Saturday, July 24, 2010

சுழற்சியில் மாட்டிய குருவும் சிஷ்யனும்



போன ஜென்மத்தை காட்டுகிறேன் வா என என் நெற்றிப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.

அந்த ஜென்மத்தின் நினைவுகள் தெரியத்து வங்கியது.

அதில் அடுத்த ஜென்மத்தை காட்டுகிறேன் வா என என் நெற்றிப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.

இவ்வாறு நாங்கள் பிறவிச் சுழற்சியில் மாட்டிக்கொண்டோம்..!

-----------------ஓம்-----------------

எந்த சிஷ்யனிடமும் குரு தான் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என கூறுவதில்லை.
அவ்வாறு கூறுபவர் அகந்தையின் சொரூபமாக தான் உயர்ந்தவன் என காட்டவே செய்கிறார்.

அவர் குரு நிலையில் இருக்க வாய்ப்பில்லை.

பல ஜென்மங்களை காட்டுகிறேன் என கூறுபவரை விட...

உனக்கு உன் இருப்பை மட்டுமே காட்டுகிறேன் என்ற விழிப்புணர்வை கொடுப்பவரை குருவாக இருக்க முடியும்.

கடவுள் ஒரு காட்டு எருமை..!

“குருஜீ நீங்க பிறக்கு போதே இந்த தாடி இருந்துச்சா?”

“தினமும் ஏன் குருஜீ மாலையை விரலால தேச்சு சேதமாக்கனும்?”

“எப்பவும் நாமதான் மூச்சு எடுக்கறோமே அப்பறம் ஏன் காலையில தனியா ஒரு மணிநேரம் மூச்சு எடுக்கனும்?”

மேற்கண்ட கேள்விகளின் நாயகன் மாதவனுக்கு பதினாறு வயது நேற்றுடன் முடிந்து. வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லை என்பார்கள். சிறு வயதிலிருந்தே மிகவும் குறும்புக்காரனாக வளர்ந்ததால் வீட்டில் இவனின் சேட்டைகளை அளவிட முடியாமல் பெற்றோர்கள் தவித்தார்கள்.

நல்வழிபடுத்தும் நோக்கில் பரமாணந்த ஆசிரமத்தில் கொண்டு விட்டு விட்டார்கள். ஆசிரமத்தில் அவனுக்கு தெரியாததே இல்லை என்பதை போல எந்த வேலையை கொடுத்தாலும் சலிக்காமல் செய்வான். சில நேரங்களில் சிறப்பாக செய்கிறேன் பேர்வழி என தனது புத்திச்சாலித்தனத்தால் குளறுபடிகளும் நடக்கும். அசிரமத்தில் பலர் இவனை கிண்டலும் கேலியும் செய்வதுண்டு.

இவனின் முட்டாள் தனமான கேள்விகளுக்கு சில நேரம் குரு பொருமையாக பதில் அளித்துக்கொண்டு இருப்பார். சில நேரங்களில் சிரித்துவிட்டு செல்வார். குரு மாதவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்குவது ஆசிரமவாசிகளுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்.

இவ்வளவு பொறுமையான குருவையே ஒரு நாள் கோபப்படுத்தினான் மாதவன். குரு தனது அன்றாட பூஜைக்காக மலர்களை நந்தவனத்தில் பறித்துக் கொண்டிருந்தார்.


உருவமற்ற பரம்பொருளை மானச பூஜை செய்வது குருவின் பூஜாமுறைகளில் ஒன்று. அவ்வாறு அவர் பூஜைக்காக தயாராகி வரும்பொழுது மாதவன் குருவின் அருகே வந்தமர்ந்து அவர் செய்வதை கவனித்துக் கொண்டிருந்தான்.

திடீரென பூ இருக்கும் தட்டிலிருந்து மகிழம் பூவை எடுத்து நாசிக்கு அருகில் வைத்து நுகர்ந்தான்.

இச்செய்கையை கண்ட குரு, “மாதவா கடவுளுக்கு வைத்திருக்கும் பூவை இப்படி செய்யலாமா? போ வெளியே” என கோபம் கொண்ட வார்த்தைகளால் கூறினார்.

தன் செய்த செய்கையை உணராத மாதவன் “குருவே கடவுள் எப்படி இருப்பார்?” என வேறு கேள்வியை கேட்டான்.

கோபத்தின் உச்சத்திற்கே சென்ற குரு “கடவுள் காட்டு எருமை போல இருப்பார். இப்பொழுது நீ வெளியே செல்” என கோபம் தனியாது கூறினார்.

குருவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை குழப்பத்துடன் பார்த்தவாறே வெளியே சென்றான் மாதவன்.

நாட்கள் மாதத்திலும் ... மாதங்கள் வருடத்திலும் கரைந்தது.

ஒரு நாள் அருகில் இருக்கும் புண்ணிய தலத்திற்கு பயணமானார் குரு. மாதவன் இல்லாமல் பயணமா? அவனும் குருவுடன் பயணித்தான்.

கோவிலின் வாயில் அருகே அதிக கூட்டம் இருப்பதை கண்டார்கள். திருவிழா நேரம் என்பதால் இறைவனின் திருவீதி உலாவிற்காக கூட்டம் குழுமி இருந்தது. கோவிலின் வாயிலில் இருவரும் நின்றார்கள்.

இறைவனின் பல்லாக்கை கோவிலுக்குள் இருந்து வெளியே எடுத்து வரும் நிலையில் கோவிலின் வாசலில் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பல்லாக்கை சரியாக வெளியே கொண்டு வர முடியவில்லை.

நெரிசலை கண்ட குரு, “ஓ இறைவனை நகர் வலம் கொண்டு செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறதே..” என புலம்பினார்.

இதைக்கேட்ட மாதவன், “குருஜீ... மிகப்பெரிய காட்டெருமையை இந்த சின்ன வாயிலில் கொண்டு வர முடியுமா? வாயிலை அகலப்படுத்த வேண்டும். முட்டாள்கள்” என்றான்.

--------------------------------ஓம்----------------------------------------

இறைவன் அருவமானவன்.
இறைவன் குருவின் வாக்கினால் உருவமாகிறார்.

குருவே இறைவனை நமக்கு காட்டும் கண்களாக இருக்கிறார்.
அதில் தெரியும் காட்சிகள் என்றும் தெய்வீகமானது.

குரு கூறும் எவ்வாக்கியமும் மஹாவாக்கியமாகிவிடும்.


Monday, June 21, 2010

ஆன்மீக குருவுடன் முதல் சந்திப்பு

ரிஷிகளின் கருப்பை என அழைக்கப்படும் ரிஷிகேசத்தின் கிழக்கு பகுதி. சூரியன் தன் கதிர்களை தளர்த்தி செம்பாகும் மாலை நேரம். அந்த மலைபகுதியை ஒட்டி இருக்கும் ஆசிரம குடில்கள் நிறைந்த ஏகாந்தமான சூழலுக்குள் நுழைந்தான் விஷ்வ தாஸ்.

நீண்ட காலமாக குருவை தேடி பல இடங்களுக்கு பயணப்பட்டவனுக்கு அந்த இடம் ஒரு ரம்மியமான அமைதியை கொடுத்தது. ஆசிரம குடில்களுக்கு மத்தியில் இருந்த ஆலமரத்தின் அடியில் சிறிது கூட்டம் தென்பட அதை நோக்கி சென்றான் விஷ்வதாஸ்.

கண்கள் மூடி அன்பர்கள் சுற்றி அமர்ந்திருக்க ஒரு தெய்வீகமான உருவத்தில் நடு நாயகமாக அமர்ந்திருந்தார் யோகி யஸ்வந். வெண் பஞ்சு போன்ற நீண்ட தலை முடியும் தாடியும் ஆழ்ந்த அமைதியை பறைசாற்றியது. அவரின் முன் சென்று அமைதியாக அமர்ந்தான் விஷ்வ தாஸ். எங்கும் பேரமைதி நிலவியது.

சில நிமிடங்கள் கரைந்தது. மெல்ல கண்களை திறந்தான் விஷ்வ தாஸ், யோகி அவனை உற்று நோக்கிய வண்ணம் இருந்தார். சைகையால் அவனை அருகில் அழைத்தார்.

முக மலர்ச்சியுடன் அவரின் அருகில் சென்று பணிந்து வணங்கினான் விஷ்வ தாஸ். மீண்டும் சைகையால் கண்களை மூடச்சொன்னார். கண்கள் மூடி ஆழ்ந்த ஆன்மீக எதிர்பார்ப்புடன் இருந்தான் விஷ்வ தாஸ்.

“பளார்...”

அசுரத்தனமான அடி ஒன்று கண்ணத்தில் இறங்கியது. எதிர்பாராத அடியால் நிலை குலைந்து போனான் விஷ்வ தாஸ்.

சுற்றி இருந்தவர்கள் அனைவரும் இவனை பார்த்து பலமாக சிரிக்க, அவமானமும் ஏமாற்றமும் இணைந்து கண்களில் நீர்துளியாக எட்டிபார்த்தது.

வேறு யோசனைகள் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு வெளியேரினான் விஷ்வதாஸ். ஆசிரமத்தை விட்டு வெளியேறி வெளியே இருக்கும் பாதையில் நடக்கலானான். அவமானம் ஆத்திரமாக மாறியது. பல பேர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய யோகியை பழிதீர்க்க எண்ணினான். வேறு ஆசிரமம் சென்று அங்கே இணைந்து இவருக்கு முன் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

கங்கை கரையை பாலத்தின் மூலம் கடந்து மறுகரையில் இருக்கும் மற்றொரு ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

சிஷ்யர்கள் ஒருவர் முன் அமர்ந்து கொண்டு பஜனை பாடிகொண்டிருந்தார்கள்.


அங்கே மழிக்கப்பட்ட தலையுடன் கருப்பு கம்பளியை மட்டும் உடலில் போர்த்திய கம்பளி யோகி அமர்ந்திருந்தார். யோகி யஸ்வந் உடன் கம்பளி யோகியை ஒப்பிட்டு பார்த்தான். உடை, தலை முடியின் அமைப்பு என பல்வேறு ஒப்பீடுகள் நடத்தினான். யோகி யஸ்வந்க்கு முற்றிலும் எதிரான நிலையை கப்பளி யோகியிடம் கண்டான். தான் சரியான இடம் வந்திருப்பதாக உணர்ந்து கொண்டான்.

விஸ்வ தாஸ் சிஷயர்களுடன் அமர்ந்து கண்களை மூடி தானும் பஜனை பாடியவாறே மெல்ல தலையை அசைத்துக் கொண்டிருந்தான்.

யாரோ அவனை உற்று நோக்குவது போல இருந்தது கண்களை திறந்து பார்த்தான். கம்பளி யோகி இவனை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். கம்பளி யோகி தன்னை ஏற்றுக் கொண்டதாக உணர்ந்தான். இவனுக்கு ஆனந்த அனுபவமாக இருந்தது.

சில வினாடிகளில் சைகையால் தன்னை நோக்கி அழைத்தார் கம்பளி யோகி. மெல்ல அவரிடம் சென்றான். சைகையால் கண்களை மூடு என்றார்.

கண்களை மூடியவனுக்கு மனதுக்குள் மின்னலாய் முன்பு நடந்த அனுபவம் நிழலாடியது. யோகி யஸ்வந் விட்ட அறை ஞாபகம் வர....சற்று பின்னோக்கி நகர்ந்து கண்களை திறந்தான்.

அங்கே நீண்ட திரிசூலத்தை தூக்கி இவனை நோக்கி பாய்ச்சும் தருவாயில் இருந்தார் கம்பளி யோகி. அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான். சடாரென சுதாரித்துக் கொண்டு திரும்பி ஓட துவங்கினான்.

கம்பளி யோகி அவனை விடாமல் துரத்த துவங்கினார்..

குருவை தேடிவந்தது குற்றமா? ஆன்மீக எண்ணத்தை தவிர தவறான எண்ணம் எதுவும் தனக்கு இல்லையே. அடிப்பதற்கும் கொல்லுவதற்கும் இவர்கள் துணியும் அளவுக்கு நாம் என்ன பாவம் செய்தும் என நினைத்து தன்னை நொந்து கொண்டான். விஸ்வ தாஸ் ஓடுவதை நிறுத்தவும் இல்லை. கம்பளி யோகியும் விடுவதாக இல்லை.

கங்கை கரையில் நீண்ட தூரம் ஓடியவனுக்கு கம்பளி யோகியின் மேல் எரிச்சல் உண்டானது. கம்பளி யோகி தன்னை கொலை செய்ய துரத்துவதை பார்க்கும் பொழுது யஸ்வந் யோகி தன்னை அடிக்க மட்டுமே செய்தார். அவர் எவ்வளவோ நல்லவர் என தோன்றியது.

பல எண்ணங்களுடன் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தவன் எதிலோ மோதி கீழே விழுந்தான். மெல்ல எழுந்து பார்த்தான்.

அங்கே யஸ்வந் யோகி நின்று இருந்தார். அவனை ஆதரவாக தூக்கி கையில் இருந்த இனிப்பை அவனுக்கு புகட்டினார். வாயில் இனிப்புடன் கலவரத்துடன் திரும்பி பார்த்தான் விஸ்வ தாஸ்.

அங்கே கம்பளி யோகி தென்படவில்லை.

-------------------ஓம்-----------------------

குருவை நீங்கள் தேடத்துவங்கினால் உங்கள் அறியாமையை தூண்டுபவரை சென்று அடைவீர்கள். உங்களுக்கு சுகமான உணவையும், சூழலையும் சுகானுபவத்தையும் கொடுப்பவர் குரு என நீங்கள் நினைப்பீர்கள். அப்படிபட்டவர்கள் உங்களை அறியாமை என்ற தூக்கத்தில் ஆழ்த்தி விடுவார்கள்.

ஆன்மாவை நேரடியாக தொடர்பு கொள்ள உங்கள் ஆணவத்துடன் போர் புரிபவரே உங்கள் குருவாக இருக்க முடியும். அவரை நீங்கள் சந்தித்ததும் உங்களிடம் இருந்து எதையோ முக்கியமானதை இழக்கப் போகிறேன் என்ற ஆழ்ந்த துக்கம் ஏற்படும். உங்கள் ஆணவம் தன்னை இழக்க தயாராகாமல் அவருடன் போராடி தோற்கும்.

எளிமையாக சொல்லுவதென்றால், உங்கள் உள் கட்டமைப்புகளை தகர்த்து யார் அதில் புதிய ஒளியை ஏற்றுகிறாரோ அவரே குருவாக இருக்க முடியும்.

உங்களை தூங்க செய்பவர் குரு அல்ல.. விழிக்கச் செய்பவரே குரு...!

Saturday, April 10, 2010

குரு - அடி - திருவடி..!

குருவே சரணம், அனைவருக்கும் வணக்கம்.
நான் நந்து என்கிற முக்தானந்த கிரி பேசுகிறேன்.

எனக்கு சிறு வயதிலிருந்தே ஆன்மீக தாகம் அதிகம். ஆன்மீக வாழ்க்கையில் வாழ்ந்து இறைவனைக்கான வேண்டும் என்பது ஆழ்ந்த விருப்பமாக இருந்தது.ஆர்வம் அதிகரித்ததால் சுவாமி வேதானந்த கிரியின் ஆஸ்ரமத்தில் வந்து சேர்ந்தேன். கடந்த சில நாட்களாக சுவாமியின் அருட்பார்வையில் வாழும் பாக்கியம் கிடைத்தது.

சுவாமி வேதானந்தகிரி ஒரு மெளனகுரு. எந்த போதனையோ கருத்துக்களோ சொல்லமாட்டார். இடையில் கோமணத்தை கட்டிக்கொண்டு கையில் ஒரு சிறிய கம்பு ஒன்றும் வைத்திருப்பார். அவரை பார்த்தால் அதிகபட்சம் ஒரு மாடு மேய்க்கும் முதியவரை போன்று காட்சி அளிப்பார். மக்கள் அவரை வேதானந்த கிரி என அழைத்தார்கள். ஆனால் அவர் தன் பெயரை வெளியே சொன்னது இல்லை.

யாரிடமும் பேசாமல் அமைதியாக மரத்தடியில் இருந்தவரின் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு பலர் அவருடன் இணைந்து இருக்க துவங்கினார்கள். மெல்ல அந்த சூழல் ஓர் ஆன்மீக ஆசிரமமாக மலர்ந்தது.

தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் சிறிய குடில்கள் மற்றும் வீடுகளுடன் வேதானந்தகிரி ஆஸ்ரமம் செயல்பட்டுவந்தது. ஒரு பக்கம் சமையல் அறை மற்றும் குடியிருப்புக்கள், மறுபுறம் குருநாதர் இருக்கும் இடம், நந்தவனம் ஆகியவை இருந்தது.

எனக்கு நந்தவனத்தை சீரமைக்கும் பணி. தினமும் காலை எழுந்து நீராடிவிட்டு, குருவின் முன் வந்து விழுந்து வணங்குவேன். அவரோ ஏதோ ஒரு நிலையில் இருப்பார். அவர் முன் யார் இருக்கிறார்கள் என பார்க்கும் நிலையில் இருக்க மாட்டார். பிறகு நான் நந்தவனத்திற்கு சென்று அன்றைய பணியை துவக்குவேன்.

அன்று அப்படித்தான் பணியை துவக்கி மதியம் நெருங்கும் வேளையில் ஒரு முனகல் சப்தம் கேட்டது. அரளிச்செடியின் அருகே அழகான ஒரு நாய்க்குட்டி. பிறந்து சில மாதங்கள் ஆனதன் சுவடுகளுடன் மிகவும் மென்மையாக வலம் வந்து கொண்டிருந்தது.

அதன் துள்ளலும், ஓட்டமும் எனக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தின. அதற்கு சில உணவுகளை கொடுத்தவுடன் என்னுடன் மிகவும் நெருங்கியது அந்த நாய்க்குட்டி.



ஒரு நாள் மதிய உணவுக்காக நெடுஞ்சாலையை தாண்டி இருக்கும் ஆஸ்ரமத்தின் சமையலறைக்கு சென்றுவிட்டு வரும்பொழுது தான் கண்டேன். சமையலறை வாசலில் நாய்க்குட்டி. உணவை தேடி வந்திருந்தது.

அதற்கு உணவளித்துவிட்டு நான் மறுபுறம் சாலையை கடக்க எத்தனிக்கும் பொழுது நாயும் என்னுடன் வரத்துவங்கியது. நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகமாக இருந்ததால் நாய்க்குட்டியை கையில் எடுத்துக்கொண்டு சாலையை கடந்து நந்தவனம் நோக்கி சென்றேன்.

“தட்” எதிர்பாராத விதமாக அந்த அடி என் முதுகில் விழுந்தது.

மரண வலி.

திரும்பிப்பார்த்தேன். வேதானந்தகிரி நின்று கொண்டிருந்தார்.

தனது கையில் இருக்கும் கம்பு கொண்டு என்னை அடித்திருக்கிறார்.

புரியாமல் பார்த்தேன். வழக்கம் போல எங்கோ பார்த்தவாரே நடந்து சென்றுவிட்டார்.

அடியைவிட அதற்கு காரணம் தெரியாமல் இருந்தது அதிகமாக வலித்தது. சில நாட்கள் கடந்தது அவரின் பார்வையை தவிர்த்து வந்தேன். இங்கே வந்திருக்கக் கூடாது என்றுகூட நினைத்தேன்.

------------------------------------------------------

மற்றொரு நாள் மதிய உணவுக்காக நாய்குட்டியை கைகளில் ஏந்திய வண்ணம் எதிர்பக்கம் இருந்த சமையலறையை நோக்கி நெடுஞ்சாலையை கடக்க துவங்கினேன்.

“தட்” மீண்டும் அந்த மரண அடி.

இந்த முறை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
கண்கள் கலங்கியது.

எந்த சலனமும் இல்லாமல் நடந்து சென்றுகொண்டிருந்தார் வேதானந்த கிரி.
மனநிலை பாதிக்கப்பட்டவரிடம் சிக்கிக்கொண்டோம் என நினைத்தேன்.
அன்று சாப்பிடும் எண்ணமே இல்லாமல் நந்தவனத்திலேயே இருந்தேன்.

------------------------------------------

சில நாட்கள் கடந்தது...

ஒரு நாள் என் அறையில் இருந்து நந்தவனம் நோக்கி சென்றுகொண்டிருந்தேன்.

சாலையைக் கடக்கும் பொழுது அந்த கோரக்காட்சியை கண்டேன்.

வாகனத்தில் அடிபட்டு அந்த நாய் இறந்துகிடந்தது. அதன் தலைப்பகுதி கூழாகி ஈக்கள் அதன் மெல் மொய்க்க அந்த காட்சி என்னை மிகவும் கலக்கம் அடையச்செய்தது.


அடுத்த நொடி அந்த சப்தத்தை கேட்டேன்...

“தட்”

“தட்”

அந்த அடியின் சப்தம்..
ஆனால் என்மேல் அடிவிழவில்லை.

நாயின் நசுக்கப்பட்ட உடலின் அருகே நின்ற வேதானந்த கிரி தன் உடலில் கம்பு கொண்டு தானே அடித்துக்கொண்டிருந்தார். அவரின் கண்கள் நாயின் உடல் மேல் இருந்தது.

அன்று நந்துவாக இருந்த நான் முக்தானந்த கிரியாக என்னுள் மாற்றமடைந்தேன்.

--------------------------ஓம்----------------------------

குரு தன் சிஷ்யனுக்கு போதிப்பது இல்லை. அவனின் வாழ்வியலில் ஒரு சிறிய நெருப்பு பொறியை தூண்டுகிறார். அது ஆன்மீகமாக கொழுந்துவிட்டு எரிகிறது.

எப்பொழுதும் கருத்துக்களையும், விளக்கங்களையும் கொடுத்துக் கொண்டிருப்பவரை நாம் குருவாக நினைத்து பின் தொடர்ந்தால் , நம் கதி நந்துவின் நாயின் கதியை போன்றாகிவிடும்.அதாவது போதனையை மட்டும் குருவாகக் கொண்டால் நெடுஞ்சாலை என்ற வாழ்க்கையை கடக்கும் நாய் போல விபத்துக்கள் நேரும்.

குரு நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தி நம்மை சுயமாக ஆன்ம முன்னேற்றும் பெறச்செய்வார். அத்தகைய குரு இல்லாத தருணத்தில் கூட நம்மால் சமநிலை தவறாமல் இருக்க முடியும்.

Wednesday, December 2, 2009

மந்திர ஜபம்

காசி மாநகரம் தனது இயக்கத்தை நிறுத்த துவங்கிய அந்தி சாயும் நேரம்...

கங்கை நதியின் ஓட்டத்தை பார்த்தவாறு தனது ஆசனத்தை விரித்து அமர்ந்தான் அச்சுதன்.


கேதார் காட் என்று அழைக்கப்படும் கேதாரிநாத் சிவனின் கோவில் இருக்கும் படித்துறை அது. காவியும் வெள்ளை நிறமும் மாறி மாறி வண்ணம் பூசபட்ட படிகள் ஒரு வயதானவரின் வெற்றிலை வாயை ஞாபகப்படுத்தியது.

தனது மேலாடையை ஒழுங்கு படுத்தியவாறே சுற்றிலும் நோட்டம் விட்டான். கண்களுக்கு தெரிந்தவரை யாரும் இல்லை. ஒரு ஏகாந்தமான மாலை நேரத்தை எதிர்பாராமல் கிடைத்த மகிழ்ச்சியுடன் ஜபம் செய்ய ஆயுத்தமானான் அச்சுதன்.

தனது மேல் அங்கியின் உள்புறம் ஜப மாலையை வைத்து கண்களை மூடி ஜபம் செய்யத் துவங்கினான். கங்கையின் ஓட்டத்தால் ஏற்பட்ட சலசலப்பை தவிர வேறு எதுவும் அவனுக்கு கேட்கவில்லை.

சில மணித்துளிகள் கடந்தது....

“யே...மேரா மாலிக்........தூ.யீ மேரா சேவக்கு...” என கர்ண கொடூரமான குரல்வளத்தில்

ஒருவர் கத்துவதை கண்டு கண்விழித்தான் அச்சுதன்.

தன்னைவிட முற்றிலும் எதிர்தன்மையில் ஒருவர் அங்கே படியில் அமர்ந்து பெருங்குரலில் கத்திக்கொண்டிருந்தார்.

குளித்த தேகம், உடலில் ஆங்காங்கே வீபூதி பட்டை, தூய வெண்மையான ஆடை, உட்கார ஆசனம், ஜபமாலை என்ற நிலையில் அச்சுதன்.

தண்ணீரே பார்க்காத தேகம், உடல் முழுவதும் அழுக்கு, சில மணி மாலைகள் கழுத்தில், தலை முழுவதும் சடையுடன் எங்கோ பார்த்து பெருங்குரலில் கத்தும் அந்த நபர். அச்சுதனுக்கு ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. அவரை கோபமாக முறைத்தான்.

அவரோ இவனை மதிப்பதாக தெரியவில்லை. எதேதோ உளரிக்கொண்டே கைகளை மேலும் கீழும் அசைத்து காற்றில் ஏதோ வரைத்து கொண்டிருந்தார்.

இத்தனை வருடங்களாக தினமும் இங்கே மந்திரம் ஜபம் செய்கிறோம் ஒருவரும் இப்படி இம்சை செய்தது இல்லை. அவரை தவிர்த்துவிட்டு கண்களை மூடினால் அவரின் குரல் அதிக சப்தத்துடன் ஏற்றம் அடைவதை உணர்ந்தான்.

பைத்தியக்காரன் என்று பேசாமல் ஜபம் செய்யலாம் என்றால்,
வேண்டும் என்றே அவன்
குரல் எழுப்புவதை போல அச்சுதனன் உணர்ந்தான்.

தனது ஜபமாலைகளை கீழே வைத்துவிட்டு அவரின் அருகே சென்றான்.

“ஐயா... தயவு செய்து அமைதியாக இருக்கிறீர்களா... என்னால் ஜபம் செய்ய முடியவில்லை.”

அதுவரை எங்கோ பார்த்து உளரிக் கொண்டிருந்தவர் அச்சுதனை நோக்கி தலையை சாய்வாக திருப்பி “ ஜபமா.....அப்படினா?”

“மந்திரத்தை தொடர்ந்து கூறுவது”

“மந்திரமா? அப்படினா?”

அச்சுதனுக்கு அவர் விளையாடுவதாகவே பட்டது இருந்தாலும் ஆத்திரத்தை அடக்கியவாறு பதில் கூறினான்.

“இறைவனின் சக்தி கொண்ட வார்த்தை மந்திரம்”

“ஓஹோ...” என்றவாறே எழுந்து திரும்பி படித்துறையின் படிக்கட்டுகளில் ஏறத்துவங்கினார் அவர்...

அவர் நடந்து செல்லுவதை நிம்மதிப்பெருமூச்சுடன் பார்த்தவாறு நின்றேன் அச்சுதன்.

இரண்டு படிகள் ஏறியவுடன் திரும்பி....

“மந்திரத்தில் மட்டும்தான் இறைவனின் சக்தி உண்டா? நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இறைவனின் சக்தியால்தானே? உன் சக்தி இதில் எதுவும் இல்லையே?” என்றார் அவர்.

கங்கை ஒரு ஷணம் நின்று பின் சலசலப்புடன் ஓடுவதாக பட்டது அச்சுதனுக்கு.

-------------------------------ஓம்--------------------------------------------

மந்திர ஜபம் என்பது இறைவனுக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்லும் ஒரு வாகனம். ஆனால் நான் மந்திர ஜபம் செய்கிறேன் பிறர் செய்வதில்லை என்ற எண்ணமும், மந்திரம் மட்டுமே சக்தி வாய்ந்தது என்ற எண்ணமும் ஆணவத்தை தூண்டிவிடும். அப்புறம் எங்கே இறைவனை தரிசிப்பது?

முதலில் நாம் உச்சரிக்கும் அனைத்து வார்த்தையிலும் சக்தியை உணர்ந்தால்தான் மந்திரத்தை உணர முடியும். நம் ஒவ்வொரு வார்த்தையில் சக்தியை உணர நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

விழிப்புணர்வற்ற நிலையில் மந்திரமும் வெறும் வார்த்தைதான். விழிப்புற்றவனுக்கு ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம் தான்.

Sunday, November 22, 2009

எலுமிச்சை புல்

திருவண்ணாமலை மலைப்பாதையின் மேல் குருவும் சிஷ்யனும் நடந்து கொண்டிருந்தார்கள். அங்கே இருக்கும் விருப்பாச்சி குகையில் தியானம் செய்ய இருவரும் நடக்க துவங்கி அரை மணி நேரம் கடந்துவிட்டது.

குரு மெளனமாக பின்னால் வர சிஷ்யன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குருவின் காட்சியில் மறைந்து வெகு தொலைவுக்கு சென்றுவிட்டான்.

குரு மெல்ல நடந்து கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் கரைந்தன... தூரத்தில் சோர்வுடன் சிஷ்யன் அமர்ந்திருந்தான்.குரு கையில் ஒர் பச்சிலையுடன் நடந்து வந்தார். சிஷ்யனிடம் கொடுத்து முகர்ந்து பார்க்க சொன்னார்.

அவர் அந்த பச்சிலையை முகர்ந்ததும் அதில் எலுமிச்சை மணம் அடித்தது. சிஷ்யனின் மனதுக்கும் உடலுக்கும் ஒரு உற்சாகம் கிடைத்தது.

“குருவே இது என்ன இலை?”

“இதன் பெயர் எலும்மிச்சை புல். சாதாரண புல் போல தெரிந்தாலும் எலுமிச்சை மணம் கொண்டது.”

“குருவே உங்களிடம் ஒரு கேள்வி. தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.”

புன்னகைத்தவாறே...“ம்..” என்றார் குரு.

”ஒருவனுக்கு ஆன்மீக உயர்வு அடைய குரு அவசியம் தானா?”

”விழிப்புணர்வு ஒருவனுக்கு கிடைக்கும் வரை அவனுக்கு குரு அவசியம்”

“விழிப்புணர்வு என்றால்...?”

“நான் கொடுத்த எலுமிச்சை புல் முகர்ந்தாய் அல்லவா? அதற்கு முன் இங்கே இருக்கும் எலுமிச்சை புல் பற்றி உனக்கு தெரியுமா?”

“தெரியாது”

“நான் வரும் வரை இங்கே அமர்ந்திருதாயே.. பார் உன் கால்களுக்கு அருகிலேயெ அந்த புல் புதர் போல வளர்ந்திருக்கிறது. உன் கால்களுக்கு கீழே அந்த பொருள் இருப்பது தெரியாமல், இன்னொருவர் உனக்கு தரும் வரை நீ அமர்ந்திருக்கிறாய். விழிப்புணர்வு கொண்டவனாக இருந்தால் உனக்கே தெரிந்திருக்கும்.”

“அப்படியானால் விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை அல்லவா?”

“விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை. விழிப்புணர்வு வந்த பின் குரு எல்லா இடத்திலும் இருப்பதை நீ உணர்வாய்”

”அப்படியானால் அனைவருக்கும் குரு தேவையா?”

“ஆம். அதனால் தான் ஆண்டாண்டு காலமாக இம்மலையில் எலும்மிச்சை புல் வளருகிறது. உன்னையும் என்னையும் போல பலர் இங்கே வந்து இதே கேள்வியையும் பதிலையும் விவரிக்கிறார்கள்.”

---------------------------ஓம்-------------------------------
குரு சிஷ்ய உறவு என்பது மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது. எத்தனையோ குரு சிஷ்யர்கள் தங்களின் இறப்புக்கு பிறகும் அடுத்த பிறவியிலும் உறவை தொடர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

அதனால் தான் குரு சிஷ்யனுக்கு உபதேசம் செய்வதை அனேகமாக ஆலமரத்தின் அடியில் அமர்ந்து விவரிப்பதாக விளக்குகிறார்கள். ஆலமரம் போல விழுதுகளுடன் கிளைப்பது குரு சிஷ்ய பாரம்பரியம்.

இக்கதையில் எலுமிச்சை புல் என்பது ஞானத்தின் வடிவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எலுமிச்சை புல் என்பதற்கு பதில் பிரம்ம ஞானம் என மாற்றி படித்துப்பார்த்தால் கதையின் முழுமை புரியும்.

சீனத்தில் அதிகமாக விளையும் பொருளான இது ஜென் முறையின் வடிவமாக கருதப்படுகிறது. ஓஷோ தனது தாவோ பற்றிய உரையில் கூறும் பிரசித்திபெற்ற வரிகள் “புல் தானே வளர்கிறது”.

Tuesday, November 17, 2009

ஸ்டார்டிங் ட்ரபிள்

“டிங்...டிங்...டிங்” காலை ஆசிரம மணியின் ஓசை கேட்டது.

நான்கு மணி ஆகிவிட்டது என்ற எண்ணத்துடன் எழுந்தான் விஷ்ணு. விஷ்ணு ஆசிரமத்தின் அனைத்து வேலைகளையும் பார்ப்பவர்களில் ஒருவன்.

காலை ஐந்து மணிக்கு யோக பயிற்சி முடித்ததும், ப்ரார்த்தனை மற்றும் காலை உணவுடன் துவங்கும் அவனது பணி இரவு ஒன்பது வரை நீடிக்கும்.

புத்தகங்கள் பார்சல் அனுப்புவது, தோட்டத்தை சுத்தம் செய்வது மற்றும் குரு வெளியே செல்லுவதற்கு வாகன ஓட்டியாக மாறுவது என ஒரு நாளில் பல அவதாரம் எடுப்பவன் விஷ்ணு.

அன்று காலை வழக்கம் போல யோக பயிற்சிக்காக ஆசிரம யோக சாலைக்கு சென்று பயிற்சி செய்ய துவங்கினான்.

இன்று என்னமோ அவனுக்கு யோக பயிற்சியை சரிவர செய்ய முடியவில்லை.முன்னால் அமர்ந்திருந்த குருவின் மேல் அவனுக்கு கவனம் முழுவதும் சென்றது. விஷ்ணு ஆசிரமத்திற்கு வந்த நாள் முதல் பார்த்திருக்கிறான் குரு யோக பயிற்சியை கற்றுக்கொடுக்கிறாரே தவிர அவர் செய்வதில்லை.

இவனும் சக ஆசிரம வாசிகளும் ப்ராணயாமமும், ஆசனமும் செய்யும் பொழுது அவர் கண்களை மூடி அமர்ந்திருப்பார். அல்லது ஜன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார்.

பிறருக்கு பயிற்சி அளிக்கும் நேரத்தில் குரு செய்து இருப்பதை பார்த்திருக்கிறேன். எங்களை தினமும் செய்ய கூறும் குரு தான் செய்வதில்லையே என்ற எண்ணம் அதிகமாக வந்தது. தவறு என்றாலும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. அவனது யோக பயிற்சியில் கூட அந்த தடுமாற்றம் தெரிந்தது.

ஆனாலும் யாருக்கும் தெரியாத வண்ணம் சரிசெய்து யோக பயிற்சி முடித்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினேன்.

“விஷ்ணு...”.. குருவின் குரல் கேட்டது.

அவரை நோக்கி புன்னகையுடன் கைக்கூப்பி நின்றேன்.

“ கொஞ்சம் வெளியே போகனும், ஜீப் ரெடி பண்ணுப்பா” என்றார் குரு.

என்றும் இல்லாத அதிசயமாக இன்று காலையிலேயே வெளியே செல்ல அழைக்கிறாரே என்ற தயக்கத்துடன் ஜீப்பை தயார் செய்தேன். குருஜி ஏறியதும் ஜீப்பை ஸ்டார்ட் செய்து ஆசிரமத்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். ஆசிரமம் இருப்பது மலைபகுதி என்பதால் ஜீப் பயணிக்கும் பொழுது குளிர்ந்த காற்று ரம்மியமாக இருந்தது.

சில தூரம் பயணித்ததும் குருஜி என்னை பார்த்து திரும்பினார்..

பிறகு கேட்டார்.. “ சாவி போட்டுட்டியா விஷ்ணு?” என்றார்.

வண்டி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இது என்ன இப்படி கேட்கிறார் என்ற குழப்பம் வந்தாலும் வேறு வழியில்லாமல் “போட்டாச்சு குருஜீ” என்றேன்.

ஜீப்பினுள் மெளனம் நிலவியது.

வண்டி சில கிலோ மீட்டர் சென்றது
மீண்டும் குருஜீ என்னை பார்த்து திரும்பினார்.

பின்பு கேட்டார்.. “ஜீப்புக்கு சாவி போட்டுட்டியா விஷ்ணு?”

இது என்ன முட்டாள் தனமான கேள்வி என தோன்றினாலும் வேறுவழியில்லாமல்.. “போட்டாச்சு குருஜீ” என்றேன்.

மேலும் சில கிலோமீட்டர் சென்றது. மீண்டும் குருஜீ என்னை பார்த்து...

“விஷ்ணு சாவி... ” என துவங்கும் முன் இடைமறித்தேன். “குருஜீ சாவி போடாமல் எப்படி வண்டி ஸ்டார்ட் ஆகும்? நாம் இவ்வளவு கிலோமீட்டர் வர முடியுமா? ” என்றேன்.

வேறு எங்கோ பார்வையை நிலைபடுத்திய படியே குருஜீ கூறினார்.

“ உள் இருக்கும் தெய்வீகத்தை தூண்டுவதற்காகத்தான் எல்லோரும் யோகப்பயிற்சி செய்கிறார்கள். இது வண்டிக்கு சாவி போடுவது போல. தூண்டிவிடப்பட்டதும் தெய்வீகம் ஆற்றலுடன் செயல் படத்துவங்கும். அப்பொழுது மீண்டும் மீண்டும் தூண்டிவிட தேவையில்லை. வண்டி ஓடும் பொழுது நீ மீண்டும் மீண்டும் சாவி போட்டு துவக்கவில்லை இல்லையா?”

“. க்ரிர்....ச்...” ஜீப்பை பிரேக் போட்டு நிறுத்தினேன்.

---------------------ஓம்-----------------------

நம்மை குருவின் நிலையுடன் எப்பொழுதும் ஒப்பிட்டுக்கொள்ளக்கூடாது.

நாம் குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக இருந்தாலும் குருவின் செயலை நாம் செய்ய வேண்டும் என்பதில்லை.

குரு நமக்கு எதை செய்ய சொல்கிறாரோ அதை செய்வதே பெரும் ஆன்மீக செயலாக கருதவேண்டும்.

குருவுக்கு தெரியும் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் அவருடன் நம்மை ஒப்பு நோக்க தோன்றாது.

கூட்டுப்புழு தன்னை பட்டாம்பூச்சி ஆக்க முயல வேண்டும். பட்டாம்பூச்சி எதுவும் ஆக முயல வேண்டாம். கூட்டுப்புழு எதுவும் செய்ய வில்லை என்றால் என்றும் பட்டாம்பூச்சி ஆக முடியாது.

நீங்கள் நீங்களாக இருக்க முயன்றால் நீங்களும் குருவாக மாற முடியும்.
மாறாக நீங்கள் குருவாக முயன்றால் நீங்கள் நீங்களாக கூட மாற முடியாது.