Friday, September 5, 2008

பிரம்ம ஞானத்தை தேடு ...


கங்கைக்கரை பகுதி.....மெல்லிய தேவலோக இசை போன்ற பாடல் காற்றில் கசிந்து வந்தது....


ஒளிரும் தேகமும் ஞானம் ததும்பும் முகமுடன் பிரம்ம ஞானி அமர்ந்திருந்தார்.
அவரின் ஆசனத்தை சுற்றி சிஷ்யர்களும் பொதுமக்களும் ஆனந்தமயமான நிலையில் இருந்தனர்.

இறைநாமத்தை சங்கீதமாக ஒரு குழு இசைத்துக் கொண்டிருந்தது.
இவை அனைத்தையும் மெளன சாட்சியாக ரசித்துக்கொண்டிருந்தாள் கங்கை.. தேவலோகத்திலிருக்கும் அனைவரும் தங்கள் இடத்தை விட்டு அங்கு வந்துவிடலாம் என எண்ணும் அளவிற்கு தெய்வீக சூழ்நிலையை அங்கு காண முடிந்தது.

தன்முன்
னே ஓர் உருவம் நிழலாடுவதை கண்ட ஞானகுரு கண்களை திறந்தார். எதிரில் பட்டுவேஷ்டி அணிந்து உடல் முழுவதும் சந்தனம் பூசிய நிலையில் ஒருவர் வணங்கி நின்றார். கைகளில் தங்கத்தால் ஆன தட்டும் அதில் வைரம் வைடூரியம் என விலைமதிக்க முடியாத பொருட்கள் நிறைந்து வழிந்தது..

பணக்கார தோரணை கொண்ட அந்த மனிதர் ஞானகுருவை பார்த்து..” உலக மக்களை உயர்நிலைக்கு அழைத்து செல்லும் குருவே...உங்களிடம் எத்தனையோ முறை பிரம்ம ஞானத்தை
உபதேசிக்க கேட்டேன் ஆனால் நீங்கள் மனம் இளகவில்லை. என்னிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத செல்வத்தை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். எனக்கு பிரம்ம ஞானத்தை உபதேசியுங்கள்...” என கேட்டார்.


ஞான குரு மெல்ல எழுந்து தனது காவி துணியில் அனைத்து செல்வங்களையும் போட சொன்னார். அவரின் காவித்துணியில் அனைத்தும் போடப்பட்டதும் அதை மூட்டையாக கட்டி, தலைக்கு
மேல் உயர்த்தி யாரும் எதிர்பாராத வண்ணம் கங்கையில் எறிந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பணக்காரர் கங்கை நீரில் பாய்ந்து அந்த மூட்டையை பிடிக்க நீந்தினார்.


கங்கையின் வேகத்திற்கு மூட்டையும் அவரும் அடித்துச்செல்லப்பட்டார்கள்.
அதுவரை கண்களை மூடி அமர்ந்த்திருந்த சிஷ்யர்கள் நீரில் செல்வந்தர் குதித்த சப்தம் கேட்டு கண்களை திறந்து பார்த்தனர்.

குழப்பம் கொண்ட சிஷ்யர்கள் குருவிடம் கேட்டார்கள்...”குருதேவா என்ன நடக்கிறது? அவர் கங்கையில் குதித்து என்ன தேடிக்கொண்டிருக்கிறார்..?”


தனது ஆசனத்தில் அமந்த ஞான குரு புன்புறுவலுடன் சிஷ்யர்களை பார்த்து கூறினார்...

”அவர் பிரம்ம ஞானத்தை தேடுகிறார்”


----------------------ஓம்------------------------------------------------


நம்மில் பலர் ஆன்மீக உயர்வு நிலையை பணத்தை வழங்குவதன் மூலம் பெறலாம் என எண்ணுகிறார்கள்.

என்னிடத்தில் பலரும் தீட்சை தாருங்கள் அதற்காக நன்கொடை தருகிறோம் என கேட்டதுண்டு.
அப்பொழுது ஞானகுரு கதை எனக்கு நினைவு வருவதுண்டு.

செல்வந்தருக்கு விலைமதிக்க முடியாத செல்வம் பிரம்ம ஞானத்திற்கு ஈடாக தெரிந்ததால்
குருவும் அது பணக்காரனின் பிரம்ம ஞானம் என குறிப்பிடுகிறார்.

கடவுளை பார்க்க கோவிலில் “சிறப்பு” நுழைவாயில் வழியாக செல்லுவதிலிந்து ஆரம்பிக்கிறது நமது ஆணவ செருக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

3 comments:

கோவி.கண்ணன் said...

//ஸ்வாமி ஓம்கார் Age: 108 //

வயது 108 என்று போட்டு இருக்கிறீர்கள், இது புரியவில்லை.

பிறவிகளின் கணக்கா ?

ஸ்வாமி ஓம்கார் said...

பேரன்புக்குரிய கோவி.கண்ணன் அவர்களுக்கு,

சென்ற பதிவில் நீங்கள் இட்ட மறுமொழி கண்டேன். எனது கருத்தை புரிந்துகொண்டமைக்கு நன்றி.

என்னுடன் அன்றாடம் நெருக்கமாக இருப்பவர்களுக்கு கூட எனது ஆன்மீக பாதையை பற்றி நான் விவரித்தது இல்லை.
எங்கள் அமைப்பின் இணைய தளத்தில் கூட என்னை பற்றி விவரம் இருக்காது.

ஒரு ஊருக்கு செல்லும் பொழுது வழி தெரியாமல் வழிப்போக்கனிடம் வழி கேட்கிறோம். அவன் வழிசொன்னதும் நாம் செல்லும் இடம் நோக்கி பயண படுவோமே தவிர அவன் எப்படி அந்த இடத்தை தெரிந்து கொண்டான் என அவனிடம் கேட்ப்பதில்லை.

ஆனால் தற்சமயம் சமூகம் தங்கள் வழிகாட்டியின் வாழ்க்கை பல அதிசயங்கள் நடந்திருக்க வேண்டும் என்றும்,
பிறக்கும் பொழுது அதிசயத்தக்க சம்பவங்கள் அவதாரத்தை குறித்தாகவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
தங்கள் வழியை தெரிந்து கொள்ளாமல் வழிகாட்டியின் வாழ்க்கை வரலாறு தங்களை கரைசேர்க்கும் என எண்ணும் இவர்களின் தன்மையை என்னவென்று சொல்ல?

இருந்த போதிலும் உங்கள் கேள்வி சென்ற மறுமொழியில் என்னை சிறிது கூறவைத்தது.

///வயது 108 என்று போட்டு இருக்கிறீர்கள், இது புரியவில்லை.

பிறவிகளின் கணக்கா ?////

தங்களை ஆன்மீகவாதிகள் என அடையாளம் காட்டிகொள்கிறவர்கள் கூறும் ஏமாற்று கணக்குதான் இந்த பிறவிகள்.
இந்த ஆன்மீகவா(வியா)திகள் மட்டும் தங்கள் சுயசரிதையை இந்த பிறப்பிலிருந்து தொடங்குவதே இல்லை.

மூவாயிரம் தமிழ் இறைவன் அருளால் உலகுக்கு அளித்தேன் என கூறிய திருமூலர் தனது பிறவிகளை பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா?
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி என்கிறார். அவர் முன் நான் 108 என கூறமுடியுமா?

பிரம்ம ஞானிகள் காலம் தேசத்தின் கட்டமைப்பிலிருந்து மீண்டவர்கள். அவர்களுக்கு பிறவிகள் இல்லை.
இருப்பு மட்டுமே உண்டு.

நமது யோக சாஸ்திரம் நமது உடலில் 108 புள்ளிகளில் ப்ராண சக்தி வெளிப்படுவதாக வரையறுக்கிறது. ஜபம் , யோகம் என எதை செய்தாலும் 108 எனும் எண்ணிக்கையில் செய்வதால் நமது ப்ராணம் வளப்படும்.
அதனால் ஜோதிட சாஸ்திரமும் 27 நட்சத்திரம் கொண்ட நட்சத்திர பாதையில் 4 பாதம் வீதம் 108 பகுதிகளாக மனத வாழ்க்கையை ஆராய்கிறது.

இந்த வலைப்பூவில் குறிப்பிட்ட 108 என்ற எண்ணிக்கையின் தன்மை வேறு. உண்மையில் 108 குருகதைகள் எழுத எனக்கு விருப்பம் உண்டு. அதன் அருளால் அது நடக்கும் என நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//பேரன்புக்குரிய கோவி.கண்ணன் அவர்களுக்கு,

என்னுடன் அன்றாடம் நெருக்கமாக இருப்பவர்களுக்கு கூட எனது ஆன்மீக பாதையை பற்றி நான் விவரித்தது இல்லை.
எங்கள் அமைப்பின் இணைய தளத்தில் கூட என்னை பற்றி விவரம் இருக்காது. //

திரு ஓம்கார்,

நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்கிறேன். இதற்கெல்லாம் விளம்பரமோ, விவரமோ தரமுடியாது, அப்படியே செய்தாலும், புரியாதவர்களின் ஏளனத்துக்கு ஆளாகி, முயற்சிக்கான எண்ணங்களில் தடை ஏற்படும். உங்கள் பாதை சரியானதாக நீங்கள் கருதும் போது அதிலேயே தொடர்ந்து பயணம் செய்வதற்கு யாருடைய அனுமதியும் தேவையற்றாது தானே

//ஒரு ஊருக்கு செல்லும் பொழுது வழி தெரியாமல் வழிப்போக்கனிடம் வழி கேட்கிறோம். அவன் வழிசொன்னதும் நாம் செல்லும் இடம் நோக்கி பயண படுவோமே தவிர அவன் எப்படி அந்த இடத்தை தெரிந்து கொண்டான் என அவனிடம் கேட்ப்பதில்லை.//

சரிதான். வழிப்போக்கன் அந்த வழியாக சென்று வந்திருக்கிறானா, அல்லது குருட்டாம் போக்கில் சொல்கிறானா என்று உணரும் திறன் வேண்டும், இல்லையென்றால் அந்த வழிப்போக்கனுக்கு பக்கத்திலேயே நின்று கொண்டு புதிதாக வழி தேடி வருபவர்களுக்கும் வழிப்போக்கனைப் போல் வழிகாட்டியாகத்தான் இருக்க முடியும். ஒவ்வொருவருக்கும் உள்ளுணர்வில் சரியான பாதையின் அடையாளம் தெரியும் என்றே நினைக்கிறேன்.

//ஆனால் தற்சமயம் சமூகம் தங்கள் வழிகாட்டியின் வாழ்க்கை பல அதிசயங்கள் நடந்திருக்க வேண்டும் என்றும்,
பிறக்கும் பொழுது அதிசயத்தக்க சம்பவங்கள் அவதாரத்தை குறித்தாகவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
தங்கள் வழியை தெரிந்து கொள்ளாமல் வழிகாட்டியின் வாழ்க்கை வரலாறு தங்களை கரைசேர்க்கும் என எண்ணும் இவர்களின் தன்மையை என்னவென்று சொல்ல?//

ஆன்மீகம் என்றாலே மேஜிக் மேஜிக் என்றே 99 விழுக்காட்டினர் நினைக்கின்றனர், வெறும் கையால் விபூதி வரவழைத்தால் தான் சக்தி படைத்தவர் என்றே கருதுகிறார்கள். நல்ல ஒரு ஆன்மிக வாதியின் அருகில் சென்றாலே மகிழ்வையும், அமைதியையும் உணர முடியும் என்பது பலருக்குத் தெரிவதில்லை, அலங்காராங்களுக்கு மயங்கிய உலகு, எதிலும் உடனடிப் பலன் பார்க்கவே நினைக்கும், அதைத்தான் நம்பும்.

//தங்களை ஆன்மீகவாதிகள் என அடையாளம் காட்டிகொள்கிறவர்கள் கூறும் ஏமாற்று கணக்குதான் இந்த பிறவிகள்.
இந்த ஆன்மீகவா(வியா)திகள் மட்டும் தங்கள் சுயசரிதையை இந்த பிறப்பிலிருந்து தொடங்குவதே இல்லை.//

நன்றாக சொல்லி இருக்கிறார்கள்,

//மூவாயிரம் தமிழ் இறைவன் அருளால் உலகுக்கு அளித்தேன் என கூறிய திருமூலர் தனது பிறவிகளை பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா?
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி என்கிறார். அவர் முன் நான் 108 என கூறமுடியுமா?

பிரம்ம ஞானிகள் காலம் தேசத்தின் கட்டமைப்பிலிருந்து மீண்டவர்கள். அவர்களுக்கு பிறவிகள் இல்லை.
இருப்பு மட்டுமே உண்டு.
//

சரிதான், எண்ணங்களைப் போலவே உடலின் அமைப்பும் விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டு தானே இருக்கிறது, பிறவிக் கணக்குகள் பிழைதான்

//
நமது யோக சாஸ்திரம் நமது உடலில் 108 புள்ளிகளில் ப்ராண சக்தி வெளிப்படுவதாக வரையறுக்கிறது. ஜபம் , யோகம் என எதை செய்தாலும் 108 எனும் எண்ணிக்கையில் செய்வதால் நமது ப்ராணம் வளப்படும்.
அதனால் ஜோதிட சாஸ்திரமும் 27 நட்சத்திரம் கொண்ட நட்சத்திர பாதையில் 4 பாதம் வீதம் 108 பகுதிகளாக மனத வாழ்க்கையை ஆராய்கிறது. //

நல்ல தகவல்கள் !

//இந்த வலைப்பூவில் குறிப்பிட்ட 108 என்ற எண்ணிக்கையின் தன்மை வேறு. உண்மையில் 108 குருகதைகள் எழுத எனக்கு விருப்பம் உண்டு. அதன் அருளால் அது நடக்கும் என நினைக்கிறேன்.//

உங்கள் எண்ணம் நன்று, நிறைவேறட்டம்.