கன்னகோல் கண்ணுசாமியை அனைவருக்கும் தெரியும். அவனின் முக்கிய தொழிலே திருடுவதுதான்.
கண்ணுசாமியின் தொல்லை தாங்க முடியாமல் ஊர் பஞ்சாயத்து அவனுக்கு தண்டனை கொடுத்து தலை மொட்டை அடிக்கப்பட்டு ஊரைவிட்டே ஒதுக்கி வைத்தார்கள்.
இதனால் சரிவர தொழிலை செய்ய முடியாத காரணத்தால் வறுமையில் வாடினான் கண்ணுசாமி. இந்த ஊரில் இருந்தால் வறுமையில் வாடி இறந்து போக நேரிடும் என வேறு ஊருக்கு சென்று தொழில் செய்ய எண்ணினான்.
கால்நடையாக பல நாட்கள் நடந்து ஒரு ஊரை அடைந்தான். பசி அவனை பாடாய் படுத்தியது. சூரியன் சாயும் மாலை நேரத்தில் உணவுக்காக தேடுதலை தொடங்கினான்.
பசி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் அலைந்தான். அங்கு தோட்டம் ஒன்று இருப்பதை கண்டான். பூசணிக்காய்கள் விளைவிக்கப்பட்டு பெரிய தோட்டமாக காட்சியளித்தது. ஒரு பூசணி பழத்தை உண்டால் தனது பசி அடங்கும் என நினைத்த கண்ணுசாமி மெல்ல பூனை போல தோட்டத்தில் இறங்கினான். நல்ல பழுத்த பூசணிப்பழத்தை பறிக்க முற்படும் பொழுது திடீரென காவல்காரன் யாரோ தோட்டத்தில் நடமாடுகிறார் என பார்த்துவிட்டான்.
காவல்காரனின் கூச்சல் கேட்டு ஆட்கள் ஓடிவர கண்ணுசாமிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.கரும்பு அல்லது வாழை தோட்டம் என்றால் மறைந்துகொள்ளலாம். பூசணி தோட்டத்தில் மறைந்து கொள்ள இடமா இருக்கும்?
உடனடியாக அவனின் தொழில் புத்தி வேலை செய்ய துவங்கியது. தனது உடைகளை அவிழ்த்து தோட்டத்துக்கு வெளியே வீசி எறிந்தான். உடல் முழுவதும் பூசணிக்காய்கள் மேல் இருக்கும் சாம்பலை எடுத்து பூசிக்கொண்டான்.
காவலாளியுடன் ஓடிவந்த மக்கள் மழிக்கப்பட்ட தலையும், மெலிந்த தேகமும் , கோவணமும் மற்றும் திருநீர் பூசப்பட்ட உடலுடன் ஒரு சிவயோகி நின்று இருப்பதாய் கண்டனர்.
அனைவரும் அவரின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி வேண்டினர்.
இனி கன்னகோல் கண்ணுசாமியை நாம் சிவயோகி என்றே அழைப்போம்.
சிவயோகியை அழைத்துவந்து அந்த தோட்டத்தின் ஒரு மூலையில் குடிசை அமைத்து தங்க வைத்தனர். உணவு வழங்கினார். சிவயோகிக்கு மகிழ்ச்சி தங்கவில்லை. பசியால் பூசணியை சாப்பிட போன சிவயோகிக்கு இப்போலோது விதவிதமான உணவுகள் கிடைக்க துவங்கியது. தான் வாய் திறந்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் மௌனமாக இருந்தார் சிவயோகி. யாரிடமும் பேசுவதில்லை.
சிவயோகி அந்த ஊருக்கு வந்திருப்பது காட்டுத்தீயாக பரவியது. கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து தரிசிக்க துவங்கினார்.
ஆன்மீக தேடல் உள்ள ஒரு வாலிபன் சிவயோகியை காண வந்தான். அவர் முன் அமார்ந்து பல ஆன்மீக கேள்விகளை கேட்டான். ஒன்றுக்கும் சிவயோகி பதில் சொல்லவில்லை. மௌனமாக அவனை பார்த்துகொண்டிருந்தார்.
இளைஞனும் விடுவதாக இல்லை. சிவயோகியின் கால்களை பிடித்து "ஐயனே ஞானம் அடைய என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள். அதுவரை உங்கள் காலடியை விடமாட்டேன்" என்றான்.
சிவயோகிக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை. வாலிபன் போக விட்டால் இன்று கிடைக்கும் உணவும் காணிக்கைகளும் பாதிக்கப்படுமே என எண்ணினார்.
பலர் கூடி இருக்க இவன் நம்மை சிக்கலில் மாட்டிவிடுவான் என நினைத்து...அவனை மெல்ல கைகளால் தூக்கினார்.
வாய்திறந்தால் தனது ஞானம் தெரிந்துவிடும் என சைகையில் தனது கதையை சொல்ல துவங்கினார். அங்கும் இங்கும் அலைவது போலவும் , பூசணிக்காயை குறிக்க பந்து போல கண்பித்து , உடலில் அதை பூசினதாக சைகை செய்தார்.
அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வாலிபனுக்கு கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. "குருவே...அருமையான உபதேசம். அலைந்து திரியாதே , ஜகம் அனைத்தும் உனக்கு உள்ளேயே இருக்கிறது என அருமையான உபதேசத்தை எனக்கு அளித்தீர்கள், எனது ஞானத்தின் சாவி உங்களிடம் கிடைத்தது" என வாலிபன் கூறினான்.
சிவயோகியை முன்று முறை சுற்றி விழுந்து வணங்கி விடைபெற்றான். தனக்குள்ளே இருக்கும் விஷயத்தை தேடி தேடி ஒரு நாள் ஞானம் அடைந்தான் வாலிபன்.
----------------------ஓம்-----------------------------------------
இந்த கதையில் திருடன் குருவாக இருப்பதாய் கண்டு இது சாத்தியமா என எண்ணலாம். வால்மிகி கூட ஒரு கொள்ளைக்கரனாக இருந்தார், பிறகு ராம நாமத்தால் உலகின் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார் அல்லவா?
திருமூலர் தனது மந்திரத்தில் "கள்ள புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே" என்கிறார்.
நமது ஆன்மாவிற்கு தெரியாமல் கள்ளத்தனமாக செயல்படும் புலன்களை நல்வழிப்படுத்தினால் ஆன்மீக உயர்வு பெறலாம்.
குரு எப்படிப்பட்டவர் , குரு ஞானம் அடைந்தவரா என்பது முக்கியமில்லை,
நாம் அவர் மூலம் ஞானம் பெறுவோமா என்பது தான் முக்கியம்.
2 comments:
//குரு எப்படிப்பட்டவர் , குரு ஞானம் அடைந்தவரா என்பது முக்கியமில்லை,
நாம் அவர் மூலம் ஞானம் பெறுவோமா என்பது தான் முக்கியம்.//
இது இதுதாங்க. சின்ன குழந்தையிடம் இருந்து கூட ஞானம் கிடைக்கலாம் இல்லையா?
அருமைங்க.
அன்பு சகோதரர் நந்து....
உங்கள் வரவுக்கு நன்றி.
சின்ன குழந்தையிடம் என்று நீங்கள் சொன்னதற்கு ஆதரவு. “அவர்களிடம் இருந்து கூட” என சொல்லுவதற்கு எதிர்ப்பை தெரிவிக்கிறேன். அவர்கள் தான் முழுமையான ஞான நிலையில் இருக்கிறார்கள். ஆணவம் , கர்மம்,மாயை எனும் மூன்று மலத்திலிருந்து விடுபட்டால் ஞானமாம். இம்மூன்றும் அவர்களுக்கு இல்லையே?
அதனால் தான் கிருஸ்து கூட குழந்தையானவர்கள் வாருங்கள் என்னுடன் என்கிறார்.
நந்த கோபாலான்,முருகன், குழந்தை ஏசு என கடவுளை குழந்தையாக வணங்கவும் இதுதான் காரணம்.
உங்கள் குருவுடன் எடுத்த புகைப்படம் நன்றாக இருக்கிறது.
நன்றி..
Post a Comment