ஜெயசிம்மன் வாழ்க்கையில் அனுபவிக்காத பணமோ அந்தஸ்தோ இல்லை. நீண்ட பரம்பரையாக செல்வந்தராக வாழந்த குடும்பவம் அவனுடையது.
ஆனால் தற்போதய அவனின் நிலை நேர்மாறாக அமைந்து விட்டது. ஒரு வேளை உணவுக்கே பிறரின் கையை எதிர்பார்க்கும் நிலை.வாரி கொடுத்த கையால் வாரி எடுத்து உண்ணும் நிலை ஏற்பட்டதற்கு ஒரே ஒரு காரணம் தான்.
அது - ரசவாதம்
அன்று ஒருநாள் தனது நண்பர்களுடன் உரையாடும் பொழுது ரசவாதம் எனும் விஷ(ய) வாதம் விவாதிக்கப்பட்டது. எந்த பொருளையும் தங்கமாக்கும் ரசவாத வித்தையை கற்றுக்கொள்ளும் ஆவல் அவனுக்கு கிளர்ந்தெழுந்தது. தனது செல்வ நிலையை ரசவாதம் செய்து பெருக்கி தனது பல சந்ததியினர் செல்வ நிலையுடன் வாழவைக்கும் எண்ணம் ஜெயசிம்மனுக்கு ஏற்பட்டது.
பலரை வரவழைத்தான், எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்தது. சித்தர் என அழைக்கப்படவர்களுக்கு முன் தலை வணங்கினான்- அவர்களை பூஜித்தான், ஆனால் நடந்தது என்னமோ வேறு. தனது சொத்துக்கள்,குடும்பம் மற்றும் கெளரவம் என அனைத்தையும் இழந்து மண் குடிசையில் வாழும் நிலை ஏற்பட்டது.
இனி வரும் சந்ததிகளுக்கு பொருள் சேர்க்க எண்ணியவனுக்கு தனது அடுத்த வேளை உணவுக்கு அலையும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
சிரமம்மான நிலையில் வாழும் அவனுக்கு வரண்ட நிலத்தில் சில துளி மழை பொழிவை போல இனிப்பான ஒர் செய்தி கேட்டான். அவனது ஊருக்கு பிரம்ம ஞானி வருகிறார் என கேள்விபட்டதும் அவனது மகிழ்ச்சிக்கு அளவில்லை.
பிரம்ம ஞானி தனது யோகசக்தியாலும் ஞான சக்தியாலும் பலரை வழிகாட்டுபவர். அவரை பற்றிய அற்புத செய்திகளை பல காலங்களாக கேட்டிருக்கிறான். அவர் தனது நிலைக்கு ஓர் மருந்தாக அமைவார் என எண்ணினான். அவரால் தனக்கு ரசவாத வித்தையை கற்றுக்கொடுக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வந்தது. அவரிடம் கற்றதும் தனது இழந்த செல்வத்தை மீட்டுகொள்ள முடியும் என நம்பினான் ஜெயசிம்மன்.
பிரம்மஞானியை சந்தித்து வணங்கி நின்றான். மெல்ல கண்களை திறந்த ஞானி அவனை பார்த்து கேட்டார்... ”எனது அன்பு ஜெயா ரசவாதம் பற்றி அறிய ஆவாலா?”
தனது மன நிலையை சொல்லமலே வெளிப்படுத்திய பிரம்ம ஞானியை கண்ணீர்மல்க பார்த்தான் ஜெயசிம்மன்.
ஒர் நீர் நிறைந்த பாத்திரத்தை கொண்டுவர சொன்னார் பிரம்மஞானி. குனிந்து நிலத்திலிருந்து சிறிது மண் எடுத்து அந்த பாத்திரத்தில் மெல்ல போட்டார் பிரம்ம ஞானி.
ஆச்சரியமான மாற்றம் நிகழ்ந்தது. மண் நீரை தொட்டு பாத்திரத்தின் அடியில் செல்லும் பொழுது தங்க துகள்களாக மாறி இருந்தது.
ஜெயசிம்மனுக்கு தனது கண்களை நம்ப முடியவில்லை. இவ்வளவு எளிதாக யாரும் ரசவாதம் செய்து பார்த்ததில்லை.
ஆச்சரியம் விலகாமல் ஆச்சாரியரிடம் கேட்டான்...”குருவே இது எப்படி சாத்தியம்? மண்னை நீரில் இட்டால் பொன்னாகுமா? எதாவது மந்திரம் சொல்ல வேண்டுமா?”
அவனை அர்த்தத்துடன் பார்த்த குரு கூறினார், “ஜெயா மண்ணை பாத்திரத்தில் இடும் பொழுது தங்கத்தின் மேல் பற்று வைக்கக்கூடாது. பற்றில்லாமல் இருந்தால் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து பொருளும் உனக்கு தங்கமே. இதுவே ஞான ரசவாதம்”
ஜெயசிம்மனின் உள்நிலை ரசவாதம் அடைந்தது.
---------------------ஓம்-------------------------------------
பற்று என்பது இல்லாமல் இரு என்கிறார்கள் சிலர் பற்றுடன் இரு என்கிறார்கள். எதை பின்பற்றுவது ? என பலர் கேட்பதுண்டு.
ஒன்றின் மேல் ஆசை படும்பொழுது பற்று ஏற்படுகிறது அதை தொடர்ந்து சிக்கல்களும் முளைக்கிறது.
ஒரு சாரார் ஆசைபடாதே என்கிறார்கள், ஒரு சாரர் அத்தனைக்கும் ஆசைபடு என்கிறார்கள் என பலர் குழப்பதில் இருக்கிறார்கள்.
நான் புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை.
கெளதம புத்தன் சொன்னான்- ஆசை அறுமின்.
வள்ளுவன் எழுதினான் - பற்றுக பற்றற்றான் பற்றினை.
ஆனால் இவை அனைத்தும் முடிவல்ல. இதை பின்’பற்றினாலும்’ சில பிரச்சனைகள் ஏற்படும்.
ஆசையில்லாமல் இருக்க வேண்டும் என்பதும் ஓர் ஆசைதானே?
திருமூலனே சரியாக சொன்னார்.
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படபட ஆய்வரும் துன்பங்கள்
ஆசைவிடவிட ஆனந்தம் ஆமே.
-திருமந்திரம் 2615
ஆசை அறுப்பீர்கள் தானே?
3 comments:
Very good story and teachings. Thank u.
நல்ல கதைதான், தங்கத்தின் மீது பற்றே இல்லை என்றால் அவன் ஏன் தங்கம் செய்ய முயற்சிக்கப் போகிறான். நன்றாக இருக்கு !
ஆசை என்றால் எல்லாம் ஆசை தானே என்கிறார்கள் பலர்.
உண்பது, உறங்குவது, வாழ்விற்குத் தேவையான பொருளீட்டுவது இதெல்லாம் ஆசையில் அடங்காது அது தேவைகள் என்றால் பலரும் புரிந்து கொள்வது இல்லை,
ஆசைப்படக் கூடாது என்று நினைப்பதே ஒரு ஆசை தானே என்று குதர்கம் பேசுகிறவர்கள் பலர் இருக்கின்றனர்.
:)
interesting.
Post a Comment