Wednesday, December 2, 2009

மந்திர ஜபம்

காசி மாநகரம் தனது இயக்கத்தை நிறுத்த துவங்கிய அந்தி சாயும் நேரம்...

கங்கை நதியின் ஓட்டத்தை பார்த்தவாறு தனது ஆசனத்தை விரித்து அமர்ந்தான் அச்சுதன்.


கேதார் காட் என்று அழைக்கப்படும் கேதாரிநாத் சிவனின் கோவில் இருக்கும் படித்துறை அது. காவியும் வெள்ளை நிறமும் மாறி மாறி வண்ணம் பூசபட்ட படிகள் ஒரு வயதானவரின் வெற்றிலை வாயை ஞாபகப்படுத்தியது.

தனது மேலாடையை ஒழுங்கு படுத்தியவாறே சுற்றிலும் நோட்டம் விட்டான். கண்களுக்கு தெரிந்தவரை யாரும் இல்லை. ஒரு ஏகாந்தமான மாலை நேரத்தை எதிர்பாராமல் கிடைத்த மகிழ்ச்சியுடன் ஜபம் செய்ய ஆயுத்தமானான் அச்சுதன்.

தனது மேல் அங்கியின் உள்புறம் ஜப மாலையை வைத்து கண்களை மூடி ஜபம் செய்யத் துவங்கினான். கங்கையின் ஓட்டத்தால் ஏற்பட்ட சலசலப்பை தவிர வேறு எதுவும் அவனுக்கு கேட்கவில்லை.

சில மணித்துளிகள் கடந்தது....

“யே...மேரா மாலிக்........தூ.யீ மேரா சேவக்கு...” என கர்ண கொடூரமான குரல்வளத்தில்

ஒருவர் கத்துவதை கண்டு கண்விழித்தான் அச்சுதன்.

தன்னைவிட முற்றிலும் எதிர்தன்மையில் ஒருவர் அங்கே படியில் அமர்ந்து பெருங்குரலில் கத்திக்கொண்டிருந்தார்.

குளித்த தேகம், உடலில் ஆங்காங்கே வீபூதி பட்டை, தூய வெண்மையான ஆடை, உட்கார ஆசனம், ஜபமாலை என்ற நிலையில் அச்சுதன்.

தண்ணீரே பார்க்காத தேகம், உடல் முழுவதும் அழுக்கு, சில மணி மாலைகள் கழுத்தில், தலை முழுவதும் சடையுடன் எங்கோ பார்த்து பெருங்குரலில் கத்தும் அந்த நபர். அச்சுதனுக்கு ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. அவரை கோபமாக முறைத்தான்.

அவரோ இவனை மதிப்பதாக தெரியவில்லை. எதேதோ உளரிக்கொண்டே கைகளை மேலும் கீழும் அசைத்து காற்றில் ஏதோ வரைத்து கொண்டிருந்தார்.

இத்தனை வருடங்களாக தினமும் இங்கே மந்திரம் ஜபம் செய்கிறோம் ஒருவரும் இப்படி இம்சை செய்தது இல்லை. அவரை தவிர்த்துவிட்டு கண்களை மூடினால் அவரின் குரல் அதிக சப்தத்துடன் ஏற்றம் அடைவதை உணர்ந்தான்.

பைத்தியக்காரன் என்று பேசாமல் ஜபம் செய்யலாம் என்றால்,
வேண்டும் என்றே அவன்
குரல் எழுப்புவதை போல அச்சுதனன் உணர்ந்தான்.

தனது ஜபமாலைகளை கீழே வைத்துவிட்டு அவரின் அருகே சென்றான்.

“ஐயா... தயவு செய்து அமைதியாக இருக்கிறீர்களா... என்னால் ஜபம் செய்ய முடியவில்லை.”

அதுவரை எங்கோ பார்த்து உளரிக் கொண்டிருந்தவர் அச்சுதனை நோக்கி தலையை சாய்வாக திருப்பி “ ஜபமா.....அப்படினா?”

“மந்திரத்தை தொடர்ந்து கூறுவது”

“மந்திரமா? அப்படினா?”

அச்சுதனுக்கு அவர் விளையாடுவதாகவே பட்டது இருந்தாலும் ஆத்திரத்தை அடக்கியவாறு பதில் கூறினான்.

“இறைவனின் சக்தி கொண்ட வார்த்தை மந்திரம்”

“ஓஹோ...” என்றவாறே எழுந்து திரும்பி படித்துறையின் படிக்கட்டுகளில் ஏறத்துவங்கினார் அவர்...

அவர் நடந்து செல்லுவதை நிம்மதிப்பெருமூச்சுடன் பார்த்தவாறு நின்றேன் அச்சுதன்.

இரண்டு படிகள் ஏறியவுடன் திரும்பி....

“மந்திரத்தில் மட்டும்தான் இறைவனின் சக்தி உண்டா? நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இறைவனின் சக்தியால்தானே? உன் சக்தி இதில் எதுவும் இல்லையே?” என்றார் அவர்.

கங்கை ஒரு ஷணம் நின்று பின் சலசலப்புடன் ஓடுவதாக பட்டது அச்சுதனுக்கு.

-------------------------------ஓம்--------------------------------------------

மந்திர ஜபம் என்பது இறைவனுக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்லும் ஒரு வாகனம். ஆனால் நான் மந்திர ஜபம் செய்கிறேன் பிறர் செய்வதில்லை என்ற எண்ணமும், மந்திரம் மட்டுமே சக்தி வாய்ந்தது என்ற எண்ணமும் ஆணவத்தை தூண்டிவிடும். அப்புறம் எங்கே இறைவனை தரிசிப்பது?

முதலில் நாம் உச்சரிக்கும் அனைத்து வார்த்தையிலும் சக்தியை உணர்ந்தால்தான் மந்திரத்தை உணர முடியும். நம் ஒவ்வொரு வார்த்தையில் சக்தியை உணர நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

விழிப்புணர்வற்ற நிலையில் மந்திரமும் வெறும் வார்த்தைதான். விழிப்புற்றவனுக்கு ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம் தான்.

13 comments:

Jawahar said...

சுவாமி, பைத்தியத்துக்கும் ஞானிக்கும் இம்மிதான் வேறுபாடு என்கிற தத்துவத்தைக் கூறுகிறதா இந்தக் கதை? சிந்தனையைத் தூண்டும் கதை.

http://kgjawarlal.wordpress.com

ஸ்வாமி ஓம்கார் said...

நன்றி ஜவஹர்.

உண்மையில் காந்தத்தின் இரு துருவமும் ஒன்று போல இருக்கும் ஆனால் அவை ஒன்றல்ல.. அது போல ஞானியும், மனநிலை பிரள்ந்தவர்களும்.

இக்கதை மந்திரத்தில் மட்டும் தான் இறைசக்தி இருக்கிறது என்று நம்மும் ஆணவர்களை குறிக்கிறது.

பிரம்மம் நாத ரூபம். அனைத்து நாதமும் பிரம்மம் தானே?

Raja said...

சுவாமி பொட்டில் அறைந்தார் போல் உள்ளது கதை

Mahesh said...

/விழிப்புணர்வற்ற நிலையில் மந்திரமும் வெறும் வார்த்தைதான். விழிப்புற்றவனுக்கு ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம் தான்.//

"நான்" தவிர்த்து....


அருமை.

Siva Sottallu said...

// விழிப்புணர்வற்ற நிலையில் மந்திரமும் வெறும் வார்த்தைதான். விழிப்புற்றவனுக்கு ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம் தான்.
//

Simply Superb Swamy. Thanks much.

ஆ.ஞானசேகரன் said...

//முதலில் நாம் உச்சரிக்கும் அனைத்து வார்த்தையிலும் சக்தியை உணர்ந்தால்தான் மந்திரத்தை உணர முடியும். நம் ஒவ்வொரு வார்த்தையில் சக்தியை உணர நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.//

மிக நன்று

தேவன் said...

ஐயா,

மும்மலத்தில் ஒன்றான ஆணவத்தை பற்றி நல்ல விளக்கம், நன்று.!

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல கருத்து , இனி மந்திரம் சொல்லும் பொழுது ( குரங்கை நினைக்காதே ....) இந்த கதை நினைவுக்கு வந்தால் தன்யானாவேன் .

sarul said...

//. அது போல ஞானியும், மனநிலை பிரள்ந்தவர்களும்.//
உண்மை தான் , என் அனுபவத்தில் பல ஞானிகளை இப்படித் தவற விட்டிருக்கிறேன்.

hayyram said...

nice pics of ganga

regards
ram

www.hayyram.blogspot.com

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

அகோரி said...

“மந்திரத்தில் மட்டும்தான் இறைவனின் சக்தி உண்டா? நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இறைவனின் சக்தியால்தானே? உன் சக்தி இதில் எதுவும் இல்லையே?”
விளக்கம், அருமை குருஜி ...

Naveen said...

doesnt have any words swami...