Friday, April 26, 2013

மீன் முள்


 இரண்டு பக்கமும் பசுமையான மரங்கள் இருக்க தென்னை மரங்கள் தலை குனிந்து முகம் பார்க்கும் கேரளாவின் நீர் நிறைந்த ஆற்றங்கரை அது. 

ஆற்றின் ஒரு பக்கம் மக்கள் அதிகம் வரும் புகழ் பெற்ற கோவிலும் ஆற்றின் மறு கறையில் அமைதியே உருவான ஆசிரமமும் இருந்தது.

தினமும் ஸ்வாமி விஷ்ணுதேவானந்தர் ஆற்றை கடந்து மறுகரையில் இருக்கும் கோவிலுக்கு செல்லுவார். பிறகு மீண்டும் ஆசிரமத்திற்கு திரும்புவார். இது அவரின் தினசரி கடமைகளில் ஒன்றாக இருந்தது. இக்கடமையை மிகவும் சிறப்பாக அவருக்கு உதவும் பக்தி உள்ளம் ஒன்று இருந்தது. பக்தனின் பெயர் படகோட்டி சங்கரன்.

சங்கு மாஸ்டரே என்றும் பலராலும் அழைக்கப்படும் சங்கரனுக்கு சிறுவயது முதலே படகு செலுத்துவது தான் தொழில். ஆவணி மாதம் நடக்கும் படகு போட்டி தவிர வேறு காலத்தில் அதிகமாக சம்பாதியம் செய்ய முடியாது. சங்குவை போலவே மெலிந்த கரிய நிற படகு அவனின் சொத்து. நீண்ட கழியை கறையில் ஊன்றி தள்ளி படகை செலுத்துவான். லாவகமாக படகின் முனையிலிருந்து நடந்து கழியை ஆற்றுக்குள் செலுத்தி படகை ஓட்டும் சங்கரனை ஆற்றின் கரையில் இருப்பவர்கள் அவ்வளவு எளிதில் பார்க்காமல் போக முடியாது.

தினமும் காலை ஆறு மணிக்கு படகில் காத்திருப்பான் சங்கரன். ஸ்வாமிஜி தனது ஆசிரமத்திலிருந்து வருவதை பார்த்ததும், எழுந்து படகை கறைக்கு சமீபமாக வைத்துக்கொள்வான். 

ஸ்வாமிஜி படகின் அருகே வந்ததும், அவரின் மென்மையான பாதங்களை தன் படகில் வைக்க கை கொடுத்து உதவுவான். வெள்ளம் அதிகம் இருக்கும் காலங்களில் ஸ்வாமிஜியின் கால்களை அவனின் தொடையில் வைத்து ஏறி படகில் அமற துணைபுரிவான் சங்கரன்.

நேற்று வழக்கமாக வரும் ஸ்வாமி வரவில்லை. ஆசிரமத்தில் ஏதோ விழா என பேசிக்கொண்டார்கள்.  ஆசிரமத்திற்கு வந்த பக்தர்களை மறுகரைக்கு கொண்டு செல்லும்  வேலையில் மூழ்கிப்போனான் சங்கரன்.

மறுநாள் ஸ்வாமிஜி வருவாரா என காத்திருந்தான் அன்று ஆற்றில் வெள்ளம் மிகவும் அதிகமாக இருந்தது. ஸ்வாமிஜி ஆசிரமத்திலிருந்து வெளிப்பட்டார். படகை நோக்கி நடந்தார். ஆற்றின் ஓரத்தில் படகை கொண்டு வந்து ஸ்வாமியின் தாமரை போன்ற பாதத்தை தன் தொடையில் வைத்து ஏறி அமற உதவினான் சங்கரன்.

பிறகு தாவி ஏறி கழியை எடுத்து படகின் ஓரத்தில் நின்வாறு படகை செலுத்தி மறுகரையை நோக்கி புறப்பட்டான்.

படகு ஆற்றின் மையத்தில் வரும் பொழுது ஸ்வாமிஜியை பார்த்து சங்கரன் சொன்னான், “ஸ்வாமி நேத்து நிறைய பக்தர்கள் வந்திருந்தாங்கனு நினைக்கிறேன். எனக்கும் அவங்களை போல ஜபம் தியானம் செய்ய ஆசைதான்.” என நிறுத்தினான்.

கோவிலை நோக்கி பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணுதேவானந்தர் சங்கரனை நோக்கி திரும்பினார். மெல்ல இதழ் பிரித்து கூறினார், “சங்கரா நீயும் வரலாமே, உனக்காக எப்பொழுதும் தனி இடம் உண்டு.”

“வரலாம் சாமி, ஆன என் பொண்டாட்டி விடமாடாள். இல்லைனா நானும் இவங்கள போல ஆசிரமத்திற்கு வருவேன்..”

“ஏன் அவங்க விடமாட்டாங்க?”

“சாமி புதுசா கேக்கிறீங்களே? ஜபம் தியானம்னு செஞ்சு நான் புள்ள குட்டிய விட்டுட்டு ஆசிரமத்திலேயே வந்துட்டேன்னா? அவளும் படிக்காதவ என்ன செய்வா? அந்த பயந்தான் சாமி”

ஸ்வாமி மீண்டும் தலையை கோவிலை நோக்கி திருப்பிக்கொண்டார். கரை அடைந்து மீண்டும் ஆசிரமம் செல்லும் வரை எதுவும் பேசவில்லை.

மறுநாள்...பொழுது புலர்ந்தது.. உடலை சிரசாசனத்தில் வைப்பதை போல பெரிய முள்ளும் சின்ன முள்ளும் கடிகாரத்தில்  ஆறு மணியை காட்டியது.

சங்கரன் ஆற்றின் கரையில் ஸ்வாமிக்காக காத்திருந்தான். ஸ்வாமி அருகில் வந்ததும் வலது காலை மடக்கி அவரின் கால்களை வைக்க ஏதுவாக படகின் அருகே நின்றான். 

ஆனால் வழக்கத்திற்கு சங்கரனை தவிர்த்துவிட்டு மாறாக ஸ்வாமிஜி படகில் அவராகவே ஏறி அமர்ந்தார். ஸ்வாமியின் இந்த நடவடிக்கையால் மிகவும் சங்கடமடைந்தான் சங்கரன். 

இதைவிட அவனுக்கு ஆச்சரியமாகவும் இயல்புக்கு மாறாகவும் கண்டது ஸ்வாமி  கால்களில் அணிந்திருந்த செருப்பு...!

இத்தனை வருடங்களில் அவர் செருப்பு அணிந்து பார்த்ததே இல்லை. தினமும் அவர் கோவிலுக்கு செருப்பு இல்லாமல் இவனின் தொடையை படியாக கொண்டு ஏறி இறங்கி வருவதால் அவர் செருப்பு அணிந்து பார்த்ததே இல்லை. இவ்வளவும் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால் கலங்கினான் சங்கரன். மெளனமாக படகை செலுத்துபவன் வழக்கத்திற்கு மாறாக நேற்று பேசியதால் வந்த வினையோ என குற்ற உணர்ச்சி பெருகியது.

 கண்ணீர் மல்க, “ஸ்வாமிஜி நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னிச்சிருங்கோ, நீங்க இன்னைக்கு ஏதோ போல இருக்கிறது எனக்கு ஏதோ மாதிரி இருக்கு” என தன் உணர்ச்சிகளை வார்த்தையாக முடியாமல் விவரித்தான்.

“சங்கரா ஏன் ஏதோ போல இருக்கு? எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே?” என தெரிந்து கொண்டே சொன்னார் ஸ்வாமிஜி.

“ஸ்வாமிஜி எப்பவும் செருப்பு போட்டுக்கிட்டு படகில வரமாட்டீங்க. இன்னைக்கு செருப்பு போட்டுக்கிட்டு முதன்முதலா வந்திருக்கிறது எனக்கு வித்தியாசமா இருந்துச்சு, எம்மேல தப்பா இருந்தா ஸ்வாமிஜி மன்னிக்கனும்.” என்றான் சங்கடமான சங்கரன்.

“ஓ அதுவா சங்கரா, எப்பவும் நான் செருப்பில்லாமல் தான் போவேன். ஆனா ஆத்து தண்ணீல மீன் இருக்குல்ல. மீன் முள்ளு காலில் குத்திடுச்சுனா வலிக்கும் இல்லையா? அதனாலதான் செருப்பு போட்டிருக்கேன். நீ ஒண்ணும் மனசுல வச்சுகாத”இந்த பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காத சங்கரன் குழம்பிப்போனான். 

அவரை திரும்பி திரும்பி பார்த்தவாரே கழியை ஆற்றில் குத்தி படகை செலுத்தினான். உதட்டில் சிறு புன்னகையுடன் ஸ்வாமி இவனையே பார்ப்பது போல இருந்தது.

சில நிமிட மெளனத்திற்கு பிறகு...

“சங்கரா.... நான் மீன் முள் குத்தும் என செருப்பு போட்டுக்கிட்டது உனக்கு முட்டாள்த்தனமா தெரியுதில்லையா? அதேபோலதான் ஜபம் தியானம் செஞ்சா உடனே குடும்பத்தை விட்டு சன்யாசம் போயிடுவாங்கனு நினைக்கிறதும்...!

இந்த மீன் முள் குத்தனும்னா முதல்ல மீனை வலைவீசி பிடிக்கனும், அப்புறமா அதை தூய்மையாக்கி, அடுப்பில் வைத்து சமைக்கனும். அப்புறம் சுவைச்சு பார்க்கனும். இதெல்லாம் செஞ்சா கூடா காலில் மீன் முள் குத்த வாய்ப்பில்லை. இல்லையா? அது போலத்தான்...ஆன்மீகத்தில் ஈடுபடும் எல்லாரும் சன்யாசி ஆயிடனும் இல்லை. 

நீ உன் குடுபத்தில் இருந்துக்கிட்டே உன் உன்மை நிலையையான ஆன்மாவை உணரலாம். அதுக்குதான் இந்த ஜபம், தியானம் எல்லாம். பக்குவம் அடைய பல படிகள் இருக்கு, எடுத்தவுடன் மீன் முள் குத்தாது. அதை வலைவீசி பிடிக்கனும்...அதுபோல உன் அலைபாயும் மனசை வசப்படுத்த இந்த ஜபம் தியானம் செய்யனும். குரு வந்து அதை தூய்மையாக்கி சமைப்பார், அப்புறம் தான் மிச்சமெல்லாம்...” என கூறிவிட்டு செருப்பை ஆற்றங்கரையில் விட்டுவிட்டு சென்றார் ஸ்வாமிஜி. 

அன்று முதல் அந்த செருப்பு சங்கரனுக்கு குருபாதுகையானது.

-------------ஓம்------------------

துறவு மட்டுமே ஆன்மீகம் அல்ல. குருவானவர் உங்கள் பொறுப்புகளை விட்டுவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபடு என எப்பொழுதும் கூறமாட்டார். உங்கள் பொறுப்புகளை சிறப்பாக செய்ய வழிகாட்டுவார். சரியான வழிகாட்டியானவர் உங்களின் பிறப்பின் தன்மையை ஊடுருவி உங்களின் வாழ்க்கை அமைப்பிலேயே ஆன்மீகத்தை உணர்த்துவார்.

உங்கள் கர்மாவை எந்தவிதத்திலும் மாற்றாமல் அவ்வழியே உங்களை முக்திக்கு செலுத்துவது தான் குருவின் பணி. உங்கள் கர்மா அதிகரிக்கும் பொழுது தக்க சமயத்தில் காப்பாற்றி கர்மாவை வளரவிடாமல் செய்வது அவரின் பணிகளில் ஒன்று. 

ஆனால் முற்றிலும் உங்கள் கர்மாவை மாற்றி செயற்கையாக வழி ஏற்படுத்தமாட்டார். இயற்கையோட இணைந்து விதையை செடியாக்கி, மரமாக்கி, பூவிட செய்து காயாக்கி கனிந்து விட செய்வதே குருவின் நோக்கம்.