Wednesday, July 23, 2008

சுத்தமான நீர்

மாலை சூரியன் சாயும் நேரம். மங்களகரமான சூழல். மக்கள் கூடி நிற்க முனிவர் அவர்களுக்கு அருளாசி வழங்கி கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை கூறி அதற்கான தீர்வு கேட்டுகொண்டிருந்தார்கள்.

ஒரு சாதரண குடியானவன் அங்கு வந்தான்.

"
இறையருள் பெற்ற மாமுனியே ...! எனக்கு ஒரு வழி கூறுங்கள். எனது வாழ்க்கையில் எப்பொழுதும் குறைகளே நிறைந்திருக்கிறது. துன்பத்திற்கு அளவே இல்லை. நான் இவ்வளவு சிரமப்பட என்ன காரணம்?...."என கேட்டான்.


அவனை
தீர்க்கமாக பார்த்த குரு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை தனது சிஷ்யர்களிடத்தில் கொண்டு வர சொன்னார்.


குடியானவன்
முன்பு பாத்திரத்தை வைத்து ,"மகனே ....கடவுள் உனக்கு அனைத்து ஆனந்தத்தையும் வழங்கட்டும். உனது கைகளை இந்த பத்திரத்தில் நன்றாக கழுவு ..." என்றார்.

கைகளை
கழுவினான் குடியானவன். மாமுனிவர் குடியானவனை பார்த்து கேட்டார்," மகனே , இப்பொழுது அந்த நீர் அசுத்தமாகி விட்டது. முன்பு இருந்ததை போல சுத்தமான நீரை எனக்கு தா"

"
மா முனியே .....எனது கைகளில் உள்ள அழுக்கால் அந்த நீர் அசுத்தமாகி விட்டது. மீண்டும் எப்படி அந்த நீரையே சுத்தமாக தருவது? " என்றான் குடியானவன்.

"
எனது மகனே அது போன்றது தான் வாழ்க்கையும். கடவுள் எப்பொழுதும் சுத்தமான நிலையிலேயே வாழ்க்கையை நமக்கு தருகிறார். நமது கைகளை கொண்டே அதை அசுத்தமாக்குகிறோம். இனி வரும் காலங்களில் எந்த செயல் செய்தாலும் முதலில் சிந்தித்து செயல்பாடு. உனது செயல்கள் அனைத்தும் சுத்தமாகவே இருக்கும். ஆனந்தமான வாழ்கையை ஆனந்தமாக வாழு..."


குடியானவன்
மட்டுமல்ல அங்கு கூடி இருந்தவர்களும் உள்நிலையில் சுத்தமானார்கள்.

_________________ஓம்_________________________

"வாழ்கையில்
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம்?"
என மன வேதனைப்படுபவர்கள் பலர் உண்டு.

நமது கர்மாவை பற்றி எபொழுதும் சங்கடப்படுவதை விட. கடவுள் அளித்த கர்மாவை சிறப்பாக செயல்படுத்த முயல வேண்டும்.

பரார்த்த
கர்மா நமது கைகளில் இல்லை. ஆனால் சஞ்சிதம் எனும் கர்மா நமது கைகளுக்குள் உண்டு, சஞ்சிதத்தை சஞ்சலம் இன்றி அமைத்து கொண்டால் ஆனந்தமயமான வாழ்க்கை நமக்கு காத்திருக்கும்.


Tuesday, July 22, 2008

சிஷ்யன் செய்த வேலைகள்

ஆற்றங்கரை ஓரம் குடிசை போன்று ஓர் ஆசிரமம். அங்கு வயதான குரு ஒருவரும் , சிஷ்யரும் வாழ்ந்து வந்தார்கள்.

இவர்கள் இருவர்களுக்கும் ஆன்மீக நிலையில் இருக்க வேண்டும் என்பதை காட்டிலும் வேலை செய்யாமல் உணவு கிடைக்க இந்த வேஷம் தேவை பட்டது என்றே சொல்ல வேண்டும்.

ஒரு நாள் இரவு...குருவும் சிஷ்யனும் படுக்கையில் படுத்து இருந்தனர்.

"சிஷ்யா வெளியே மழை பெய்கிறது என நினைக்கிறேன் ... நமது ஆடைகள் துவைத்து காய வைத்து இருக்கிறோம் அல்லவா? அதை எடுத்து கொண்டு வா.." என்றார் குரு.

படுகையில் படுத்த வண்ணமே சிஷ்யன் கூறினான்.
" குருவே நமது ஆசரமத்தில் இருக்கும் பூனை வெளியே சுற்றி விட்டு இப்பொழுது தான் உள்ளே வந்தது. எனது படுக்கை அருகே வந்த அந்த பூனையை தொட்டு பார்த்தேன் அது ஈரமாக இருக்க வில்லை. வெளியே மழை பெய்யவில்லை என்பதுக்கு இதை விட வேறு வழியில் பார்க்க தேவையில்லை என நினைக்கிறேன். "


சிறிது நிமிடங்கள் கடந்தது...

'சிஷ்யா ஆசிரம வாயில் ஏன் திறந்திருக்கிறது. அதை அடைத்து விட்டு வா..." என்றார் குரு.

"நாம் இருப்பதோ குடிசை போன்ற வீட்டில் , நாம் செல்வந்தர்களும் இல்லை அப்படி இருக்க நம்மிடம் திருடி செல்ல என்ன இருக்கிறது குருவே? கதவை நாம் ஏன் தாழிட வேண்டும் ?" என்றான் சிஷ்யன்.


மேலும் சிறுது நேரம் கடந்தது...

"மகனே விளக்கையாவது அணைத்து விட்டு தூங்கு....." என்றார் குரு.

"குருவே நீங்கள் சொன்ன இரு வேலைகளை செய்த களைப்பில் இருக்கிறேன். இந்த ஒரு வேலையாவது நீங்கள் செய கூடாதா?..." என்றான்..



________________________ஓம்_____________________________

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழி விழுமாறே.
-திருமந்திரம்

திருமூலரின் கருத்தை தவிர இதில் கூற என்ன இருக்கிறது?
நானும் எனது அனுபவத்தில் பல குருடுகளை கண்டிருக்கிறேன். அந்த இரு குருடுகளும் குழியில் விழுவதை தடுத்தாலும் மீறி விழுவதையும் ஆதங்கத்துடன் பார்த்திருக்கிறேன்.

தற்சமயம்......கண்ணை திற என்பவர்களை காட்டிலும் , குருடாக இரு என்பவர்களுக்கே மதிப்பு அதிகம்.

Monday, July 21, 2008

குருவை தேடி

பலநாட்களாக ஒருவன் குருவை தேடி வந்தான்...எங்கு சென்றாலும் அவனுக்கு குரு கிடைக்காத நிலை ஏற்பட்டது. சில ஆசிரமங்களுக்கு சென்றால் அங்கு மடாதிபதியாக இருக்கும் குருவை நெருங்க பல தடைகள் இருந்தது.

தனக்கு அருகில் இருந்து கற்று கொடுக்கும் குருவை எதிர்பார்த்து ஏங்கினான்.
ஒரு ஞானி இருப்பதாக கேள்விப்பட்டு அவரிடம் சென்று தனது குருவை பற்றி கேட்போம் என எண்ணினான்.

ஞானியின் இருப்பிடத்திற்கு சென்று அவற்றை சந்திக்கும் பொழுது ஞானியோ கோமணத்தை கட்டிக்கொண்டு , வீட்டிற்கு முன்பு இருந்த சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரின் முழங்கால் வரை சாக்கடையும், சகதியுமாக இருந்தது. சாக்கடையை அவர் கலக்கி சுத்தம் செய்வதால் அந்த இடம் முழுவதும் ஒரே துர்நாற்றம் வீசியது.

ஞானியிடம் சென்றவன்.."ஐயா நீங்கள் மகா ஞானி என கேள்வி பட்டிருக்கிறேன். பல சித்திகள் உங்களிடம் உள்ளதாம். தயவு செய்து எனது குரு எங்கிருக்கிறார் என கூறுங்கள் .." என்றான்.

ஞானி அவனைப்பார்த்து புன்னகைத்தவாரே கூறினார்..."எவன் ஒருவனுக்கு உடலை சுற்றி ஒரு ஒளிவட்டம் இருக்கிறதோ , அவனை நெருங்கினால் ரோஜா பூவின் மனம் கமழுகிறதோ அவனே உனது குரு ..."

உடனே அங்கிருந்து புறப்பட்டு காடு மலை என அனைத்து இடங்களிலும் குருவை தேடி அலைந்தான். பல வருடங்கள் ஆனது. உடல் இளைத்து துரும்பனது. இதற்கு மேல் தேட முடியாத நிலையில் ஓர் மரத்தடியில் அமர்ந்தான்.

திடீர் என அவனது நாசியில் ரோஜா பூவின் நறுமணத்தை உணர்ந்தான். மரத்தின் பின்பகுதியில் கண்கள் கூசும் ஒளி வீசுவதை கண்டான்.


"எனது சிஷயனே உனக்காகவே காத்திருக்கிறேன் , வா எனதருகில் ..."

மகிழ்ச்சியான மனமும் உற்சாகமான துள்ளலுடன் அருகில் சென்றான்.
அருகில் சென்று பார்க்கும் பொழுது , அங்கு அவனுக்கு வழி காட்டிய ஞானி உட்கார்ந்திருந்தார்.

கண்களில் நீர் வடிய...கைகள் துடிக்க அவரின் கால்களில் விழுந்தான் . பின்பு அவரிடம் "...குருவே பலவருடத்திற்கு முன்பு உங்களிடம் வரும் பொழுதே ஏன் நீங்கள் தான் எனது குரு என கூறவில்லை? என்னை ஏன் காக்க வைத்தீர்கள்? ..." என கேட்டான்.

"குழந்தாய் நீ முதல் முறை வரும் பொழுதே என் உடலில் ரோஜாவின் சுகந்தமும் , உடலில் ஒளியும் வீசியது. அப்பொழுது நான் சாக்கடை சுத்தம் செய்து கொண்டிருந்ததால் உனக்கு என் மேல் கவனம் இல்லை. உனது அறியாமையால் அதை உணர முடியவில்லை. எனது குரு எங்கே என கேட்டாயே தவிர , நீங்கள் எனது குருவா ? என கேட்கவில்லை. அதனால் நான் உனக்கு குரு எங்கே என சொன்னேனே தவிர நானே உனது குரு என கூறவில்லை. பல வருட முயற்சியால் இப்பொழுது உனது அறியாமை அகன்றது , என்னை கண்டு கொண்டாய். ...:"


சிஷ்யனின் மனதில் ஒளி வீச தொடங்கியது..... ஆன்மீக நறுமணமும் கமழ்தது ....


________________________ஓம்_____________________________

ஆன்மீக குரு என்பவர் கைகளில் ஜப மாலையுடன் புலித்தோலில் அமர்திருப்பர் என்றும், எப்பொழுதும் அமைதியாக இருப்பார், கோபம் என்றாலே என்ன என தெரியாதவராக இருப்பார் என்று பலர் எண்ணுகிறார்கள் .
குரு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்வது முட்டாள்தனம்.

குருவானவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
பரபிரம்மதின் வடிவமானவர் குரு. பரபிரம்மம் எப்படி எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறதோ அது போல குருவும் அனைத்து ரூபங்களிரும் இருப்பார்.

உங்கள் வீட்டிக்கு வரும் குப்பை அள்ளுபவர் , உங்கள் மனைவி , உங்கள் குழந்தை , உங்கள் செல்ல பிராணியான நாய் என யார் வேண்டுமானாலும் உங்கள் குருவாக இருக்கலாம்.

குருவை உங்கள் பார்வையில் தேடாதீர்கள்... அறியாமை இல்லா மனதை திறந்து வையுங்கள் உங்கள் குரு தானே வருவார்.

Friday, July 18, 2008

நிர்வாணம்

வியாசர் தனது மகன் சுக பிரம்மத்துடன் வேறு ஒரு இடத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்..
இவர்களை பற்றி சில தகவல்களை பார்ப்போம்...

வேதங்கள் அனைத்தையும் நான்காக தொகுத்தவரும், பதினெட்டு புராணங்களை அமைத்தவரும் வியாசர். மகாபாரதத்தை இவர் உருவாக்க எழுத்து பணியை (Script Writing ) செய்தது விநாயகர் என்பதன் மூலம் இவரின் ஆன்மீக நிலை விளங்கும்.

சுக பிரம்மா மஹரிஷி தனது தந்தை வியாசரை காட்டிலு உயர் நிலையில் இருப்பவர். பரப்பிரம்ம சொரூபமகவும் அவதூதரகவும் கோலம் கொண்டவர்.
(அவதூத நிலை என்பது எப்பொழுதும் இறை அனுபூதியில் திளைத்த நிர்வாண நிலை- இதற்கு பகவான் ரமண மஹரிஷி ஒரு உதாரணம் )

வியாசர் அவரின் கமண்டலம் , ஆசனம் மற்றும் யோகா தண்டம் ஆகியவற்றுடன் நடந்து கொண்டிருந்தார். சுக பிரம்மமோ ஆடை எதுவும் இல்லாமல் , முழுவதும் மழித்த தலை கைகளில் எந்த பொருளும் இல்லாத நிலையில் அவருடன் நடந்து கொண்டிருந்தார் அல்லது அவர் "உடல் நடந்தது" என்றும் சொல்லலாம்.

வழியில் ஒரு சிற்றோடை குறுகிட்டது , அதை கடக்க ஒரு சிறு பாலமும் இருந்தது.
ஆற்றில் சில பெண்கள் குளித்து கொண்டிர்ந்தார்கள்.
ஒருவர் மட்டுமே நடக்கும் வகையில் பாலம் இருந்ததால் முதலில் சுக பிரம்மத்தை கடக்க சொல்லி விட்டு பின்பு வியாசர் ஆற்றை கடந்தார்.

ஆடை எதுவும் இல்லாத நிலையில் ஒருவர் தங்களை கடந்து செல்வதை பார்த்த பெண்கள் இயல்பாக இருந்தார்கள். ஆனால் வியாசர் பாலத்தை கடக்கும் பொழுது தங்கள் கைகளாலும் சிலர் ஆடையாலும் தங்களை மூடி கொண்டனர்.

இதை கண்ட வியாசருக்கு குழப்பம் , இவர்கள் செய்யும் செய்கை நேர்மாறாக இருக்கிறதே என குழம்பினார்.

"மாலவனுக்கு படைக்கும் மலரை போன்ற மங்கையரே, நிர்வாண நிலையில் செல்லும் எனது தமயனை பார்த்து நாணம் அடையாத நீங்கள், என்னை பார்த்து உங்கள் உடலை மறைத்து கொண்டதன் மாயமென்ன? " என கேட்டார் வியாசர்.

அந்த மங்கையர்கள் தங்கள் உடலை மறைத்த வண்ணம் வியாசரை பார்த்து கூறினார்கள்..." முனிவரே , அவர் அனைத்தையும் துறந்தால் அவருக்கு நாங்கள் நாணம் அடைய வில்லை எங்களுக்கு அவர் அன்னியராக தெரியவில்லை. நாங்கள் அவரை எங்களுள் ஒருவராகவே பார்த்தோம்.

ஆனால் நீங்கள் ஆடை தரித்து உங்களுக்கு நாணம் மற்றும் பெற உணர்வுகள் உண்டு என வெளிப்படுத்துகிறீர்கள். மேலும் உங்கள் கைகளில் சில பொருட்கள் உங்களை பற்று உள்ளவராக காட்டுகிறது. இவ்வாறு இருக்க நாங்கள் நாணம் அடையாமல் இருக்க முடியுமா?" என கேட்டனர்.

வியாசர் தன் சுய தன்மையை உணர்ந்தார் . ஆற்றை கடந்து மறுபுறம் சென்றதும் தனது கமண்டலம், ஆசனம், ஆடை மற்றும் யோக தண்டத்தை ஆற்றில் எறிந்தார். தானும் ஒரு அவதூதரக மாறினார்.

தனக்கு இத்தகைய ஞானத்தை வழங்கிய மகளிரை கண்டார். அங்கு வெறும் சிற்றோடை மட்டுமே இருந்தது. மகளிராக வந்தது மகேசனே என மகிழ்ந்தார்.

இரு அவதூதர்களும் அத்மா ஞானத்துடன் பயணத்தை தொடர்த்தனர்.
________________________ஓம்_____________________________

உணருங்கள்...

வியாசர் தான் ஒரு மாமுனி என்றோ அல்லது வேதங்களை தொகுத்தவர் என்றோ ஆணவம் கொள்ளாமல் எளிய மக்களின் கருத்தையும் குரு வாக்காக எண்ணினார்.

பரமாத்மா எப்பொழுது , எந்த ஷணத்தில் நமக்கு மேன்மை அளிப்பார் என தெரியாது.

அனைத்து பொருளிலும் பரமாத்மா சொருபத்தை கண்டால், அனைத்தும் குருவாக இருந்து வழி நடத்தும்.

Thursday, July 17, 2008

குரு பூர்ணிமா

இன்று குரு பூர்ணிமா....!

இருளை நீக்கும் குருவை வணங்கி உள்ஒளி பெறுவோம்.

*குருபியோ நம *

நிதயே சர்வ வித்யானாம்
பிக்ஷஜே பவ ரோகினாம்
குருவே சர்வ லோகணாம்
தக்ஷணாமூர்த்தியே நம

அனைத்து ஞானங்களின் தலைவனே..
அறியாமை நோயை தீர்க்கும் மருத்துவனே
எல்லா உலகிலும் வியாபித்து இருப்பவனே
தென்திசை நாயகனே உன்னை வணங்குகிறேன் .


தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்

Monday, July 14, 2008

பொக்கை வாய் உபதேசம்

குரு மரண படுக்கையில் இருந்தார்.... பொது மக்களும் சிஷ்யர்களும் குருவின் படுக்கையை சுற்றி நின்று இருந்தார்கள் .

தலைமை சீடன் குருவை நெருங்கி கலங்கிய கண்களுடன் கேட்டான்,"...குருவே உங்கள் திருவடிக்கு எனது வணக்கம்... உங்களை சிறிது காலத்திற்கு பிறகு ஸ்துல உடலில் பார்க்க முடியாது... இதை நினைக்கும் பொழுது ஏற்ப்படும் வருத்தத்தை அளவிட முடியாது... தயவு செய்து எனக்கு கடைசியாக ஒரு உபதேசம் செய்யுங்கள். இனி வரும் காலங்களில் உங்கள் உபதேசம் எனக்கு குருவாக இருக்கட்டும்...


உடலில் இருந்து உயிர் பிரியும் நிலையிலும் அமைதியும் ஆனந்தமும் குடி கொண்ட முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு...


பின்பு தனது வாயை அகலமாக திறந்தார்... பற்கள் இல்லாத வாயை கட்டினார். தனது நாக்கையும் காண்பித்தார்.

சிஷ்யனுக்கோ ஒன்றும் புரியவில்லை.

கேள்விக்குறியை முகத்தில் தாங்கி நிற்கும் சிஷ்யனை பார்த்து கூறினார்,
"எனது பற்கள் கடினமானதாக இருந்தன , அவை எனது இறுதி காலம் வரை என்னுடன் இல்லை. மென்மையான எனது நக்கு என்னுடன் இபொழுதும் இருக்கிறது...எனதருமை சிஷ்யா.... எப்பொழுதும் மென்மையாக இரு. இதுவே எனது இறுதி உபதேசம் .."


சிஷ்ய பரம்பரைக்கு உபதேசித்த குருவின் பிராணன் "மென்மையாக" பிரிந்தது...


________________________ஓம்_____________________________

மென்மை என்பது மேன்மையான நிலை. பூவில் மென்மை இருப்பதால் தான் அவை இறைவனை பூஜிக்க பயன்படுகிறது.


பஞ்ச பூதத்தில் நீர், நெருப்பு, காற்று, வெளி மற்றும் மண் என அனைத்தும் ஒரு மென்மை இருப்பதை காண முடியும்.

மேன்மையான இறை தன்மையை மென்மையாக தியானிப்போம்...

-
ஸ்வாமி ஓம்கார்

Saturday, July 12, 2008

ஓட்டை வாளி



ஆனந்தனுக்கு ஆன்மீக தாகம் அதிகமாகவே இருந்தது. தனக்கு ஒரு குரு வேண்டி பல இடங்களில் அலைந்தான்.

பல ஆசிரமங்களுக்கு சென்றான் ஆனால் அங்கிருப்பவர்களுக்கும் இவனுக்கும் ஒத்து வரவில்லை. அதிக பட்சம் சில நாட்கள் மட்டுமே அவனால் அங்கிருக்க முடியும். அதற்குள் மன ரீதியாக வித்தியாசம் ஏற்பட்டு வெளியேறி விடுவான்.

தனக்கு ஆன்மீக குரு கிடைப்பார் என்ற நம்பிக்கையே ஆனந்துனுக்கு போய்விட்டது. அந்த சமயம் நண்பன் ஒரு முனிவரை பற்றி சொன்னான். கடைசியாக முயற்சி செய்ய ஆனந்து புறப்பட்டான்.

அங்கு முனிவர் சந்தமாக நிஷ்டையில் இருப்பார் என பார்த்தல் அவர் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு முன்பு சென்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். தனக்கு எங்கும் சரியான குரு கிடைக்காத தனது நிலையை சொல்லி வருந்தினான்.

ஒரு புறம் இதை கேட்டு கொண்டே தோட்டத்தில் களைகளை பறித்து கொண்டிருந்தார் முனிவர்.

தோட்டத்து கிணற்றுக்கு அருகில் ஆனந்தனை அழைத்து வந்து, ஒரு வாளியை கொடுத்து தண்ணீர் இரைக்க சொன்னார்.

பின்பு அவர் தனது களை பறிக்கும் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
தண்ணீர் எடுக்க முயற்சித்தாலும் வாளியில் தண்ணீர் நிரம்பாததை உணர்த்த ஆனந்த்தான், வாளியை கிணற்றிலிருந்து வெளியே எடுத்து பார்த்தான். வாளியின் கீழ் புறத்தில் பெரிய ஓட்டை ஒன்று இருந்ததை உணர்ந்தான்.

நேரே முனிவரிடம் வந்து, "குருவே... ஓட்டை வாளியை கொடுத்தால் நீர் எப்படி இரைப்பது?" என கேட்டான் ஆனந்தன்.

மெல்லிய புன்னகையுடன் முனிவர் அருகில் வந்து...அந்த வாளியை வங்கி கொண்டார். பின்பு தொடர்ந்தார்," ...ஆனந்தா , இங்கு அல்ல எங்கு தேடினாலும் உனது குரு கிடைக்க மாட்டார். குறை நீ சந்தித்த குருமார்களிடம் அல்ல உன்னிடம் தான். குருவை அடையவேண்டியவர்கள் முதலில் கிழ்படியும் தன்மையை வளர்த்து கொள்ள வேண்டும்.
வாளியில் உள்ள ஓடையை கண்டவுடன்...உனது புத்திசாலித்தனம் வேலை செய்ததே தவிர , குருவை பற்றி நீ சிந்திக்கவில்லை.
குருவின் செயலில் எதாவது ஒரு அர்த்தம் இருக்கம் என நீ செயல்பட்டிருந்தால் உனக்கு எப்பொழுதோ குரு கிடைத்து இருப்பார்.... உனது குருவின் தேடலை மீண்டும் தொடரு...எனது ஆசிர்வாதங்கள் ...


ஆனந்தனின் மனதில் இருந்த அறியாமை இருள் விலகியது....புதிய ஒளியுடன் புறப்பட்டான்...



________________________ஓம்_____________________________

பணம் பொருளை தேடும் உலகம் இது. இதில்...
இருள் விளக்கும் குருவை தேடி யார் போவர்கள்?

கீழ்படிதல் எனும் ஒரு குணம் மட்டுமே சிலரை முக்தியடைய உதவிய வரலாறு உண்டு. வைணவ மரபில் கீழ்படிதல் என்பது இயல்பான ஒரு குணம்.

கீழ்படிதல் எனும் குணத்தை வளர்க்க முடியாது. அதுவே நமது சுய நிலை. ஆணவம் அகன்றால் எஞ்சி இருப்பது கீழ்படிதல் மட்டுமே.


-
ஸ்வாமி ஓம்கார்