்ன ஒரு பாவம் செய்து விட்டோம்?. பசுமாட்டை கொல்வதே மஹா பாவம். இதில் பிறந்து சில கணமேயான கன்றாக இருக்கும் பொழுதே அல்லவா கொன்றுவிட்டோம்.

வைகுண்டத்துக்கு ஓடோடி வந்தார் நாரதர். "பிரபோ ...! நான் மஹா பாவம் செய்து விட்டேன். உங்கள் நாமத்தை சொன்னதும் கன்று இறந்து விட்டது. இது என்ன விளையாட்டு? "

"நாரதா கவலை படாதே , மீண்டும் ஒரு முறை பூலோகம் சென்று மஹா மந்திரத்தை சொல். அங்கு ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருப்பான். இந்த முறை அவனிடம் சொல்" என்றார் அனைத்தும் அறிந்த அச்சுதன்.

நாரதருக்கோ பயம். ஏற்கனவே இரு முறை பட்ட அநுபவம் அவரை நடுங்க வைத்தது. ஒரு சிறுவன் தன்னால் மடிந்து விடக்கூடாதே என கவலை பட்டார்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பூலோகம் வந்தார்.

அங்கு சிறுவன் பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருந்தான். அவனருகில் சென்ற நாரதர் கூறினார்....
" ஓம் நமோ நாராயணாயா:"

நீங்கள் எதிர்பார்த்தது சரிதான்.. அந்த சிறுவன் நாமத்தை கேட்ட மாத்திரத்தில் இறந்தான்.

நாரதருக்கோ பித்து பிடித்த நிலை அடைந்தார். வைகுண்ட வாசன் ஏன் நம் வாழ்கையில் விளையாடுகிறார் என சந்தேகம் கொண்டார்.

மீண்டும் வைகுண்டம் அடைந்தார். அங்கு ஸ்ரீ மந் நாராயணனும் மஹா லக்ஷிமியும் அமர்ந்திருக்க அவர்களின் பாத கமலத்திற்கு அருகில் ஒரு முனிவரும் அமர்ந்து இருந்தார்.

மனம் தடுமாறிய நிலையில் வந்த நாரதரை கண்ட கேசவன் கேட்டார் ," நாரத என்ன ஆயிற்று உனக்கு?" என வினாவினார்.

தனது ஐயத்தை கேட்பதற்கு முன் வைகுண்டத்தில் புதிதாக வந்த முனிவரை குழப்பத்துடன் பார்த்தார் நாரதர். பின்பு வைகுண்டவாசனை நோக்கி "ஐயனே இது என்ன சோதனை. நான் மஹா மந்திரம் ஜபிக்கும் இடத்தில் எல்லாம் உயிர்கள் அனைத்தும் இறந்து விடுகின்றன. பால் மனம் மாறாத பாலகன் அவனும் எனது நாமத்தை கேட்டு இறந்து விட்டான். உங்கள் நாமம் அவளவு கொடுமையானதா ? அல்லது நான் உச்சரித்தது தவறா?" என கேட்டார் பக்திக்கு சூத்திரம் சொன்ன நாரதர்.

வாசுதேவர் நாரதரை பார்த்தார் ," நாரதா நீ சொல்வதிலும் உண்மை இருக்கும் என நினைக்கிறேன். எங்கே என் முன்னாள் ஒரு முறை மஹா மந்திரத்தை கூறு" என்றார்.

அனந்த சயனன் இருக்கும் தைரியத்தில் தனது மனதை திடமாக்கி கண்களை மூடி மீண்டும் ஒருமுறை சொன்னார்.
" ஓம் நமோ நாராயணாயா:"

நாரதர் கண்களை திறந்து பார்த்ததும் , ஸ்ரீ மன் நாராயணனின் பாதத்தில் இருந்த முனிவர் உடலை விடுத்து பரமாத்மாவிடம் சரணடைந்தார்.

நாரதர் ஒருவித கலக்க நிலை அடைந்தார்.

வரம் அளிக்கும் கரிவரத மூர்த்தியானவர் நாரதரை பார்த்து கூறினார் "....பக்தியின் வடிவமான நாரதா...எனது நாமத்தை உச்சரித்தால் அனைத்து உயிர்களும் முக்தி அடையும். உனது நாமத்தை கேட்டதும் புழு பசுவாகவும், பசு பாலகனகவும், மறு பிறப்பை அடைந்தது. பாலகன் மாமுனியாக அவதரித்ததும் மஹா மந்தரத்தால் தான் . கடைசியாக நீ மஹா மந்திரத்தை உச்சரித்தும் அந்த மாமுனியும் முக்தி அடைந்தான்....

மஹா மந்திரம் அனைவரையும் முக்தியடைய வைக்கும் சாதனம் என்பதை உணர்த்தவே உன்னை பயன்படுத்தினேன். ... மஹா மந்த்திரத்தை கேட்பவர்களுக்கே முக்தி என்றால் , அதை ஜபிப்பவர்கள அடையும் பயனை எண்ணிப்பார்"


நரதனுக்கு அனைத்தும் புரிந்தது. அன்று முதல் கையில் தம்பூராவுடன் தொடர்ந்து
உச்சரிக்க தொடங்கிறார்...

" ஓம் நமோ நாராயணாயா:"

" ஓம் நமோ நாராயணாயா:"

" ஓம் நமோ நாராயணாயா:"


--------------------ஓம்--------------------------


இந்த கதையை படிக்கும் சுவாரசியத்தில் உங்களை அறியாமல் எத்தனை முறை மஹா மந்திரம் ஜபித்தீர்கள் பார்த்தீர்களா? உங்களையும் சுற்றி இருக்கும் அனைத்து வஸ்துவையும் வளமாக்கும் ஒரே மந்திரம் மஹா மந்திரமே.

மேலும் ஸ்ரீ மந் நாராயணனின் ஸஹஸ்ர நாமத்தில் உள்ள சில பெயர்களை கதையில் சேர்த்தால் ஸஹஸ்ர நாமம் சொன்ன பலனும் கிடைத்தது.


மஹா வாக்கியம் என்றும் பொய்ப்பதில்லை . மந்திர ஜபம் நம்மை நல்கதிக்கு நாரதரை போல கொண்டு செல்லும்.


" ஓம் நமோ நாராயணாயா:"

Wednesday, July 23, 2008

சுத்தமான நீர்

மாலை சூரியன் சாயும் நேரம். மங்களகரமான சூழல். மக்கள் கூடி நிற்க முனிவர் அவர்களுக்கு அருளாசி வழங்கி கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை கூறி அதற்கான தீர்வு கேட்டுகொண்டிருந்தார்கள்.

ஒரு சாதரண குடியானவன் அங்கு வந்தான்.

"
இறையருள் பெற்ற மாமுனியே ...! எனக்கு ஒரு வழி கூறுங்கள். எனது வாழ்க்கையில் எப்பொழுதும் குறைகளே நிறைந்திருக்கிறது. துன்பத்திற்கு அளவே இல்லை. நான் இவ்வளவு சிரமப்பட என்ன காரணம்?...."என கேட்டான்.


அவனை
தீர்க்கமாக பார்த்த குரு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை தனது சிஷ்யர்களிடத்தில் கொண்டு வர சொன்னார்.


குடியானவன்
முன்பு பாத்திரத்தை வைத்து ,"மகனே ....கடவுள் உனக்கு அனைத்து ஆனந்தத்தையும் வழங்கட்டும். உனது கைகளை இந்த பத்திரத்தில் நன்றாக கழுவு ..." என்றார்.

கைகளை
கழுவினான் குடியானவன். மாமுனிவர் குடியானவனை பார்த்து கேட்டார்," மகனே , இப்பொழுது அந்த நீர் அசுத்தமாகி விட்டது. முன்பு இருந்ததை போல சுத்தமான நீரை எனக்கு தா"

"
மா முனியே .....எனது கைகளில் உள்ள அழுக்கால் அந்த நீர் அசுத்தமாகி விட்டது. மீண்டும் எப்படி அந்த நீரையே சுத்தமாக தருவது? " என்றான் குடியானவன்.

"
எனது மகனே அது போன்றது தான் வாழ்க்கையும். கடவுள் எப்பொழுதும் சுத்தமான நிலையிலேயே வாழ்க்கையை நமக்கு தருகிறார். நமது கைகளை கொண்டே அதை அசுத்தமாக்குகிறோம். இனி வரும் காலங்களில் எந்த செயல் செய்தாலும் முதலில் சிந்தித்து செயல்பாடு. உனது செயல்கள் அனைத்தும் சுத்தமாகவே இருக்கும். ஆனந்தமான வாழ்கையை ஆனந்தமாக வாழு..."


குடியானவன்
மட்டுமல்ல அங்கு கூடி இருந்தவர்களும் உள்நிலையில் சுத்தமானார்கள்.

_________________ஓம்_________________________

"வாழ்கையில்
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம்?"
என மன வேதனைப்படுபவர்கள் பலர் உண்டு.

நமது கர்மாவை பற்றி எபொழுதும் சங்கடப்படுவதை விட. கடவுள் அளித்த கர்மாவை சிறப்பாக செயல்படுத்த முயல வேண்டும்.

பரார்த்த
கர்மா நமது கைகளில் இல்லை. ஆனால் சஞ்சிதம் எனும் கர்மா நமது கைகளுக்குள் உண்டு, சஞ்சிதத்தை சஞ்சலம் இன்றி அமைத்து கொண்டால் ஆனந்தமயமான வாழ்க்கை நமக்கு காத்திருக்கும்.


Tuesday, July 22, 2008

சிஷ்யன் செய்த வேலைகள்

ஆற்றங்கரை ஓரம் குடிசை போன்று ஓர் ஆசிரமம். அங்கு வயதான குரு ஒருவரும் , சிஷ்யரும் வாழ்ந்து வந்தார்கள்.

இவர்கள் இருவர்களுக்கும் ஆன்மீக நிலையில் இருக்க வேண்டும் என்பதை காட்டிலும் வேலை செய்யாமல் உணவு கிடைக்க இந்த வேஷம் தேவை பட்டது என்றே சொல்ல வேண்டும்.

ஒரு நாள் இரவு...குருவும் சிஷ்யனும் படுக்கையில் படுத்து இருந்தனர்.

"சிஷ்யா வெளியே மழை பெய்கிறது என நினைக்கிறேன் ... நமது ஆடைகள் துவைத்து காய வைத்து இருக்கிறோம் அல்லவா? அதை எடுத்து கொண்டு வா.." என்றார் குரு.

படுகையில் படுத்த வண்ணமே சிஷ்யன் கூறினான்.
" குருவே நமது ஆசரமத்தில் இருக்கும் பூனை வெளியே சுற்றி விட்டு இப்பொழுது தான் உள்ளே வந்தது. எனது படுக்கை அருகே வந்த அந்த பூனையை தொட்டு பார்த்தேன் அது ஈரமாக இருக்க வில்லை. வெளியே மழை பெய்யவில்லை என்பதுக்கு இதை விட வேறு வழியில் பார்க்க தேவையில்லை என நினைக்கிறேன். "


சிறிது நிமிடங்கள் கடந்தது...

'சிஷ்யா ஆசிரம வாயில் ஏன் திறந்திருக்கிறது. அதை அடைத்து விட்டு வா..." என்றார் குரு.

"நாம் இருப்பதோ குடிசை போன்ற வீட்டில் , நாம் செல்வந்தர்களும் இல்லை அப்படி இருக்க நம்மிடம் திருடி செல்ல என்ன இருக்கிறது குருவே? கதவை நாம் ஏன் தாழிட வேண்டும் ?" என்றான் சிஷ்யன்.


மேலும் சிறுது நேரம் கடந்தது...

"மகனே விளக்கையாவது அணைத்து விட்டு தூங்கு....." என்றார் குரு.

"குருவே நீங்கள் சொன்ன இரு வேலைகளை செய்த களைப்பில் இருக்கிறேன். இந்த ஒரு வேலையாவது நீங்கள் செய கூடாதா?..." என்றான்..



________________________ஓம்_____________________________

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழி விழுமாறே.
-திருமந்திரம்

திருமூலரின் கருத்தை தவிர இதில் கூற என்ன இருக்கிறது?
நானும் எனது அனுபவத்தில் பல குருடுகளை கண்டிருக்கிறேன். அந்த இரு குருடுகளும் குழியில் விழுவதை தடுத்தாலும் மீறி விழுவதையும் ஆதங்கத்துடன் பார்த்திருக்கிறேன்.

தற்சமயம்......கண்ணை திற என்பவர்களை காட்டிலும் , குருடாக இரு என்பவர்களுக்கே மதிப்பு அதிகம்.

Monday, July 21, 2008

குருவை தேடி

பலநாட்களாக ஒருவன் குருவை தேடி வந்தான்...எங்கு சென்றாலும் அவனுக்கு குரு கிடைக்காத நிலை ஏற்பட்டது. சில ஆசிரமங்களுக்கு சென்றால் அங்கு மடாதிபதியாக இருக்கும் குருவை நெருங்க பல தடைகள் இருந்தது.

தனக்கு அருகில் இருந்து கற்று கொடுக்கும் குருவை எதிர்பார்த்து ஏங்கினான்.
ஒரு ஞானி இருப்பதாக கேள்விப்பட்டு அவரிடம் சென்று தனது குருவை பற்றி கேட்போம் என எண்ணினான்.

ஞானியின் இருப்பிடத்திற்கு சென்று அவற்றை சந்திக்கும் பொழுது ஞானியோ கோமணத்தை கட்டிக்கொண்டு , வீட்டிற்கு முன்பு இருந்த சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரின் முழங்கால் வரை சாக்கடையும், சகதியுமாக இருந்தது. சாக்கடையை அவர் கலக்கி சுத்தம் செய்வதால் அந்த இடம் முழுவதும் ஒரே துர்நாற்றம் வீசியது.

ஞானியிடம் சென்றவன்.."ஐயா நீங்கள் மகா ஞானி என கேள்வி பட்டிருக்கிறேன். பல சித்திகள் உங்களிடம் உள்ளதாம். தயவு செய்து எனது குரு எங்கிருக்கிறார் என கூறுங்கள் .." என்றான்.

ஞானி அவனைப்பார்த்து புன்னகைத்தவாரே கூறினார்..."எவன் ஒருவனுக்கு உடலை சுற்றி ஒரு ஒளிவட்டம் இருக்கிறதோ , அவனை நெருங்கினால் ரோஜா பூவின் மனம் கமழுகிறதோ அவனே உனது குரு ..."

உடனே அங்கிருந்து புறப்பட்டு காடு மலை என அனைத்து இடங்களிலும் குருவை தேடி அலைந்தான். பல வருடங்கள் ஆனது. உடல் இளைத்து துரும்பனது. இதற்கு மேல் தேட முடியாத நிலையில் ஓர் மரத்தடியில் அமர்ந்தான்.

திடீர் என அவனது நாசியில் ரோஜா பூவின் நறுமணத்தை உணர்ந்தான். மரத்தின் பின்பகுதியில் கண்கள் கூசும் ஒளி வீசுவதை கண்டான்.


"எனது சிஷயனே உனக்காகவே காத்திருக்கிறேன் , வா எனதருகில் ..."

மகிழ்ச்சியான மனமும் உற்சாகமான துள்ளலுடன் அருகில் சென்றான்.
அருகில் சென்று பார்க்கும் பொழுது , அங்கு அவனுக்கு வழி காட்டிய ஞானி உட்கார்ந்திருந்தார்.

கண்களில் நீர் வடிய...கைகள் துடிக்க அவரின் கால்களில் விழுந்தான் . பின்பு அவரிடம் "...குருவே பலவருடத்திற்கு முன்பு உங்களிடம் வரும் பொழுதே ஏன் நீங்கள் தான் எனது குரு என கூறவில்லை? என்னை ஏன் காக்க வைத்தீர்கள்? ..." என கேட்டான்.

"குழந்தாய் நீ முதல் முறை வரும் பொழுதே என் உடலில் ரோஜாவின் சுகந்தமும் , உடலில் ஒளியும் வீசியது. அப்பொழுது நான் சாக்கடை சுத்தம் செய்து கொண்டிருந்ததால் உனக்கு என் மேல் கவனம் இல்லை. உனது அறியாமையால் அதை உணர முடியவில்லை. எனது குரு எங்கே என கேட்டாயே தவிர , நீங்கள் எனது குருவா ? என கேட்கவில்லை. அதனால் நான் உனக்கு குரு எங்கே என சொன்னேனே தவிர நானே உனது குரு என கூறவில்லை. பல வருட முயற்சியால் இப்பொழுது உனது அறியாமை அகன்றது , என்னை கண்டு கொண்டாய். ...:"


சிஷ்யனின் மனதில் ஒளி வீச தொடங்கியது..... ஆன்மீக நறுமணமும் கமழ்தது ....


________________________ஓம்_____________________________

ஆன்மீக குரு என்பவர் கைகளில் ஜப மாலையுடன் புலித்தோலில் அமர்திருப்பர் என்றும், எப்பொழுதும் அமைதியாக இருப்பார், கோபம் என்றாலே என்ன என தெரியாதவராக இருப்பார் என்று பலர் எண்ணுகிறார்கள் .
குரு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்வது முட்டாள்தனம்.

குருவானவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
பரபிரம்மதின் வடிவமானவர் குரு. பரபிரம்மம் எப்படி எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறதோ அது போல குருவும் அனைத்து ரூபங்களிரும் இருப்பார்.

உங்கள் வீட்டிக்கு வரும் குப்பை அள்ளுபவர் , உங்கள் மனைவி , உங்கள் குழந்தை , உங்கள் செல்ல பிராணியான நாய் என யார் வேண்டுமானாலும் உங்கள் குருவாக இருக்கலாம்.

குருவை உங்கள் பார்வையில் தேடாதீர்கள்... அறியாமை இல்லா மனதை திறந்து வையுங்கள் உங்கள் குரு தானே வருவார்.