Sunday, October 5, 2008

கடவுளை காண்பது எப்படி?

காய்ந்த சருகாக தலைமுடி.... கண்களில் ஓர் தெய்வீக ஒளி. உடலில் குறைந்த ஆடையும் அவரை ஞான செல்வந்தராக காட்டியது.

வழக்கமாக தான் அமரும் ஆற்றங்கரை அரசமரத்தடியில் அமர்ந்து உதயமாகும் சூரியனை உற்று பார்த்துக் கொண்டிருந்தார் ஞானி.

“ஐயா குருவே ...எனக்கு வழிகாட்டுங்கள் ....” என கூறியவாரே...திடீரென ஓர் கரம் அவரின் கால்களை பற்றியது..அவரின் கால்களில் தனது தலையை வைத்து ஒருவன் கதறிகொண்டிருந்தான்.


சலனமற்ற ஓர் பாறை போன்று ஞானி உட்கார்ந்திருந்தார். அவரின் கண்கள் சூரியனை விட்டு அகலவில்லை.

“உங்களிடம் எத்தனையோ முறை கேட்டுவிட்டேன். எனக்கு கடவுளை காண வேண்டும். எனக்கு காட்டுங்கள்.... எனக்கு காட்டுங்கள்....” அவனது குரலில் ஓர் கடவுளை பார்க்க வேண்டும் என்ற உறுதி தெரிந்தது.

இன்று மட்டும் நடப்பதல்ல இந்த காட்சி... பல நாட்களாக தினம் இவன் வருவதும்..ஞானி சலனமற்று அமந்திருப்பதும் வாடிக்கையாகி விட்டது...

ஆனால் இன்று ....மெல்ல ஞானி அவனை நோக்கி திரும்பினார்.. அவன் கைகளை பற்றி அவனுடன் ஆற்றை நோக்கி நடந்தார்.

இருவரும் ஆற்றில் இறங்கினார்கள். இவனும் தனக்கு மார்பு வரை ஆற்றில் இறக்கி
ஞானி மந்திர உபதேசம் தருவார் என நினைத்தான்.

சற்றும் எதிர்பாராத விதமாக அவனின் கழுத்தை பிடித்து நீரில் அமிழ்த்தினார் ஞானி.

சுவாசம் திணறியது. திக்கு முக்காடினான்...

இறப்பின் எல்லையை உணர்ந்தான்..

சில நொடிகளுக்கு பிறகு அவனை விட்டார் ஞானி.


“யேஹ்....”
எனும் சப்தத்துடன் ஆற்றிலிருந்து வெளிவந்து பெரும் மூச்சு எடுத்தான்.

தன்னை திடப்படுத்திக் கொண்டு ஆற்றின் கரையை நோக்கி ஓடினான்.

திரும்பி பார்த்தால் ஞானி மெல்ல சலனமில்லமல் நடந்து வந்துகொண்டிருந்தார்.

அவனுக்கு கோபம் தலைக்கேறியது.“உங்களுக்கு கடவுளை காணும் வழி தெரியாவிட்டால் தெரியாது என சொல்ல வேண்டியது தானே? என்னை கொலை செய்ய வேண்டுமா? உங்களை நம்பி வந்ததுக்கு இதுதான் பலனா?”

தீர்க்கமாக பார்த்த ஞானியின் உதடுகள் அசைய துவங்கியது...”தினமும் கடவுளை காட்டு... கடவுளை காட்டு என கேட்டதால் உபயோகம் இல்லை. தண்ணீரில் மூழ்கியதும் வேறு சிந்தை இல்லாமல் சுவாசத்தை எடுக்கவேண்டும் என்பது மட்டுமே பிரதானமாக இருந்ததல்லவா? அது போல கடவுளை காணவேண்டும் என்பதை மட்டும் சிந்தையில் வைத்து முயற்சி செய். கடவுளை காணலாம்.” என்றார்

இவனக்கு புது சுவாசம் கிடைத்தது.

------------------------------ஓம்-----------------------------------------

கடவுளை காணவேண்டும் என பலர் கேட்டும் செவி சாய்க்காத பரமஹ்ம்சர் நரேனுக்கு செவிசாய்த்ததின் ரகசியம் தெரிந்ததா?

இந்த கருத்தை சிருங்கேரி மஹா சன்னிதானம் நவீன யுகத்திற்கு ஏற்றார்ப்போல் நகைச்சுவையுடன் கூறுகிறார். ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பொழுது வேறு சிந்தனை ஏற்படுமா? அதுபோல கடவுளை காண வேண்டும் எனும் ஒருமுக சிந்தனை நிச்சியம் அவரை வெளிப்பட வைக்கும் என்கிறார்.

நாமும் முயற்சி செய்வோமா?

5 comments:

கோவி.கண்ணன் said...

//தண்ணீரில் மூழ்கியதும் வேறு சிந்தை இல்லாமல் சுவாசத்தை எடுக்கவேண்டும் என்பது மட்டுமே பிரதானமாக இருந்ததல்லவா? அது போல கடவுளை காணவேண்டும் என்பதை மட்டும் சிந்தையில் வைத்து முயற்சி செய். கடவுளை காணலாம்.” என்றார்//

ஆக ஒரு தத்துவத்தைச் சொல்லி ஒருவாறு சீடனை சமாதானப்படுத்திவிட்டார் குரு. அதன் பிறகு அவன் ஏன் கேட்கப் போகிறான்

:)

இதையே வேறு மாதிரி சொல்ல வேண்டுமென்றால் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு கண்ணா காப்பாற்று காப்பாறு என்று திரவுபதி கதறிய போது செவி சாய்க்காதா கண்ணன், கண்ணா அபயம் என்று புடவையைப் பிடித்திருந்த கையை தலைக்கு மேல் சேவித்து கூப்பிட்ட போது தான் கண்ணன் காப்பாற்றினானாம். ஆக சரணாகதி என்ற நிலையில் தான் கடவுள் தோன்றுவதாக எல்லோருமே சொல்கிறார்கள்.

நீங்களும் மாறுபட்ட கதையில் அதைச் சொல்லி இருக்கிறீர்கள்.

நன்றாக இருக்கு !

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன் அவர்களே,

உங்கள் வரவுக்கு நன்றி.
மேலும் உங்கள் விரைவான எதிர்வினைக்கு(விரைவான கர்மா?) நன்றி.


சரணகதி எனும் தத்துவத்தை இக்கதை கூறவில்லை. ஒரு முகமாக மிகவும் தீக்கமாக செய்யும் முயற்சியை காட்டுகிறது.


மஹாபாரதத்தை நீங்கள் சுட்டிகாட்டியதால் நானும் அதை கையாள எண்ணுகிறேன். மஹாபாரதத்தில் இதே போன்று சம்பவம் உண்டு. அர்ஜுனன் கிளியை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை என்பானே அதற்கு ஒப்பானது.
அவ்வாறு இருந்ததால் தான் பரந்தாமனிடம் கீதையை உபதேசமாக பெற்றான்.

என்னை பொருத்தவரை சரணாகதி எனும் தத்துவம், மனம் சார்ந்தது. மனதை திருப்திடுத்த கூறும் ஏமாற்று வித்தை.

இறைவன் தன்னை விடுத்து வேறு இடத்தில் இருந்தால் தானே சரணடைய? இறைநிலை என்பது நமக்கு விரோதியா அல்ல சர்வதிகாரியா? சரண் அடைதல் என்பது மனோமயக்கமே.

எனது காலில் நானே விழமுடியுமா?
அது போன்றது தான் சரணாகதியும்.

Anonymous said...

நன்றாக இருக்கு !

river livejobs said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

river livejobs said...

அகத்தியர் – காப்பு
பூரணமாய் நிறைந்த சற்குருவின் மலர் பாதத்தை போற்றியும் , யானை முகத்தோனைப் போற்றியும், வைத்திய ரத்தினச் சுருக்கம் 360 என்ற இந்நூலில் செந்துரம், பற்பம், லேகியம், தைலம், கிருதம், எண்ணெய், கலிக்கம், மாத்திரை மற்றும் நாடி பார்க்கும் வித்தை சொல்லியுள்ளேன்
http://www.tamilkadal.com/?p=1151